எட்டாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 3, 4

எட்டாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 3, 4

நந்தகோபனின் இன்னுயிராக


பாடல் - 3

எடுத்த பேராளன் நந்தகோபன்தன் இன்னுயிர்ச்
                            சிறுவனே, அசோதைக்கு
அடுத்த பேரின்பக் குல இளம்களிறே, அடியனேன்
                           பெரிய அம்மானே,
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக் கை
                           உகிர் ஆண்ட எம் கடலே,
அடுத்தது ஓர் உருவாய் இன்று நீ வாராய்,
                          எங்ஙனம் தேறுவர் உமரே.

உன்னை எடுத்துக்கொண்ட பேராளனான நந்தகோபனின் இன்னுயிராகத் திகழும் சிறுவனே, அசோதையிடம் வந்துசேர்ந்த பேரின்ப வடிவே, ஆயர் குலத்தின் யானைக்கன்றே, என்னுடைய பெரிய அம்மானே, சினம்கொண்டு போர்செய்யும் இரணியனின் உடலைக் கை நகத்தால் இரண்டாகப் பிளந்த எங்கள் கடலே, நீ ஒரு வடிவத்தோடு வந்து எங்களுக்குக் காட்சி தரவில்லையே, அப்படி வராவிட்டால் உன் பக்தர்கள் உன்னை எப்படிக் கண்டு தெளிவார்கள்?

***

பாடல் - 4

உமர் உகந்து உகந்த உருவம் நின் உருவம் ஆகி,
                         உன் தனக்கு அன்பர் ஆனார்
அவர் உகந்து அமர்ந்த செய்கை உன் மாயை,
                         அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன்
அமர் அது பண்ணி அகல் இடம் புடைசூழ்
                        அடுபடை அவித்த அம்மானே,
அமரர்தம் அமுதே, அசுரர்கள் நஞ்சே, என்னுடை
                        ஆர் உயிரேயோ.

பெரிய போரைச் செய்து, அகன்ற உலகத்திலே இருபக்கங்களிலும் சூழ்ந்துவந்த கௌரவர் படைகளை அழித்த அம்மானே, அமரர்களின் அமுதே, அசுரர்களின் நஞ்சே, என் ஆருயிரே, உன் அன்பர்கள் மகிழுகின்ற உருவமே உன் உருவம், உன் அன்பர்கள் மகிழுகின்ற செய்கையே உன் மாயை, இப்படி அவர்களுக்கு ஏற்றவற்றை நீ செய்கையில், அறிவில்லாதவன், தீவினை செய்தவனான நான் அவற்றைப் புரிந்துகொள்ளாமல் சந்தேகிக்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com