குடும்பமே கோயில்

குடும்பமே கோயில் - எஸ்.கே.டோக்ரா; பக்.96; ரூ.45; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17; )044-24342926/ 24346082. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவரான நூலாசிரியர் எஸ்.கே.டோக்ரா, காவல் துறை அதிகாரியாகத் தமிழகத்துக்

குடும்பமே கோயில் - எஸ்.கே.டோக்ரா; பக்.96; ரூ.45; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17; )044-24342926/ 24346082.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவரான நூலாசிரியர் எஸ்.கே.டோக்ரா, காவல் துறை அதிகாரியாகத் தமிழகத்துக்கு வந்து, தமிழைக் கற்று தமிழில், "குடும்பமே கோயில்' என்ற பெயரில் நூல் எழுதியுள்ளார். தமிழர்கள், ஆங்கிலத்தில் பேசுவதையே பெருமையாகக் கருதும் இக்காலத்தில் தமிழில் புத்தகம் எழுதிய டோக்ரா பாராட்டுக்குரியவர். பெற்றோர்கள் எவ்வாறு பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்; குழந்தைகளை எப்படி நடத்த வேண்டும் என்பதையும், பெற்றோர்கள், குழந்தைகள் முன்னிலையில் சண்டையிடுவது பிஞ்சுக் குழந்தைகளின் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் கவிதை வடிவில் மிக அழகாகக் கூறியுள்ளார். நமது முன்னோர்கள், ஆயிரமாயிரம் ஆண்டுகளாகக் கட்டிக்காத்து வந்த குடும்ப அமைப்பைப் பாதுகாக்க வேண்டும் என்ற சமுதாயப் பொறுப்பை இந்நூலில் அழுத்தமாகச் சுட்டிக் காட்டியுள்ளார். குடும்பம் என்றாலே பிரச்சனை இருக்கத்தானே செய்யும்! அப்படிக் குடும்பத்துடன் வாழும் அனைவருடைய இல்லங்களிலும் அவசியம் இருக்க வேண்டிய நூல்.

மான்மேயும் காடு - தேனி சீருடையான்; பக்.168; ரூ.100; அகரம்; மனை எண்.1, நிர்மலாநகர், தஞ்சாவூர்-613007.

18 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. மனிதர்களின் கோபத்தை, மகிழ்ச்சியை, ஆதங்கத்தை, ஏமாற்றத்தை என ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு உணர்வை வெளிப்படுத்துகிறது. கிராமங்களில் இன்றும் காணப்படும் தீண்டாமைக் கொடுமையை, "சமதை' கதையும், மூடநம்பிக்கையை, "மாலுமி' கதையும் கண்முன் நிறுத்துகின்றன.

ஏழைகளின் உழைப்பை வட்டியாகச் சுரண்டி ஏமாற்றிப் பிழைக்கும் மனிதர்களின் கோரமுகத்தை அம்பலப்படுத்துகிறது "அழுவதை நிறுத்தியவன்' சிறுகதை. என்னதான் வறுமை துரத்தினாலும் அதற்கு முடிவு தற்கொலை அன்று; வாழ்ந்து பார்ப்பதே என தீர்வைச் சொல்கிறது "சனம்புக் கீரை' சிறுகதை.

காட்டில் வாழும் மானின் மனஓட்டத்தை வித்தியாசமாகச் சொல்லும் "மான்மேயும் காடு' சிறுகதையின் தலைப்பையே புத்தகத்தின் தலைப்பாக ஆக்கியுள்ளார் நூலாசிரியர். வெகுஜன இதழ்களில் சிறுகதைகள் குறைந்துவரும் சூழலில், இதுபோன்ற சிறுகதை தொகுப்புகள் அதிகம் வெளிவர வேண்டியது அவசியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com