காலனிய கால மதப்பிரச்சாரத்தில் கிருத்துவர்கள் - இந்துக்கள்

காலனிய கால மதப்பிரச்சாரத்தில் கிருத்துவர்கள் - இந்துக்கள் - தொகுப்பு : மு.வையாபுரி; பக். 156; ரூ.100; அலைகள் வெளியீட்டகம், சென்னை-24; )044- 24815474. பிரிட்டிஷ் காலனி ஆதிக்க இந்தியாவில், மதம் பரப்ப வந
காலனிய கால மதப்பிரச்சாரத்தில் கிருத்துவர்கள் - இந்துக்கள்

காலனிய கால மதப்பிரச்சாரத்தில் கிருத்துவர்கள் - இந்துக்கள் - தொகுப்பு : மு.வையாபுரி; பக். 156; ரூ.100; அலைகள் வெளியீட்டகம், சென்னை-24; )044- 24815474.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்க இந்தியாவில், மதம் பரப்ப வந்த பாதிரிகள் உள்ளூர் மொழியையும் அச்சு இயந்திரத்தையும் பயன்படுத்தி பிரசாரம் செய்தார்கள். அதன் வளர்ச்சியால் சமூக அமைதி பாதிக்கப்பட்ட நிலையில், நிம்மதி இழந்த சாதி இந்துக்கள், அந்தப் பிரசாரத்தை எதிர்கொள்ள அதே அச்சு இயந்திரத்தின் உதவியை நாடினார்கள். அதன் மூலம் இதழ்கள் பெருகின. இத்தகைய வரலாற்றுத் தகவல்களுடன் இந்த நூலில் இரு பகுதிகளாக 37 அரிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. முதல்பகுதி, இயேசு ஒருவரே ரட்சகர் என்று சொல்வதை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல், இந்துக்கள், இந்துக் கடவுளர், சமூகப் பழக்கவழக்கங்கள், சமயக் கோட்பாடு, வழிபாடுகள் முதலானவற்றைக் கேலி செய்து, இழித்தும் பழித்தும் கூறுவதை மதப் பிரசாரமாகக் கொண்ட "உதயதாரகை' இதழின் 19 கட்டுரைகளின் தொகுப்பு. இரண்டாம் பகுதி, இந்தப் பிரசாரத்துக்கு பதிலடி தரும் விதமாக, பாதிரிகளின் செயலை விமர்சித்தும் தாக்கியும் கூறும் "பிரம்மவித்யா' இதழின் 18 கட்டுரைகளின் தொகுப்பு.

1886ஆம் வருடத்தில் வெளியான கட்டுரைகள் என்பதால், அதே பழைய தமிழ் நடையில் கட்டுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. கிறித்துவன் - தம்பிரான் சம்பாஷணை, இந்துமத வேடக் குறைவு, இந்துமத வீண்பத்தி, கிரகசாரம் முதலான எண்ணற்ற சாஸ்திரங்கள் மதியீனமும் பொய்யுமாயிருக்குது என்பதைக் காட்டும்படிக்கு ஒரு உபதேசியும் ஊரவர்களில் ஒருவனும் பேசிக்கொள்ளும் பாவனையாகச் செய்யப்பட்ட சமவாதம்- இத்தகைய தலைப்புகளில் இந்துக்களில் ஒருவரே இந்துசமயத்தைத் தூற்றிப் பேசி கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வதாகக் கூறப்பட, அதற்கு மறுத்துரை தரும் விதமாக கடுஞ் சொற்பிரயோகத்துடன் பெண்கள் அன்னியர் இனஞ் சேர்ந்து கல்வி பயிலுவதால் உண்டாகும் அனர்த்தம், பாதிரிமார் பாடசாலையில் பெண்களை அனுப்புவதால் நேரிடும் அனர்த்தம், சிவனுந் தேவனா என்னும் தீய நாவுக்கு ஆப்பு, இந்துவுக்கும் பாதிரிக்கும் சம்பாஷணை, கிறிஸ்து மதத்தால் இந்து தேசத்திற்குக் கெடுதி- ஆகிய கட்டுரைகளால் பதிலடி என இந்தத் தொகுப்பு கால நிலையையும் சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியையும் எடுத்துரைக்கிறது. மேலும், சமூக அமைதி கெடுவதற்கு மற்ற மதத்தாரை இழித்துரைப்பதே காரணமாயிருத்தல் இந்தத் தொகுப்பைப் படிக்குங்கால் உணரமுடிகிறது. வரலாற்றையும் மத வளர்ச்சி குறித்தும் அறிந்துகொள்ள விழையும் வாசகர்க்கு அருமையான செய்திக் கடல் இந்தத் தொகுப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com