தமிழில் பில்கணீயம் - மணிக்கொடி எழுத்தாளர்கள் - பாரதிதாசன்

தமிழில் பில்கணீயம் - மணிக்கொடி எழுத்தாளர்கள் - பாரதிதாசன்; தொகுப்பும் பதிப்பும்: ய.மணிகண்டன்; பக்.104; ரூ80; சந்தியா பதிப்பகம், சென்னை-83; )044 - 2489 6979.

தமிழில் பில்கணீயம் - மணிக்கொடி எழுத்தாளர்கள் - பாரதிதாசன்; தொகுப்பும் பதிப்பும்: ய.மணிகண்டன்; பக்.104; ரூ80; சந்தியா பதிப்பகம், சென்னை-83; )044 - 2489 6979.

வடமொழியிலிருந்து பல காவியங்கள், கதைகள் பல தமிழிலும் பிற இந்திய மொழிகளிலும் வழங்குகின்றன. அவ்வாறு வழங்கும் இலக்கியப் படைப்புகளுள் ஒன்றுதான் "பில்கணீயம்'. இச்சொல் பரவலாக அறியப்பட்டதற்குக் காரணம் பாரதிதாசன்தான் என்பர். "பில்ஹணீயம்' என்ற வடமொழி நூலைத் தழுவி எழுதப்பட்ட அவரது குறுங்காவியம்தான் "புரட்சிக் கவி'. ஆனால், இக்கதை பாரதிதாசனுக்கு முன்னும் பின்னும் பல இலக்கிய வடிவங்களில் வெளிவந்துள்ளன.

""19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் வடமொழியிலிருந்து பில்கணீயக் கதை தமிழுக்கு வந்துவிட்டது. 1875-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் புலோலி மகாவித்துவான் வ.கணபதிப் பிள்ளையால் பில்கணீயம் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. வடமொழியும், ஆங்கிலமும் பாரதிதாசனுக்குத் தெரியாததால், ந.பிச்சமூர்த்தியின் "பில்ஹணன்' என்ற ஓரங்க நாடகமே (மணிக்கொடியில் 1935-இல் வெளியானது) பாரதிதாசனுக்குப் பில்கணீயக் கதையை அறிமுகம் செய்திருக்க வேண்டும்'' என்கிறார் நூலாசிரியர்.

ஒரே கதைக்கரு தமிழின் மூன்று முதன்மைப் படைப்பாளிகளான ந.பிச்சமூர்த்தி (பில்ஹணன் - ஓரங்கநாடகம்), பாரதிதாசன் (புரட்சிக்கவி-குறுங்காவியம்), கு.ப.ரா. (திரைக்குப் பின்-சிறுகதை) மூவரால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. அம்மூவரின் படைப்புகளும் இதில் ஒரு சேர இடம்பெற்றுள்ளன.

பிற்சேர்க்கையாக, யாழ்ப்பாணம் கணபதிப் பிள்ளை வடமொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்த பில்ஹணீயம், ஏ.எஸ்.ஏ.சாமியின் "பில்கணன்' (நாடகம்-1945) திருச்சி வானொலியில் நாடகத்திற்குப் புதுமைப்பித்தன் எழுதிய முன்னுரையையும் தந்திருக்கிறார்.

பில்கணீயம் கதைச்சுருக்கம் இதுதான்: தன் மகளுக்கு யாப்பிலக்கணம் கற்றுத்தர விரும்புகிறான் அரசன். இளமையும் அழகும் நிரம்பிய கவிஞனான பில்ஹணனை நியமித்தால் விபரீதம் நிகழும் என்று எண்ணி, கவிஞனிடம் இளவரசிக்குத் தொழுநோய் என்றும், இளவரசியிடம் கவிஞன் பார்வையற்றவன் என்றும் கூறி, திரைமறைவில் பாடம் எடுக்குமாறு பணிக்கிறான். இவ்விருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்தார்களா? காதல் கொண்டார்களா? திருமணம் முடித்தார்களா? என்பதுதான் மீதி கதை. இக்கதையின் கொலைக்களக் காட்சியைப் பாரதிதாசன் எப்படி மாற்றியமைத்துள்ளார் என்பதில்தான் "புரட்சிக்கவி'யின் சிறப்பு அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com