சிலம்புச்சாலை

சிலம்புச்சாலை - சுப்ர.பாலன்; பக்.156; ரூ.100; வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17.

சிலம்புச்சாலை - சுப்ர.பாலன்; பக்.156; ரூ.100; வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17.

கல்கி வார இதழில் தொடராக வெளிவந்ததின் நூல் வடிவம். தமிழ் இலக்கியத்தின் புதுமைக் காவியமான சிலப்பதிகாரத்தை, புதிய ஆய்வுச் சாலையில் எடுத்துச்சென்றிருக்கிறார் சுப்ர.பாலன்.

புகார் நகரை பூம்புகாராகக் காணும் நூலாசிரியர், கோவலன்,கண்ணகி கால அந்தப் புராதன நகரம், இப்போது களையிழந்து போனதை கனத்த மனதுடன் விளக்குகிறார்.

கோவலன், கண்ணகி தடம் பதித்த மற்ற இடங்களான ஸ்ரீரங்கம், உறையூர், கொடும்பாளூர் என ஒவ்வோர் ஊரையும் விவரிக்கும் ஆசிரியர், அந்தந்த இடங்களின் புராண கால, வரலாற்றுக் கால நிலையையும் கோடிட்டுக் காட்டுகிறார்.

துவரங்குறிச்சி, பொன்னமராவதி ஆகிய இடங்களில் தான் கேட்டறிந்த விஷயங்களை நூலின் தகவல்களுடன் பொருத்திப் பார்த்து விவரித்திருப்பது படிப்போரை ஆச்சரியப்படுத்துகிறது.

மதுரை நகரின் பழங்கால, ஆங்கிலேயர் கால இடங்களைச் சுட்டும் நூலாசிரியர், கண்ணகிக்கு அடைக்கலம் கொடுத்த மாதரி வாழ்ந்த இடம் சிம்மக்கல் அருகேயுள்ள செல்லத்தம்மன் கோயிலையும், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர்திருக்கோயில் கம்பத்தடி மண்டபம் அருகேயுள்ள வெண்ணைக்காளியை பற்றி குறிப்பிடும் தகவல்கள் வியக்க வைக்கின்றன. மதுரையில் கோவலன்நகர், மாடக்குளம், பழங்காநத்தம் கோதண்டராமர் கோயில் உள்ளிட்ட இடங்கள் குறித்த நூலாசிரியரின் ஆய்வு நோக்கிலான கருத்துகள் புதிய ஆய்வுக்கு வழிகோலும் என்பதில் சந்தேகமில்லை.

சிலம்புச்சாலையில் வரும் நாகமலை குறித்த செய்தி அதைப் பற்றி தொடர் ஆய்வுக்கான அவசியத்தை விளக்குவதாகும். மொத்தத்தில் சிலம்புச்சாலை நூலானது ஏதோ காப்பிய இடங்களின் இன்றைய நிலையை அறியும் முயற்சியாக மட்டுமின்றி, அறிவியல் பூர்வமாக, பூம்புகார் முதல் கண்ணகி கோட்டம் வரையிலான வரலாற்றை உள்ளடக்கியதாகவும் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com