சரோஜாதேவி

சரோஜாதேவி

சரோஜாதேவி - பா. தீனதயாளன்; பக்.136; ரூ.100; சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை -17; )044 2434 2771.
நடிகை சரோஜாதேவி "தங்கமலை ரகசியம்' படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமானதிலிருந்து "ஆதவன்' படத்தில் நாயகனின் அம்மாவாக நடித்தது வரை (கிட்டத்தட்ட தொண்ணூறு படங்கள்) எல்லாப் படங்களைப் பற்றியும் சிறு சிறு செய்திகளாக பல சுவையான தகவல்கள் படங்களுடன் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. சரோஜாதேவி நூறு படங்களுக்குள்தான் நடித்திருக்கிறார் என்றாலும், அவற்றுள் எம்.ஜி.ஆருடன் 26, சிவாஜியுடன் 20, ஜெமினி கணேசனுடன் 20 என்பது வேறெந்த நாயகியும் கனவிலும் எண்ணிப் பார்க்க முடியாத சாதனை.
ஒரு தலைமுறை ரசிகர்களின் "கனவுக் கன்னி"யாக விளங்கிய சரோஜாதேவி ஆரம்பத்தில் திரைப்படத்துறையில் பின்னணிப் பாடகியாவதற்குத்தான் முயற்சி செய்தார், முதன்முதலில் இவருக்கு நடிப்பதற்கு வாய்ப்பு வாங்கித் தந்தவர் சின்ன அண்ணாமலை (சின்ன அண்ணாமலையிடம் சரோஜாதேவியை அறிமுகப்படுத்தியவர் பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம்), கதாநாயகியாக நடித்த முதல் படத்திலேயே எம்.ஜி.ஆருக்கு ஜோடி ("திருடாதே), "பாகப்பிரிவினை' படத்தில் பிரசவ வேதனையில் துடிப்பதைப் போன்ற நடிப்பு வராதபோது சிவாஜி நடித்துக் காட்ட அதை அப்படியே நடித்தார், "இருவர் உள்ளம்' படத்தில் சரோஜாதேவிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு காட்சியில் சிவாஜியை அதிகமாக உணர்ச்சியை வெளிப்படுத்தாமல் அமைதியாக இருக்கச் சொன்னார் இயக்குநர் எல்.வி. பிரசாத், எம்.ஜி.ஆரின் "தெய்வத்தாய்' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட தேதிகளில் சிவாஜியின் "புதிய பறவை' படத்தில் நடிக்கப் போய்விட்டதால் எம்.ஜி.ஆர். இவரோடு நடிப்பதை நிறுத்திக் கொள்ள முடிவெடுத்தார் - இப்படி பல சுவையான தகவல்கள் பக்கத்துக்குப் பக்கம் நிறைந்திருக்கின்றன.
பெரும்பாலான படங்களைப் பற்றி அப்போது பத்திரிகைகள் எப்படி விமர்சித்தன என்பதையும் சுருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறார் நூலாசிரியர். பின்னிணைப்பாக சரோஜாதேவியின் அழகின் ரகசியம், அவருக்குப் பிடித்தவை, நடிக்க முடியாமல் போன நல்ல வேடங்கள், நினைவில் நிற்கும் படக்காட்சிகள் என்று பல தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கருப்பு - வெள்ளை பட கதாநாயகியின் வண்ணமயமான திரைவாழ்வின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறது இந்நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com