ஆர். சூடாமணி

ஆர். சூடாமணி - கே. பாரதி; பக்.128; ரூ.50; சாகித்திய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18.
ஆர். சூடாமணி

ஆர். சூடாமணி - கே. பாரதி; பக்.128; ரூ.50; சாகித்திய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18.
கருத்து வேறுபாட்டால் தனித்தனியே பிரிந்து வாழ நினைக்கும் ஓர் இளம் தம்பதி, ஆதரவற்ற ஓர் இளைஞனின் உயிரைக் காப்பாற்றும் நற்செயலில் ஈடுபடும்போது தங்களின் பிரிவும் கோபமும் பொருளற்றவை என்பதை உணர்ந்து மனம் மாறுகின்றனர் (பூமியினும் பெரிது), தன் வயதே உடைய சின்னப்பொண்ணு கழிவறை சுத்தம் செய்வதைப் பார்த்து மனம் கசியும் விஜயா அவளின் உண்மையான பெயரைக் கேட்க அவள் விஜயா என்று கூறுகிறாள். விஜயாவின் மனதில் ஒரு நிம்மதி (விஜயா), காரில் தனியே இருக்கும் பெண்மணியிடம் கத்தியைக் காட்டி நகைகளையும் கைக்கடிகாரத்தையும் பிடுங்கிச் செல்லும் திருடனிடம் அந்தப் பெண்மணி இப்போது நேரம் என்ன என்று கேட்கிறாள் - மாத்திரை சாப்பிட வேண்டியிருப்பதால் - திருடன் கண் கலங்குகிறான் (கடற்கரையில் ஒரு புதுவித ஜோடி).
இப்படிப்பட்ட செறிவான கதைகளை எளிய மொழிநடையில் படைத்தவர் ஆர். சூடாமணி. சிறுகதை, குறுநாவல், நாவல், நாடகம் (கொஞ்சம் கவிதையும்) என்று பல தடங்களிலும் பயணித்திருக்கிறார். அவரது குடும்பப் பின்னணி, தனிப்பட்ட ரசனை, சமூகப் பார்வை, படைப்பாற்றல், எளிய வாழ்வு என எல்லாப் பக்கங்களையும் சுருக்கமாகவும் தெளிவாகவும் பதிவு செய்திருக்கிறது இந்நூல். நூலாசிரியர் ஆர். சூடாமணியின் தோழியானதால் பல தனிப்பட்ட உரையாடல்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
உடல்ரீதியாக குறைபாடுடையவராக இருந்தாலும், அதனால் தாழ்வுணர்ச்சி கொள்ளாமல் தான் விரும்பிய எழுத்துத் துறையில் பெரும் சாதனை புரிந்தவர் ஆர். சூடாமணி. அவருடைய கதைகள் எல்லாமே அவருடைய அல்லது அவரைச் சார்ந்தவர்களுடைய வாழ்வில் நிகழ்ந்திருக்கக்கூடும் என்கிற தோற்றத்தை ஏற்படுத்துபவை.
இவர் எவரையும் வெறுத்ததில்லை. எல்லாரையும் விரும்பியவராகவும், எல்லாராலும் விரும்பப்பட்டவராகவும் இருந்திருக்கிறார்.
அவரது மறைவுக்குப் பின் அவரது பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் அவரது விருப்பப்படி தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டிருப்பது வியப்பளிக்கிறது.
ஆர். சூடாமணி குறித்து அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகமாகவும், அறிந்தவர்களுக்கு மீண்டும் அவர் படைப்புகளைப் படிக்கத் தூண்டுவதாகவும் அமைந்துள்ளது இந்நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com