தேவார யாப்பியல்

தேவார யாப்பியல்

தேவார யாப்பியல் - அ.மோகனா; பக்.576; ரூ.550; நெய்தல் பதிப்பகம்,   சென்னை-5;  044-2848 3860. 

தேவார யாப்பியல் - அ.மோகனா; பக்.576; ரூ.550; நெய்தல் பதிப்பகம்,   சென்னை-5;  044-2848 3860. 
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் பாடல்களில் இசைப் பாடல்களே அதிகம். இவை பண்
முறையில் பிரித்துப் பலரால் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன.  
தமிழ் யாப்பியலில் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவை செய்யுளுக்கு உறுப்பாக அமைகின்றன. இவற்றில் "தொடை' என்பது ஒலிப்பு முறையால் செய்யுளுக்கு இனிமை தருகின்ற உறுப்பாகும். தொடைகளுள் எதுகை, மோனை ஆகிய இரண்டுமே சிறப்பானவை. தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய பேராசிரியர் இதன் சிறப்பை (செய்யுள் 94) எடுத்துரைக்கிறார்.
அவ்வகையில், தேவாரப் பாடல்களில் உள்ள எதுகை, மோனைத் தொடைகளின் சிறப்பை இந்நூல் எடுத்துரைக்கிறது. 
யாப்பியல் ஆய்வானது தொடையியல் ஆய்வில் ஓர் அங்கமாகக் கருதப்படுகிறது. மூவர் தேவாரத்தைப் பொருத்தவரை பாவினங்களுள் "விருத்தம்' எனும் யாப்பே மிகவும் கோலோச்சுகிறது. இயற்றுவதற்கு எளிமையானது என்பதால், புலவர்கள் பலரும் இந்த  விருத்தப்பாவையே பெருமளவில் கையாண்டிருக்கின்றனர். அவ்வகையில்,  தேவாரத்தில் இடம்பெற்றுள்ள விருத்தப்பாக்களை விரித்துரைக்கிறது நூலின் ஓர் இயல். 
ஈரடி மேல்வைப்பு, நான்கடி மேல்வைப்பு பா வடிவங்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசரின் தேவாரத்தில் மட்டும் சிறப்பாகக் காணப்படுகின்றன. இவ்வடிவங்களையும், அவற்றிற்கான இலக்கணங்களையும் ஆராய்ந்து, தேவாரத்தில் அவை இடம்பெற்றுள்ள திறத்தை எடுத்துரைத்து இந்நூல் மதிப்பீடு செய்கிறது.
தேவாரப் பாடல்கள் அனைத்தையும் இவை "இன்னின்ன யாப்பின' என வகைப்படுத்தியிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு. தேவாரப் பாடல்களை இசையுடன் தொடர்புபடுத்தி வெளிவந்துள்ள அரிதான ஆய்வு நூல்களுள் இந்நூலுக்குத் தனி இடம் உண்டு.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com