கவிதா - இளவேனில்

கவிதா - இளவேனில்

கவிதா - இளவேனில்; பக்.232; ரூ.200; கொற்றவை வெளியீடு, சென்னை-17; 044- 2431 4347.

கவிதா - இளவேனில்; பக்.232; ரூ.200; கொற்றவை வெளியீடு, சென்னை-17; 044- 2431 4347.

தமிழில் புதுக்கவிதைகள் வளர்ச்சி பெற்றிருந்த காலத்தில் புதுக்கவிதைகளிலும் பல போக்குகள் அரங்கேறியிருந்தன. அவற்றில் பிரதானமாக "கலை கலைக்காகவே' குழுவினரின் தனிமனித அக உணர்வு, அழகியல் சார்ந்த கவிதைகளும் - அரசியல், சமூக உணர்வுள்ள "கலை மக்களுக்காக' குழுவினரின் கவிதைகளும் இடம் பெற்றிருந்தன. கலை, இலக்கியம் யாருக்காக? எதற்காக? என்பன போன்ற வாத, பிரதிவாதங்கள் தமிழ் இலக்கிய அரங்கில் அன்றாடம் நடைபெற்று வந்தன. அதன் ஒரு பகுதியாக "சிகரம்' மாத இதழில் நூலாசிரியர் எழுதிய "கவிதா' என்ற கவிதை பற்றிய கட்டுரைத் தொடர் வெளிவந்தது. அது இந்நூலில் இடம் பெற்றிருக்கிறது.

நூலாசிரியரின் "இளவேனில் கவிதைகள்' என்ற நூலும், பல்வேறு கவிதை நூல்களுக்கு அவர் எழுதிய அணிந்துரை, திறனாய்வுகளும் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன.

கவிதை என்பது உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கையிலிருந்து தோன்றி வளர்வது; அதுவே இயல்பானது என்ற அடிப்படையில் கவிதை தோன்றி வளர்ந்தவிதத்தை நூலாசிரியர் விளக்கியிருக்கிறார். உண்மையில் "கவிதா', கவிதையின் தோற்றம், வளர்ச்சி பற்றி மட்டும் கூறாமல், மனித வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களுக்கு பொருள் உற்பத்திமுறையும், உற்பத்தி உறவுகளும் அடிப்படையான காரணமாக இருப்பதையும், அந்த பொருளியல் அடித்தளத்தில் இருந்துதான் கவிதை உட்பட அனைத்து கலை, பண்பாட்டு, சமூக நடவடிக்கைகளும் தோன்றுகின்றன; வளர்கின்றன; மாற்றம் அடைகின்றன என்பதையும் இந்நூல் விளக்குகிறது.

மக்களைப் போராட்டத்திற்கு அறைகூவி அழைக்கும் உணர்வு பொங்கும் கவிதைகளின் தொகுப்பான "இளவேனில் கவிதைகள்' இந்நூலில் இடம் பெற்றுள்ளது. நூலாசிரியரின் கவிதைத் தன்மை மிக்க உரைநடையின் வீச்சு புதிய வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com