மொட்டப்பனையும் முகமாலைக்காத்தும்

மொட்டப்பனையும் முகமாலைக்காத்தும்

மொட்டப்பனையும் முகமாலைக்காத்தும் - சர்மிலா வினோதினி; பக்.108; ரூ.150; பூவரசி பப்ளிகேஷன்ஸ்,  வேப்பன்குளம், வவுனியா;   0094 -768860160.

மொட்டப்பனையும் முகமாலைக்காத்தும் - சர்மிலா வினோதினி; பக்.108; ரூ.150; பூவரசி பப்ளிகேஷன்ஸ்,  வேப்பன்குளம், வவுனியா;   0094 -768860160.
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுற்ற பிறகும் போரால் நேர்ந்த இழப்புகளும் அவை ஏற்படுத்திய ஆழமான பாதிப்புகளும் இருக்கவே செய்கின்றன.  அது அங்கு வாழும் தமிழ் மக்களின் வாழ்க்கையை, மனதைச் சிதைத்திருக்கின்றன.  அந்தச் சிதைவுகளின் பிரதிபலிப்பாக இத் தொகுப்பில் உள்ள சிறுகதைகள் உள்ளன.  
போருக்குப் பின் ராணுவத்தாலும், காவல்துறையாலும் சோதனை செய்யப்படுகிறவர்கள் காணாமற் போகிற அவலம் இருக்கவே செய்கிறது. மகனை இழந்த தாய், கணவனை இழந்த மனைவி,  காதலித்தவனை இழந்த இளம் பெண் என காணாமல் போனவர்களைத் தேடியழும் மனங்களை "உப்புக்காற்றில் உலரும் கண்ணீர்'  சிறுகதை சித்திரிக்கிறது. 
வயதான பெற்றோரைக் கவனிக்காமல் அவர்களை இரந்துண்டு வாழும் நிலைக்குத் தள்ளும் பிள்ளை
களைப் பற்றிச் சொல்லும் "நெருடல்'  சிறுகதை,  ஆண் ஆதிக்க மனோபாவத்தில் செய்த அடாவடிச் செயல்களால் மனைவியையும், மகனையும் இழந்து தனிமையில் வாடும் தந்தையைப் பற்றிச் சொல்லும் "பூக்களைத் தொலைத்த பூந்தொட்டி'  சிறுகதை, மனைவியின் மருத்துவச் செலவுக்காக தனது பூர்வீக நிலத்தை விற்ற சத்தியமூர்த்தி,  அந்த நிலத்திலேயே கூலி வேலை  செய்ய நேர்வதையும், அந்த நிலத்தில் ரசாயன உரங்களைப் போட மறுத்து நிலத்தை விட்டு வெளியேறுவதையும் சித்திரிக்கும் "பூர்வீகச் சொத்து'  சிறுகதை, காதலித்த பெண் வேறு ஒருவனைத் திருமணம் செய்து கொண்ட பிறகும் அவளை மறக்க முடியாமல் தவிப்பவனின் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் " வலசை'  சிறுகதை  ஆகியவை  இலங்கையில் மட்டுமல்ல, இங்கேயும் நிகழக் கூடியனவாகவே தோன்றுகிறது. 
சிறுகதைகளைச் சொல்லும் முறை மிகுந்த கவிதைத் தன்மையுடன்- மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கிற மாதிரி- மனதுக்குள் அசைபோடுகிற மாதிரி- அமைந்திருப்பது சிறப்பு. 
போர் நிகழ்ந்த ஒரு நாட்டின் வலிகளையும்,  வாழ்க்கைப் பிரச்னைகளையும் நம் கண்முன் நிறுத்தும் தொகுப்பு. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com