இருளைக் கிழித்தொரு புயற்பறவை

இருளைக் கிழித்தொரு புயற்பறவை - இளவேனில்; பக்.288; ரூ.250; கொற்றவை வெளியீடு, சென்னை-17; ) 044 - 2431 4347.
இருளைக் கிழித்தொரு புயற்பறவை

இருளைக் கிழித்தொரு புயற்பறவை - இளவேனில்; பக்.288; ரூ.250; கொற்றவை வெளியீடு, சென்னை-17; ) 044 - 2431 4347.
 புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளரான மாக்ஸிம் கார்க்கியின் குழந்தைப் பருவ வாழ்க்கையைச் சித்திரிக்கும் நாவல். மாக்ஸிம் கார்க்கி எழுதிய "எனது குழந்தைப் பருவம்' 1957-இல் தமிழில் வெளிவந்திருக்கிறது. இந்த நாவல் மாக்ஸிம் கார்க்கியின் அந்த நூலை அடிப்
 படையாகக் கொண்டு, அதனிலிருந்து முற்றிலும் மாறுபட்டவிதத்தில், மிக புதியமுறையில் படைக்கப்பட்டிருக்கிறது.
 நூலாசிரியரின் கவித்துவம் மிக்க உரைநடையில் ஜார் மன்னரின் கொடுங்கோல் ஆட்சிக் காலத்தில் மக்கள் பட்ட துன்பங்கள் மிகத்துல்லியமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன.
 இளமையிலேயே தந்தையை இழந்த சிறுவன் அலெக்ஸி (மாக்ஸிம் கார்க்கி), பாட்டியின் அரவணைப்பில் வாழ்வதும், தாத்தாவின் வன்முறைமிக்க அன்பாலும், தோழர் "இது மிக நேர்த்தி'யின் வழிகாட்டலாலும் சுயமாகச் சிந்திப்பதும், மிகப் பெரிய மனிதர்களை தனது கேள்விகளால் மடக்குவதும், அநீதியை எதிர்த்துப் பொங்குவதும் நாவல் முழுவதும் மிக இயல்பாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது.
 மாக்ஸிம் கார்க்கி குழந்தைப் பருவத்திலேயே எவ்வளவு அறிவுத்திறன் உடையவராக இருந்தார் என்பதும், அவருடைய சிந்திக்கும்முறை பிற சிறுவர்களிடம் இருந்து எவ்வாறு வேறுபட்டிருந்தது என்பதும் வியக்க வைக்கிறது.
 ஜார் மன்னனின், ரஷ்ய நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தைக் காப்பாற்றுவதற்காக அக்காலத்தில் கடவுள் நம்பிக்கை எந்த அளவுக்கு உதவியிருக்கிறது; அக்கால மக்களிடம் இருந்த கருத்துகள், பழக்க வழக்கங்கள், வன்முறை, பெண்களை மதிக்காத போக்கு எல்லாமும் ஆள்பவர்களின் ஆதிக்கத்துக்குத் துணை போவதாக எவ்வாறு இருந்திருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. அதே நேரத்தில் ஆதிக்கத்துக்கு எதிரான கருத்துகளும், அவற்றை அஞ்சாமல் பரப்புகிறவர்களும் அக்காலத்தில் இருந்திருக்கின்றனர்.
 மக்களுக்கான சமூக மாற்றத்தை நோக்கிய பயணத்தின் ஆரம்பநிலை எவ்வாறு இருக்கும் என்பதை உணர்வுப்பூர்வமாகத் தெரிந்து கொள்ள இந்நாவல் உதவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com