வான்கலந்த மணிவாசகம்

வான்கலந்த மணிவாசகம் - அரங்க இராமலிங்கம்; பக்.672; ரூ.500; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108; ) 044-2536 1039.
வான்கலந்த மணிவாசகம்

வான்கலந்த மணிவாசகம் - அரங்க இராமலிங்கம்; பக்.672; ரூ.500; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108; ) 044-2536 1039.
 சைவர்களின் தமிழ் வேதமான பன்னிரு திருமுறைகளில் எட்டாவது திருமுறையாகத் திகழ்வது திருவாசகம். இறைவனே தம் கைப்பட எழுதிய சிறப்புக்குரியதால், இதன் மாண்புகள் விரித்துரைக்க முடியாதவை. சைவ சமயக் கருத்துகள் அனைத்தும் மிகவும் நுட்பமானவை. அவை மெய்யியல், அறிவியல், சித்தாந்த அடிப்படையில் அமைந்தவை. அக்கருத்துகளில் உள்ள பலவற்றையும் குறியீடாகவே கொள்ள வேண்டும். அவ்வகையில் திருவாசகத்தை நூலாசிரியர் அணுகியிருப்பது சிறப்பு.
 "திருவாசகம்' பற்றி நூலாசிரியர் 108 வாரங்கள் நிகழ்த்திய தொடர் சொற்பொழிவின் உரைகள்தாம் இந்நூல். ஒவ்வொரு பதிகத்திலும், பாடலிலும் மணிவாசகர் கூறும் நுட்பமான சில சொற்களுக்கும், சொற்றொடர்களுக்கும் விளக்கம் சொல்லப்பட்டிருக்கும் விதம் மெய்யியல் அடிப்படையிலும், குறியீட்டு முறையிலும் அமைந்திருக்கிறது.
 திருவாசகத்தில், மீண்டும் மீண்டும் மணிவாசகர் வலியுறுத்தும் ஒரு கருத்தைப் பதிவிட்டு, அனுபவ நிலைக்குச் சென்றவர்கள் நிலை எப்படிப்பட்டது என்பதையும் நூலாசிரியர் விரித்துரைக்கிறார்.
 பிறவா யாக்கைப் பெரியோனாகிய சிவபரம்பொருளை தலைக்கு மேல் இரு கரம் குவித்து ஏன் வணங்க வேண்டும்? தீப ஆராதனையின்போது இறைவனை எப்படி வணங்க வேண்டும்? இறைவனின் நேசம் எத்தகையது? பிறவிப் பிணியைப் போக்கும் மருந்து எது? மணிவாசகர் கூறும் மகா வாக்கியம் என்ன? கல்லா (கல்லாய்) மனிதராய் என்கிற பாடபேதத்துக்கான விளக்கம் என்ன? மகேந்திர மாமலை எங்குள்ளது? அடி முடி தேடிய பிரமனும் திருமாலும் யார்? இறைவனுக்கு உள்ள இச்சை எது? மரணம் எப்படி ஐந்து நிலைகளில் நிகழ்கிறது? - எனப் பல செய்திகளை சைவ சித்தாந்தம், அறிவியல், மெய்யியல் துணைக்கொண்டு, குறியீட்டு முறையில் விளக்கியிருப்பது நூலின் சிறப்பை மேலும் உயர்த்துகிறது. இறைவனை அடைவதற்கான ஒரே வழி என்ன என்பதை திருவாசகம் எடுத்துரைக்கிறது; அதை இந்நூல் பல இலக்கியங்களின் துணையோடு விரித்துரைக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com