திகம்பர நினைவுகள்

திகம்பர நினைவுகள் - தேவகாந்தன்; பக்.128; ரூ.120; ஆதி பதிப்பகம், 15, மாரியம்மன் கோயில் தெரு, பவித்திரம்,திருவண்ணாமலை-606 806.
திகம்பர நினைவுகள்

திகம்பர நினைவுகள் - தேவகாந்தன்; பக்.128; ரூ.120; ஆதி பதிப்பகம், 15, மாரியம்மன் கோயில் தெரு, பவித்திரம்,திருவண்ணாமலை-606 806.
 யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் பிறந்த நூலாசிரியர்,1984முதல் 2003 வரை தமிழ்நாட்டில் வாழ்ந்தார். தற்போது கனடா நாட்டில் வாழ்கிறார். என்றாலும் தான் பிறந்த மண்ணோடான அவருடைய அனுபவங்களை அவரால் மறக்க முடியவில்லை.அந்த நினைவுகளை இந்நூலில் பகிர்ந்துள்ளார்.
 யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு வீட்டிலும் அமைக்கப்பட்டிருக்கும் கிடுகு வேலி கலாசாரத்துடன் தொடங்குகிறது நூல்.இந்தக் கிடுகுவேலிகள் மழைக்காலத்தில் மண்ணரிப்பைத் தடுப்பவையாக இருந்திருக்கின்றன. குறுகியமணல் பாதைகளின் திருப்பத்தில் செல்லும் வண்டிகள் கிடுகு வேலிகளில் மோதி, வேலி சேதமடையாமல் இருப்பதற்காக வேலியின் மூலையில் கனமான "மூலைக்கல்'லைப் போட்டு வைத்திருப்பார்கள்.
 நூலாசிரியர் பள்ளி மாணவனாக இருந்தபோது, பருத்தித்துறைக்கும் சாவகச்சேரிக்கும் பஸ்கள் விடப்பட்டன.பஸ்ûஸப் பார்ப்பதற்காகவே பஸ் செல்லும் பாதையில் நடந்து பள்ளிக்கு பல மாணவர்கள் சென்றிருக்கின்றனர்.
 பள்ளிக்குச் சென்று திரும்பும் வழியில் ஒரு நாள் தட்டான் எனப்படும் பெரிய குரங்கு வழிமறித்து நிற்க, அதற்குப் பயந்து வேறு வழியில் தப்பிச் சென்று வீடு அடைந்த அனுபவத்தை படபடப்புடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.
 அவர் சிறு வயது பையனாக இருந்து இளைஞனாக மாறத் தொடங்கிய காலத்தில் பழகிய சிவராணி, வசந்தாக்கா தொடர்புடைய அனுபவங்கள், சிறுவயதில் பீடி பிடிக்கத் தொடங்கியது, முதன்முதலில் 1960 இல் பாட்டா செருப்பு யாழ்ப்பாணத்துக்கு அறிமுகமாகியது, அதை வாங்கி அணிந்த ஆசிரியர் சத்தியநாதனை "பாட்டா ரீச்சர்' என்று எல்லாரும் அழைத்தது என அன்றைய காலத்தின் இடங்கள், பொருள்கள், மனிதர்கள் எல்லாரும் நூலாசிரியரின் நினைவுகளில் பயணம் செய்கின்றனர்.
 1958 - ஆம் ஆண்டுக்கு முன்பு பெரும் ஆரவாரத்துடன் நடைபெறும் முறிகண்டி என்ற இடத்தில் உள்ள பிள்ளையார் கோயில் வழிபாட்டின் சுவையானஅனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.2010- ஆம் ஆண்டுக்குப் பின், ஒருமுறை முறிகண்டிக்கு நூலாசிரியர் செல்ல நேர்ந்தபோது, பிள்ளையார் கோயில் அங்கு இல்லை. "யுத்தம் எதை எதையோ மாற்றியிருக்கிறது; முறிகண்டிப் பிள்ளையார் கோயிலை மாற்றி வைப்பதா பெரிய விஷயமென எண்ணிக் கொண்டேன்' என்கிறார்.
 நூலை வாசிக்கும்போது நூலாசிரியரின் அனுபவங்கள் போன்ற பழைய நினைவுகள் வாசகர்களின் மனதை ஆக்ரமிக்கத் தொடங்குவதை தவிர்க்க முடியாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com