அகவாழ்வில் கீழ்க்கணக்கும் மேற்கணக்கும்

அகவாழ்வில் கீழ்க்கணக்கும் மேற்கணக்கும் - அ.சுபா; பக்.212; ரூ.220; காவ்யா, கோடம்பாக்கம், சென்னை-24; )044-2372 6882. 
அகவாழ்வில் கீழ்க்கணக்கும் மேற்கணக்கும்

அகவாழ்வில் கீழ்க்கணக்கும் மேற்கணக்கும் - அ.சுபா; பக்.212; ரூ.220; காவ்யா, கோடம்பாக்கம், சென்னை-24; )044-2372 6882.
சங்ககால இலக்கியங்களான பத்துப் பாட்டும், எட்டுத்தொகை நூல்களும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்றும்;சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நாலடியார் முதல் கைந்நிலை வரை உள்ள பதினெட்டு நூல்களும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் கூறப்படும். இவ்விரு தொகை நூல்களில் அகம், புறம் சார்ந்த நூல்களும் உள்ளன. அவற்றுள் அகப்பாக்கள் மட்டும் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளன. இயற்கையோடு இயைந்து வாழ்ந்த சங்ககால மக்களின் வாழ்வியலை இலக்கண, இலக்கியச் சான்றுகளுடன் இந்நூல் எடுத்துரைக்கிறது.
சங்கம், சங்கம் மருவிய கால அகப்பாடல்களில் உள்ள திணை, துறை, கூற்று வைப்பு முறை, முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள், பா வகைகள்,சமுதாய நிலை, மதிப்பீட்டு அடிப்படையிலான ஒப்பீடுகள் ஆகியவை தனித்தனியாகக் கூறப்பட்டுள்ளன. சங்கம், சங்கம் மருவிய காலம் என இருவேறு காலகட்டங்களையும் ஒப்புநோக்கி இந்நூலாசிரியரே கேள்வியையும் எழுப்பி, அதற்கான விடையையும் தந்திருக்கிறார்.
சங்கம் மருவிய கால அகநூல்கள், ஐந்திணைக் கோட்பாடு, சங்கம், சங்கம் மருவிய கால அகப்பாடல்களில் தோழி கூற்றுப் பாடல்கள் எந்தெந்த இடங்களில் வருகின்றன என்பதற்கான அட்டவணை, சங்கம் மருவிய கால அகப்பாடல்களில் விலங்குகள், நீர்வாழ்வன, பூச்சிகள், செடி, கொடிகள் பெறும் இடம், சங்கம் மருவிய கால அகப்பாடல்களின் வெண்பா பகுப்பு அட்டவணை ஆகியவையும் தரப்பட்டுள்ளன.
பா வகை என்று பார்க்கும்போது, சங்க இலக்கியப் பாடல்களில் நேரிசை ஆசிரியப்பாவே அதிகம் பயின்று வந்துள்ளது. குறிப்பாக, சங்ககால அகப்பாடல்கள் அதிகம் ஆசிரியப்பாவில் அமைந்தவை. ஆனால், சங்கம் மருவிய காலத்தில் உருவான நூல்கள் வெண்பாவிலேயே பாடப்பட்டுள்ளன. எட்டுத்தொகை நூல்களில் ஆசிரியப்பா வளர்ச்சி அடைந்திருந்தாலும், அதன் உச்சநிலையைப் பத்துப்பாட்டு நூல்களில்தான் நம்மால் காணமுடிகிறது. பண்டைய தமிழ்ச் சமுதாயத்தின் வாழ்வைப் புரிந்துகொள்ள விழைபவர்களுக்கும் இந்நூல் பயன்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com