முகப்பு ஸ்பெஷல்ஸ் நூல் அரங்கம்
என் ஜன்னலுக்கு வெளியே
By DIN | Published On : 01st December 2021 05:35 PM | Last Updated : 01st December 2021 05:35 PM | அ+அ அ- |

என் ஜன்னலுக்கு வெளியே
என் ஜன்னலுக்கு வெளியே - மாலன்; பக்.352;ரூ.300; கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை-17; - 044 - 2436 4243.
குடும்பத்தோடு தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் நாம், நமக்காகப் பணி செய்வதாலேயே குடும்பத்தோடு தீபாவளியைக் கொண்டாட இயலாதநிலையில் இருக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்களையும் நமது கொண்டாட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று யோசனை கூறும் கட்டுரையில் தொடங்கி, ரஜினிகாந்த் இந்தியப் படவிழாவில் கெளரவிக்கப்பட்டது, தமிழ் நாளேடுகளில் இடம் பெறும் விளம்பரங்களில் தமிழ் சொற்றொடர்கள் ஆங்கில எழுத்துகளில் எழுதப்பட்டிருப்பது, தமிழ்ப் பெயர்களைத் தமிழ் உச்சரிப்பில் உள்ளவாறு ஆங்கில எழுத்துகளைக் கொண்டு எழுத வேண்டும் என்று மாநில அரசு ஆணையிட்டது, ஷபாலி வர்மா எனும் பதினைந்து வயதுப் பெண் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தது, தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர், தானே சமையல்காரராக மாறி சாம்பாரைக் கண்டுபிடித்தது - இப்படிப் பல்வேறு நிகழ்வுகள் குறித்து எழுபத்தொரு கட்டுரைகளில் தனது கருத்தைத் தெளிவாகவும் விரிவாகவும் கூறியுள்ளார் ஆசிரியர்.
குறிப்பாக, யானை குறித்த கட்டுரை (ஐயோ பாவம், அரிசி ராஜா!), தனித்திருக்க நேரிட்ட நொய்த்தொற்று கால அனுபவக் கட்டுரை (தனிமை பழகும் தருணம் இது), குங்குமம் தயாரிக்கும் தாத்தா பற்றிய கட்டுரை (மனவாசம்) போன்றவை மிகவும் சுவையானவை.
பல இடங்களில் உரைநடை, கவிதையை நெருங்குகிறது. ஆழமான கருத்து; ஆர்ப்பாட்டமில்லா எழுத்து இரண்டின் கலவை இந்நூல்.