மனிதன் நினைப்பது ஒன்று
By DIN | Published On : 12th July 2021 10:54 AM | Last Updated : 12th July 2021 10:54 AM | அ+அ அ- |

மனிதன் நினைப்பது ஒன்று - அசோக் யெசுரன் மாசிலாமணி; பக்.152; ரூ.130; மாசி பப்ளிகேஷன்ஸ், 30/7, கந்தப்பா தெரு, புரசைவாக்கம், சென்னை-7.
ஜமீன்தார் முறை நம்நாட்டில் ஒழிக்கப்பட்டுவிட்டாலும், பழைய ஜமீன்தார்கள் செல்வ வளத்தோடும், பாரம்பரிய மரியாதைகளுடனும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைப்பற்றிய நாவல் இது.
பாரம்பரியமான வாழ்க்கைமுறையை மேற்கொள்ளும் பெரிய ஜமீன், நவீன கலாசாரத்தில் மூழ்கிக் கிடக்கிற தன் மகனைப் பற்றிக் கவலைப்படுகிறார். சின்ன ஜமீனுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர். பல வருடங்களுக்குப் பிறகு, சின்ன ஜமீனின் மனைவி
கர்ப்பம் தரிக்கிறாள்.
உறவினர் ஒருவரின் மரணத்தின் காரணமாக, பெரிய ஜமீனும் அவருடைய மனைவியும் டெல்லிக்கு அருகில் உள்ள ஊருக்குச் செல்கிறார்கள். சோமாலியா கடற்கொள்ளையர்கள் சின்ன ஜமீனுக்குச் சொந்தமான கப்பலைச் சிறைப்பிடிக்கிறார்கள். அதை மீட்க சின்ன ஜமீனும் சென்றுவிடுகிறார்.
சின்ன ஜமீனின் மனைவிக்குப் பிரசவ வேதனை ஏற்பட்டு, வேலைக்காரர்களால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு ஆங்கே ஆண், பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன. வாரிசு இல்லாமல் போகுமோ என்று கவலைப்பட்ட பெரிய ஜமீனின் மனநிலையில் மாற்றம் ஏற்பட இச்சம்பவம்காரணமாகிவிடுகிறது. ஆபத்தான காலத்தில் உதவிய எளிய மக்களின்மீது அன்பு பிறக்கிறது. எல்லா மக்களையும் சரிசமமாக மதிக்கும் மனப்பான்மை அவருக்கு வந்துவிடுகிறது. ஆதரவற்றோர் இல்லம், மேல்நிலைப் பள்ளி என பல சமூக சேவைகளை ஜமீன்குடும்பத்தினர் செய்ய அதுவே காரணமாகிவிடுகிறது.
"மனிதன் நினைப்பது ஒன்றாக இருக்கிறது. ஆனால் மனிதனை இயக்குவது பிரபஞ்ச சக்தியே' என்று நாவல் முடிகிறது. மிகவும் எளிமையான மொழிநடையில் சிறுவர்களுக்குக் கதை சொல்லும் வடிவத்தில் இந்த நாவல் எழுதப்பட்டு இருக்கிறது.