உவர்

உவர் - இரா.சிவசித்து; பக்.152; ரூ.150; மணல்வீடு, ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல், மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம் - 636 453.
உவர்

உவர் - இரா.சிவசித்து; பக்.152; ரூ.150; மணல்வீடு, ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல், மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம் - 636 453.
 மணல்வீடு, ஓலைச்சுவடி, கனலி ஆகிய இதழ்களில் வெளிவந்த 9 சிறுகதைகளின் தொகுப்பு. தொகுப்பில் உள்ள கதைகளை வாசிக்கும்போது, கிராம மக்களின் வாழ்க்கையை வாழ்ந்த அனுபவம் வாசகருக்குள் நிகழ்கிறது.
 பாத்திரங்களின் பேச்சு, கதையாசிரியரின் விவரிப்பு, நிகழும் சம்பவங்கள் அனைத்தும் கிராமத்து மண்ணில் வேர்விட்டு வளர்ந்தவை. "உவர்' சிறுகதையின் நீலமேகம் மாமா போன்ற மனிதர்களை இப்போதும் பார்க்க முடியும். சிறிய, பெரிய விஷயங்களுக்காக மனிதர்களுக்குள் நடைபெறும் அடிதடி சண்டைகள், வசவுகள் கூடவே அவற்றையெல்லாம் மீறி பொங்கி வழியும் அன்பு என இயல்பான கிராம வாழ்க்கை நம் கண்முன் விரிகிறது.
 கிராமத்து பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் கற்க படும் பாடுகள், " இங்கிலீஷ் இஸ் ஏ ஃபன்னி லாங்குவேஜ்' கதையில் சித்திரிக்கப்படுகிறது. கூடவே கற்பிக்கும் முறையில் உள்ள குறைகளையும் கதை உணர்த்துகிறது.
 ரைஸ்மில்லில் வேலை செய்யும் சங்கரலிங்கத்துக்கும், மணி என்ற இளம் வயதினனுக்கும் இடையிலான உறவு, மணியிடம் பேசிக் கொண்டே வெல்லம் காய்ச்சும் அடுப்பில் விழுந்து சங்கரலிங்கம் உயிர்விட்டது, சங்கரலிங்கம் இறந்து நீண்டநாள்களுக்குப் பிறகு, அவனுடைய மனைவி மாரி, மணியிடம் அன்புடன் நடந்து கொள்வது எல்லாம் நம்மை நெகிழ வைக்கின்றன. பஸ் டிரைவர் மூர்த்தி அண்ணனுக்கும், கண்டக்டர் தவுடனுக்கும் இடையிலான உறவு, தவுடன் தான் விரும்பும் பெண்ணுக்காக கேஸட்டில் பாடல் பதிவது என சாதாரண கிராம மக்களின் வாழ்க்கையை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கும் சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com