சவ்வாது மலைவாழ் மக்களின் பண்பாட்டுத் தளங்கள்

சவ்வாது மலைவாழ் மக்களின் பண்பாட்டுத் தளங்கள்

சவ்வாது மலைவாழ் மக்களின் பண்பாட்டுத் தளங்கள் - க.மோகன்காந்தி; பக். 135; ரூ.180; பாரதி புக் ஹவுஸ், வேலூர்- 632 004; 99424 41751.

தொண்டை நாட்டின் மேற்குப் பகுதியில்,  கிழக்குத் தொடர்ச்சி மலையில்  உள்ள முக்கிய மலைப் பகுதி சவ்வாதுமலையாகும். வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள இந்த மலைத் தொடர் 250 சதுர கிலோ மீட்டரில் அமைந்துள்ளது.  பல லட்சம் மக்கள் வசிக்கும் ஊர்களின் பெயராய்வு, மூலிகைத் தாவரங்களின் சிறப்புகள்- அவை  தீர்க்கும் நோய்கள், நீர்நிலைகள், தெய்வங்கள்,  மக்கள் பயன்படுத்தும் பொருள்களின் சிறப்புகள்,  குடியிருப்புப் பகுதிகளின் விவரங்கள் போன்றவற்றை நூலாசிரியர் விரிவாக விளக்கியுள்ளார்.

கல்வெட்டுகள், கோயில்கள், வழிபடும் தெய்வங்கள் குறித்து  புகைப்பட விளக்கங்களுடன் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது சிறப்பு. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த பொருள்கள் இங்கு இன்றளவும் புழக்கத்தில் இருப்பதும் வியப்படையச் செய்கிறது.

வீட்டின் முன் போடப்படும் கோலங்களில் வைக்கப்படும் பொட்டுகளின் மூலமாகவே, தாய், தந்தை வழிகளில் இறந்தவர்களின் எண்ணிக்கையை குறிப்பிடும் தகவல் குறித்த விளக்கவுரையை படிக்கும்போதே,  ஆச்சரியப்பட வைக்கிறது.

சிறுவர் விளையாட்டுகள், வாழ்வியல் முறைகள்,  வேட்டைகள், தேன் எடுத்தல், விவசாயம்.. படிக்கப் படிக்க மலைவாழ் மக்களின் வாழ்க்கை இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற உணர்வும் ஏற்படுகிறது.  தமிழர் கலாசாரத்தோடு பின்னிப் பிணைந்த மலைவாழ் மக்கள் குறித்து அறிய வேண்டியோர் படிக்க வேண்டிய நூல் இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com