திருமந்திரத்தில் மனித வள மேம்பாடு

திருமந்திரத்தில் மனித வள மேம்பாடு

திருமந்திரத்தில் மனித வள மேம்பாடு - முனைவர் பா.அன்பழகன்; பக்.297; ரூ.300; காவ்யா, சென்னை - 600024; 044-23726882.

மனித வாழ்க்கைக்கான அவசியம், அதை அடையும் வழிமுறைகளை திருமூலர் வகுத்த திருமந்திரத்தின் வாயிலாக விளக்கியும்,  அவற்றைப் பின்பற்றுவதால் ஏற்படும் நலன்களை நுட்பமாகவும் ஆராய்கிறது இந்த நூல். இயந்திரத்தனமாகிவிட்ட நவ நாகரிக வாழ்க்கை முறையில் மனித வளம் என்பது பொருளாதார ரீதியில் வாழ்க்கையை மேம்படுத்துவது என்று மேலோட்டமாகப் பொருள் கொள்ளப்படுகிறது. ஆனால், மனித வளம் என்பதை உடல் நலம், மன நலம்,  இறை நலம்,  சமூக நலம் ஆகிய தலைப்புகளில் திருமூலரின் திருமந்திரத்தை முதன்மை ஆதாரமாகக் கொண்டு நூலில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

தமிழ் இலக்கிய மரபில் திருமந்திரத்தின் பங்கு; மனித உடல் குறித்து, கருவிலிருந்து உடலின் அழிவு வரை திருமந்திரம் பதிவு செய்துள்ள கருத்துகள்;  உடலோடு கூடிய உயிரின் சிறப்பு; உயிரும் உடலும் சேர்ந்து இறையை நாட வேண்டிய அவசியம்; ஒட்டுமொத்த சமூக மேம்பாடே மனித குல மேம்பாடு ஆகியவற்றை திருமந்திரம் மூலமாக ஆராய்வதோடு மட்டுமல்லாது அதிலுள்ள மனிதவள மேம்பாட்டு கருத்துகளையும் இந்நூல் ஆராய்கிறது. ஆங்காங்கே தத்துவங்கள், தரிசனங்கள், வேத உபநிஷத்துகள் போன்றவற்றையும் ஒப்புநோக்கி ஆய்வுக்கு வலு சேர்க்கிறது.

இறை நிந்தனை கூடாது என்பதை திருமந்திரமானது சமூக நலன்களில் ஒன்றாகவே வைக்கிறது என்பதை இந்நூல் எடுத்தியம்புகிறது. உடல், மனம், இறை சிந்தனைகளோடு திருமந்திரத்திலுள்ள சமூக நலச் சிந்தனையும், அவற்றை ஆய்வுசெய்து வெளிக்கொணர்ந்திருப்பதும் இந்த நூலின் சிறப்பு. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com