எண்ணித் துணிந்தேன் விண்ணைத் தொட்டேன்

எண்ணித் துணிந்தேன் விண்ணைத் தொட்டேன்

எண்ணித் துணிந்தேன் விண்ணைத் தொட்டேன் (ஒரு துணைவேந்தரின் தன் வரலாறு) - மு.பொன்னவைக்கோ;  பக்.195; ரூ.300;  'கோ' இல்லம்,  சென்னை-48; 98400 90652.

அரசு, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில்  துணை, இணைவேந்தராகவும்,  பல்கலை. தலைவராகவும்,  மொத்தமாக 27 அமைப்புகளில் உயர்பதவியில் இருந்த நூலாசிரியரின் தன் வரலாறு இந்த நூல்.  தான் பிறந்து வாழ்ந்த கதை இளைய சமுதாயத்துக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த நூலை எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

8 மொழிகள் அறிந்தவர்,  11 விருதுகளைப் பெற்றவர், 22 நூல்களை எழுதியவர்... என்று பல்வேறு சிறப்புகளைப் பெற்றவர். பொறியாளராக இருந்து, பல்வேறு உயர்பதவிகள் வகித்த அவர் தமிழுக்காகவும்,  தமிழ் இணையத்துக்காகவும் ஆற்றிய பணிகள் வியக்கவைக்கின்றன.  அவரது வாழ்க்கைப் பயணம் பதினாறு தலைப்புகளில் 'பதினாறு பேறு' என்ற  வகையில் எழுதப்பட்டுள்ளது தனிச்சிறப்பு.

தமிழ் மென்பொருள்கள் உருவாக்கம்,  அறிவியல் தமிழ், கணினித் தமிழ், யூனிகோடு தமிழ்... என்று கணினியும் இணையமும் தமிழில் இன்று பெரும்பங்கை வகிக்க, அவர் ஆற்றிய பணிகள் அளப்பரியன என்று நூல் தெளிவுபடுத்துகிறது. 

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பே தமிழக அரசின் கவனத்துக்கு கணினிப் பயன்பாடு குறித்து அவர் எடுத்துச் சென்றவிதமும், அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும் பார்க்கும்போது, கணினியில் தமிழ் பயன்படுத்தும் ஒவ்வொரு வரும் நூலாசிரியருக்கு நன்றி சொல்ல வேண்டும். 

சாதாரண குடும்பத்தில் பிறந்து சரித்திரம் படைத்த சாதனையாளர் அவர் என்று கூறுவதில் தவறில்லை.  அவரது இளமைப் பருவம், கல்வி கற்றல், பணி,  ஒவ்வொரு பணியிலும் 
அவர் மேற்கொண்ட சீரிய நடவடிக்கைகள், கல்வித் துறையில் ஆற்றிய பணிகள், கணினித் துறையில் அளப்பரிய பங்கு... என்று துணைத் தலைப்புகளில் சுருக்கமாக, அனைவருக்கும் புரியும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

தன் வரலாறு என்றால் வழக்கமாக சுய புராணமாக இருக்காமல்,  கணினி பயன்படுத்துவோர் அனைவரும் அறிய வேண்டிய அற்புதத் தகவல்கள் உள்ளதால், படிக்க வேண்டிய நூல் இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com