மகாகவி பாரதியார் கதைகள் - பன்முக நோக்கு

மகாகவி பாரதியார் கதைகள் -  பன்முக நோக்கு

மகாகவி பாரதியார் கதைகள் பன்முக நோக்கு - பெ. சுப்பிரமணியன்;   பக். 324;  ரூ. 330; காவ்யா,  சென்னை - 24; 044 - 2372 6882.

பாரதியார் என்ற பெயரைக் கேட்டவுடன் அவருடைய கவிதை முகம் மட்டுமே பலருக்கும் நினைவில் வரும். ஆனால், அவர் கதாசிரியர், கட்டுரையாளர், மொழி பெயர்ப்பாளர், பத்திரிகை ஆசிரியர் என பன்முகம் கொண்ட  படைப்பாளி. குறிப்பாக, மிகச் சிறந்த கதைசொல்லி. அவர்,  23 சிறுகதைகளை எழுதியுள்ளார். மேலும், குறுநாவல்கள் (2), நெடுங்கதைகள் (3), நகைச்சுவைக் கதைகள் (3),  பறவைக் கதைகள் (2), மிருகம் பற்றிய கதை (1) ஆகியவற்றையும் எழுதியுள்ளார்.  

பாரதியாரின் கவிதைகள் ஆய்வு செய்யப்பட்ட அளவுக்கு அவருடைய கதைகள் ஆய்வு செய்யப்படவில்லை என்பதே உண்மை. அக்குறையை இத்தொகுப்பு போக்கியுள்ளது. 
இதில் பாரதியாரின் அனைத்துக் கதைகளும் தொகுக்கப்பட்டு விரிவான நோக்கில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதையையும் படிக்கும்போது ,  அனைத்துத் துறைகளிலும் இருந்த தெளிவும் தேர்ச்சியும் நன்கு புலப்படுகிறது. குறிப்பாக "ஆறில் ஒரு பங்கு' (இதுதான் தமிழின் முதல் சிறுகதை - சி.சு. செல்லப்பா), "சந்திரிகையின் கதை' (விதவைத் திருமணம் பற்றிய கதை) போன்றவை அவை எழுதப்பட்ட காலகட்டத்தை ஒப்பிட்டு நோக்கும்போது வியப்பு மேலிடுகிறது.

புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், விந்தன் முதலிய எழுத்தாளர்களுக்கு முன்னதாகவே அடித்தட்டு மக்களின் பிரச்னைகளை மையமாக வைத்து பாரதியார் கதைகளை எழுதியுள்ளார். தத்துவக் கதைகள், பேய் பற்றிய கதை, மகாபாரதக் கிளைக் கதை, விக்கிரமாதித்தன் சொன்ன கதை போன்றவற்றையும் எழுதியுள்ளார். தமிழ் நாட்டுப்புறக் கதை கூறும் மரபை மட்டும் பின்பற்றாமல், மேனாட்டு மரபையும் பின்பற்றி பாரதியார் எழுதியுள்ளார். பாரதியார் ஒரு சிறந்த கதாசிரியர் என்பதைத் தரவுகளுடன் நிறுவியிருக்கிறார் தொகுப்பாசிரியர். இது ஓர் அரிய முயற்சி. பாரதி அன்பர்களுக்கு இந்நூல் ஒரு பொக்கிஷம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com