இவண் இவள் (பாகம் ஒன்று)

இவண் இவள் (பாகம் ஒன்று)

இவண் இவள் (பாகம் ஒன்று) - ராஜாமகள்; பக்.198; ரூ.200; கோதை பதிப்பகம், குளித்தலை தாலுகா, திருச்சி; ✆90808 70936.

மண்ணாசை, பெண்ணாசை,  பொன்னாசை ஆகிய மூன்று ஆசைகளே வரலாற்றை புரட்டிப் போட்டுள்ளன. அந்த வரிசையில், நான்காவது - கடிதங்கள்.
சரித்திர, புராண பெண் கதாபாத்திரங்களான சகுந்தலை, சந்திரமதி, அகலிகை, கோசலை, கைகேயி, சுமித்திரை, சீதை, ஊர்மிளை, மாண்டவி, சுருதகீர்த்தி, தாரை, மண்டோதரி, சூர்ப்பனகை, புனிதவதி ஆகியோர் அவரவர் சம்பந்தப்பட்ட ஆண் கதாபாத்திரங்களிடம் தங்கள் உள்ளக் குமுறல்களை கடிதம் வழியே கொட்டித் தீர்ப்பதாகவும், தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை வெளிச்சம் போட்டுக்காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

'உன் கடுஞ்சொற்களைவிட நெருப்பு என்னைச் சுட்டுவிடவில்லை. யாராக வேண்டுமானாலும் பிறக்கலாம். ஆனால் சீதையாக மட்டும் பிறந்துவிடவே கூடாது' என சீதா பிராட்டியார், 'வாலி வதம் முடிந்ததும் கொழுநன்னை மறந்து கொழுந்தனோடு சேர்ந்து விடுகிறாள் என்னும் அவச்சொல்லை தான் கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் கொதிக்கிறது'  என வாலியின் மனைவி தாரை, 'வெற்று மாங்கனியாகக் கிடைத்த வரத்துக்கே பயந்தோடிய நீ, மயான ஊழிக்கூத்தை பார்த்திருந்தால் என்ன செய்திருப்பாயோ' என புனிதவதி அம்மையார் உள்ளிட்ட நூலில் இடம்பெற்ற பெண் ஆளுமைகள் உண்மையிலேயே கடிதம் எழுதியிருந்தால் இப்படித்தான் தங்களது வேதனைகளை வார்த்தைகளாய் வடித்திருப்பார்களோ என்று எண்ணும் அளவுக்கு அவர்களது உள்ளத்தின் ரணங்களை நூலாசிரியர் விவரித்துள்ளார்.

பெண்களின் உள்ளுணர்வுகளையும்,  உள்ளக்கிடக்கைகளையும், விருப்பு, வெறுப்புகளையும் நூல் துல்லியமாகப் பதிவு செய்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com