விதியே... விதியே... தமிழச் சாதியை...

விதியே... விதியே... தமிழச் சாதியை...

விதியே... விதியே... தமிழச் சாதியை... - பெ.சிதம்பரநாதன்;  பக்.200, ரூ.170; அன்னம் வெளியீடு,  தஞ்சாவூர்- 613007; ✆9443159371.

தினமணியின் நடுப்பக்கத்தில் வெளியான 26 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். சமூகம், அரசியல், சூழலியல் சார்ந்த இக்கட்டுரைகள் ஒவ்வொன்றும் மானுடத்தின் மனசாட்சியுடன் நிகழ்த்திய உரையாடல்கள்.

சமுதாயத்தின் விவாதப் பொருளாக இருக்கும் பல விஷயங்களை முன்னெடுத்து அதனூடே அறம் சார்ந்த கருத்துகளை எந்த சமரசமும் இன்றி பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். குறிப்பாக, மொழிக் கொள்கை குறித்த கட்டுரையில் தமிழ் வளர மும்மொழி கொள்கை அவசியம் என்பதை ஏற்புடைய வாதங்களால் வலு சேர்த்திருக்கிறார்.

அதேபோன்று குடியுரிமைச் சட்டம், நீட் தேர்வு, வாக்கு வங்கி அரசியல், சட்டப் பேரவை, நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள், பொதுவாழ்க்கையில் ஈடுபடுவோருக்கான வயது வரம்பு என பல முக்கிய விவகாரங்களில் சமூகத்துக்கான குரலை எழுத்தின் வழியே எழுப்பியிருக்கிறார் பெ.சிதம்பரநாதன்.

மதச்சார்பின்மை விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடுவது அநாகரிகமான செயல் எனக் குறிப்பிடும் நூலாசிரியர், தேச நலன் பேசும் கட்சிகளின் சுய நலத்தை வெளிச்சமிட்டு காட்டியிருக்கிறார். இடஒதுக்கீடு என்ற பெயரில் நிகழும் சாதியப் பாகுபாட்டை விளக்கும் வகையில் எழுதப்பட்டிருக்கும் கட்டுரை மீள்வாசிப்புக்குரிய ஒன்று.

ஜனநாயகத்தின் மறையாத வடுக்களையும், அதனூடே நிகழ்த்தப்படும் சமூக, அரசியல் வன்மங்களையும் சமகாலத் தலைமுறைக்கு கடத்தும் முயற்சி இந்நூல். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com