குப்தப் பேரரசு

குப்தப் பேரரசு

குப்தப் பேரரசு - எஸ்.கிருஷ்ணன்; பக்.254; ரூ.300; கிழக்கு பதிப்பகம், சென்னை-14; ✆ 044 4200 9603.

தேசத்தின் பல்வேறு பகுதிகளை எத்தனையோ பேரரசுகளும் சிற்றரசுகளும் ஆட்சி செய்திருக்கின்றன. முதலில் தோன்றிய மெளரியப் பேரரசு கிட்டத்தட்ட நாடு முழுவதையும் ஒரே ஆட்சியின் கீழ் கொண்டு வந்தாலும் அதனால் நீண்ட காலம் அந்த நிலையைத் தக்கவைக்க முடியவில்லை. பல பகுதிகளில் சிற்றரசுகள் ஒன்றோடொன்று போரிட்டுக் கொண்டிருந்த காலத்தில்தான் குப்தர்களின் ஆட்சி அமைந்தது.

மோதல், பகை, போர் என அலைக்கழிந்து கொண்டிருந்த அரசர்கள் பெரிதும் அமைதி காத்தது குப்தர்கள் ஆட்சியில்தான். குப்தர்கள் காலத்தில் காளிதாசர் அமரத்துவம் வாய்ந்த கவிதைகளை வடித்தார் என்றால், கணிதத்தின் கதவுகளை ஆர்யபட்டர் திறந்து வைத்தார். அதுமட்டுமில்லாமல் நிர்வாகம், கலை, இலக்கியம், அறிவியல், வானியல், கணிதம், சமயம் என பல துறைகளில் தேசம் உச்சத்தை தொட்டது. பாடலிபுத்திரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த முதலாம் சந்திரகுப்தர், சமுத்திரகுப்தர், இரண்டாம் சந்திரகுப்தரின் காலம் இந்தியாவின் பொற்காலமாக கருதப்படுகிறது. குப்தர்களின் தோற்றம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும், நாணயங்கள், கல்வெட்டுகள், பிரதிகள் என விரிவான தரவுகளின் அடிப்படையில் குப்தர்கள் ஆட்சியை ஆதாரபூர்வமாக நூலாசிரியர் விளக்கியுள்ளார்.

வரலாற்று நாவல் போல் இல்லாமல் பல தரவுகள் கொண்டு காணப்பட்டாலும், வாசிக்கத் தூண்டும் வகையிலான எழுத்து நடையில் இந்நூல் சிறப்பு பெறுகிறது. இந்திய வரலாற்றை கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் இந்நூல் எண்ணற்ற தரவுகளைக் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com