காதல் சரித்திரம்

காதல் சரித்திரம்

காதல் சரித்திரம் - முகில்; பக்.208; ரூ.288; சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம்; சென்னை-17; ✆ 7200050073.

காதல் சுவாரஸ்யமானது. அதன் கதைகளும் கூட! கதைகளாகப் படிக்கும் காதலே சுவாரஸ்யமாக இருக்குமென்றால், நிஜ காதலில் அதற்குப் பஞ்சமே இருக்காது. காதலர்கள் இடையே வரும் சண்டை, குடும்பம், ஜாதி, மதம் போன்றவையே வழக்கமான தடைகளாக இருக்கும். ஆனால், சமூகம், அரசியல், நிறவெறி, பூகோளம், பிரிவினை உள்பட சற்றும் எதிர்பாராத சவால்களையெல்லாம் கடந்து ஜெயித்த உன்னதமான நிஜ காதல் கதைகளைத் தொகுத்திருக்கிறார் நூலாசிரியர்.

சைக்கிள் பயணத்திலேயே கண்டங்கள் கடந்து சந்தித்த காதல், வாழ்நாள் முழுக்கக் காத்திருந்து கைவிடப்பட்ட நிலையில் கடைசி காலத்தில் சேர்ந்த காதல், ஒரு மாகாணத்தின் சட்டத்தையே திருத்தியெழுதிய காதல் என அனைத்துக் கதைகளும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றன. ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் முன்பாக, அதில் இடம் பெற்ற கதைகளுக்கு ஏற்றாற்போல நற்றிணை, குறுந்தொகை, சிலப்பதிகாரம் என தமிழ் இலக்கியங்களைச் சேர்ந்த பாடல்களை நூலாசிரியர் இணைத்திருப்பது சிறப்பு.

உலக அளவில் நிகழ்ந்த சுவாரஸ்யமான காதல் கதைகளுடன், இந்திய மண்ணின் தொடர்புடைய சத்யஜித் ரே, மகாநந்தியா காதல் கதைகளும் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

போதாததற்கு அன்டார்டிகாவில் நிகழும் ஒரு சுவாரஸ்யமான காதல் கதையை தேடி வைத்ததற்காக நூலாசிரியருக்கு ஒரு சபாஷ்!

சிறு சச்சரவுகளுக்கே பந்தத்தை முறித்துக்கொள்ளும் பல ஜோடிகள் இருக்கும் இந்தத் தலைமுறைக்கு ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு பாடமாகவும், காதல் குறித்த புதிய புரிதலை அளிப்பதாகவும் இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com