ஈழத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம்

ஈழத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம்

ஈழத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம்- முனைவர் இரா.செங்கொடி; பக். 208; ரூ.220; பாரதி புத்தகாலயம், சென்னை-18; ✆ 044- 2433 2424.

ஈழத் தமிழர்கள் போராட்டத்தையும், அகதிகளின் நிலைமையையும் கல்லூரிப் பேராசிரியரான நூலாசிரியர் இந்நூலில் எண்ணற்ற தரவுகளோடு தொகுத்தளித்துள்ளார்.

'தமிழ்ச் சமூகங்களின் வரலாற்றை பேசும்போது, ஈழத் தமிழர்களைப் பற்றி பேசாமல் அவ் வரலாறு முழுமை பெறாது' என்கிறார் கனடாவின் பேராசிரியர் சேரன். அந்த வகையில், ஈழ விடுதலைப் போர் 1983-ஆம் ஆண்டு ஜூலையில் தொடங்கி 2009-இல் முள்ளிவாய்க்கால் படுகொலை வரை இலங்கை அரசின் அடக்குமுறைப் போரால் உயிரிழந்த தமிழர்கள், அகதிகளானோரின் துக்கங்கள், துயரங்கள், இன்றைய நிலைமை போன்றவற்றை துல்லிய வரலாறாகப் பதிவு செய்துள்ள நூலாசிரியரின் பணி அளப்பரியது.

ஈழத் தமிழர்கள் இன்று வரையில் சந்திக்கும் போராட்டங்கள், அன்றாட பாதிப்புகள் மட்டுமன்றி, அவர்கள் வாழ்வாதாரத்துக்காகத் தவறான செயல்களில் ஈடுபடும் நிலை, தாய் மண் ஏக்கம், தற்கொலை முயற்சிகள், பெண்களின் இடர்ப்பாடுகள், மணக்கொடை கொடுமை... என்று நிறை, குறைகளைப் பாகுபாடின்றி பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.

பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, ஐரோப்பா, கனடாவில் அவர்கள் வெளியிட்ட சிற்றிதழ்கள், இணையங்கள் குறித்த கட்டுரையைப் படிக்கும்போது, எந்தச் சூழ்நிலையிலும் தமிழுக்குத் தொண்டாற்றி, ஒருங்கிணைப்பதில் இருக்கும் பாங்கு வியக்கவைக்கிறது.

நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைப் படித்தறிந்து அவற்றிலிருந்த பல்வேறு தகவல்களை 22 கட்டுரைகளில் ஒருசேர அளித்திருக்கிறார் நூலாசிரியர். மேலும், கூடுதல் விவரங்கள் அறிய விரும்புவோருக்காக, ஒவ்வொரு கட்டுரையின் கீழும் துணை நின்ற நூல்களின் பட்டியலை அளித்திருக்கிறார். தமிழ் ஆர்வலர்களுக்கு நல்லதொரு நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com