வேதம் புதுமை செய்த பாரதி

வேதம் புதுமை செய்த பாரதி

வேதம் புதுமை செய்த பாரதி; ஸ்ரீரங்கம் மோகனரங்கன்; பக் - 332; ரூ. 400; சந்தியா பதிப்பகம்; சென்னை -83; ✆ 044 - 24886999.

'வேதம் புதுமை செய்' என்று தனது புதிய ஆத்திசூடியில் குறிப்பிடும் பாரதியார், அந்த வேதத்தை எப்படிப் புதுமை செய்தார் என்பதைப் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்கிறது இந்நூல்.

பாரதியார் ஒரு கவிதையில் (வேண்டும்) குறிப்பிட்டுள்ள 'பெரிய கடவுள் காக்க வேண்டும்' என்கிற வரியை எடுத்துக் கொண்டு, பாரதியார் குறிப்பிடும் 'பெரிய கடவுள்' யார் அல்லது எது என்பதை ஒரு கட்டுரையில் விரிவாக ஆய்வு செய்துள்ளார் நூலாசிரியர்.

தொடர்ந்து, பாரதிக்கும் அரவிந்தருக்குமான தொடர்பு, ஆழ்வார் பாசுரங்களோடு பாரதியாரின் கவிதைகள் ஒப்பீடு. மதம் - யோகம் இவை குறித்த பாரதியாரின் பார்வை போன்ற பலவும் இந்நூலில் தெளிவாக அளக்கப்பட்டுள்ளன.

கடவுள் குறித்து குறிப்பிடும் போது பாரதியார், 'பக்தியாவது தெய்வத்தை நம்புதல் குழந்தை தாயை நம்புவது போலவும், பத்தினி கணவனை நம்புவது போலவும், தான் தன்னை நம்புவது போலவும் தெய்வத்தை நம்ப வேண்டும்' என்று கூறுகிறார்.

'அந்நியர் வந்து புகல் என்ன நீதி ' என்று ஆவேசமாகக் கேட்ட பாரதியார், ' வேல்ஸ் இளவரசருக்கு பரத கண்டத்தாய்' நல்வரவு கூறுவதாக கவிதை எழுதியது ஏன் என்பதை ஒரு கட்டுரையில் விரிவாக விளக்கியுள்ளார் நூலாசிரியர்.

பாரதமாதாவின் எழுச்சி குறித்து தாம் எழுதிய ஓர் ஆங்கிலக் கட்டுரையில் பாரதியார், லலிதா ஸகஸ்ரநாமத்தில் இடம் பெற்றுள்ள சக்தி நாமங்களைக் குறிப்பிட்டிருப்பதாகக் கட்டுரையாளர் குறிப்பிட்டிருப்பதையும் படித்த போது பாரதியாரின் பேருருவை நம்மால் உணர முடிகிறது.

பாரதியார் குறித்து தமிழுலகம் இதுவரை அறியாதிருந்த பற்பல செய்திகளை இந்நூல் வழியே அறிய முடிந்தது.

தமிழும் வட மொழியுமாகிய இரு மொழி பயிற்சியின்றி இந்நூலை ஆக்குதல் சாத்தியமில்லை. பேசாப் பொருளை பேசத் துணிந்த நூலாசிரியருக்கு பாராட்டுகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com