விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா - வரலாற்றுச் சுவடுகள்; டாக்டர் டி.எஸ்.சுரேந்திரன், அ.போ.இருங்கோவேள்; பக் . 562; ரூ.600;கண்ணதாசன் பதிப்பகம்; தியாகராய நகர்; சென்னை - 600 017; 044-24332682.

இந்தியாவின் மேன்மைமிகு கண் மருத்துவமனைகளில் ஒன்றான சங்கர நேத்ராலயா பரிணமித்து வளர்ந்ததையும், அதற்கு வித்திட்ட புகழ்பெற்ற கண் மருத்துவ நிபுணர் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத்தின் வாழ்க்கை வரலாற்றையும் ஒரு சேரக் கூறுகிறது இந்நூல்.

காஞ்சி மகா பெரியவருக்கு கண் புரை அறுவை சிகிச்சை செய்யும் பாக்கியத்தை தனது 33 வயதிலேயே பெற்ற டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத், காஞ்சி பெரியவர் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருளாணையை ஏற்று சங்கர நேத்ராலயா எனும் லாப நோக்கமற்ற மருத்துவ மையத்தை தொடங்கியிருக்கிறார்.

முன்னாள் குடியரசுத் தலைவர்கள் ஆர்.வெங்கட்ராமன், கே.ஆர்.நாராயணன், ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் உள்பட எத்தனையோ ஆளுமைக்கு அளிக்கப்பட்ட உயர் சிகிச்சைகளை அதே தரத்துடன் ஏழை-எளிய மக்களுக்கும் வழங்கியிருக்கிறது சங்கர நேத்ராலயா. சமகாலத் தலைமுறையினர் அறிந்திராத இதுபோன்ற பல முக்கியத் தகவல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

அண்மையில் மறைந்த டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத், விழித்திரை மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படும் டாக்டர் சார்லஸ் எல். ஷீஃப்ஃபென்ஸ் மூலமாக அமெரிக்காவில் சிறப்பு பயிற்சி பெற்று இந்தியாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பார்வையில் ஒளியேற்றிய உண்மை நூலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்பாக கமலா சுப்பாராவ் என்ற பெண்ணுக்கு சங்கர நேத்ராலயாவில் லேசர் சிகிச்சை அளிக்கப்பட்டு பார்வை மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2003-இல் அவர் மறைந்தபோது, தனக்கு இறுதி அஞ்சலி செலுத்த வருபவர்கள் மலர்கள் வாங்குவதற்கு செலவிடும் தொகையை சங்கர நேத்ராலயாவுக்கு நன்கொடையாக செலுத்துங்கள் என கடைசி விருப்பத்தை தெரிவித்திருக்கிறார். அப்போது 5 ஆயிரம் டாலர்கள் மருத்துவமனைக்கு நன்கொடையாக கிடைக்கப் பெற்றதாம். மக்களுக்காக இயங்கும் மருத்துவமனைக்கு மரணத் தருவாயிலும் மக்கள் அன்பை தருவார்கள் என்பதற்கு இதுவே சாட்சியமாக அமைந்திருக்கிறது இந்நூலில்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com