உலகின் சிறந்த நாவல்கள்

உலகின் சிறந்த நாவல்கள்

உலகின் சிறந்த நாவல்கள் - க.நா. சுப்ரமண்யம்; பக். 272; ரூ. 300; மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பிராட்வே, சென்னை - 600 104.

உலகின் சிறந்த 15 நாவல்களைச் சுருக்கமாகத் தருவதுடன், நாவல்களைப் பற்றியும் அவற்றை எழுதியவர்கள் பற்றியுமான அறிமுகத்தையும் செய்கிறார் நூலாசிரியர் க.நா. சுப்ரமண்யம். உலக இலக்கிய நாவல் பரப்பில் எத்தனை விதமான சிருஷ்டிகள் இருக்கின்றன என்பதைத் தமிழ் வாசகர்கள் அறிந்துகொள்ளப் பயன்படும் என்ற நோக்கிலேயே இந்தப் பட்டியலைத் தெரிவு செய்ததாக அவர் குறிப்பிடுகிறார்.

இவற்றில் 'நிலவளம்' போன்ற நாவல்களை முழுவதுமாகவும் க.நா.சு. மொழிபெயர்த்திருக்கிறார். இவையனைத்தும் இதழொன்றில் தொடராகத் தொடங்கிப் பின்னர் நூலாக எழுதி முடிக்கப்பட்டவை. பேர்ல் பக்கின் 'நல்ல நிலம்' உள்பட உலகில் எண்ணற்ற நாவல்களுக்கான மூல ஊற்றாக இருக்கும் நட் ஹாம்சனின் நிலவளம், மற்ற எல்லாம் வந்துபோனாலும் நிலமும் நிலத்தின் வளமும் உழைப்பும் சாசுவதமாக இருக்கின்றன என்கிறது.

மனிதனின் தேடலை மையப்படுத்தியதாகக் கருதப்படும் ஹெர்மன் மெல்விலின் பிரம்மாண்டமான திமிங்கில வேட்டை நாவலைப் பத்து பக்கங்களுக்குள் சுருக்கித் தருகிறார்.

இதுபோலவே டாஸ்டாவ்ஸ்கியின் கரமஸாவ் சகோதரர்கள் நாவலையும் 12 பக்கங்களில் தரும் ஆசிரியர், இதை ஐரோப்பிய நாவல் கலையின் தனிப்பெரும் சிகரம் எனக் குறிப்பிடுகிறார்.

பிரான்ஸ் காஃப்காவின் விசாரணை நாவலை அதன் மைய உணர்வு குலையாமல் ரத்தினச் சுருக்கமாக க.நா.சு. தந்திருக்கிறார். லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா, ஸர் வால்டர் ஸ்காட்டின் ஐவன்ஹோ போன்ற நாவல்களின் அறிமுகங்களும் இடம்பெற்றுள்ளன.

இணையமும் இணையதளங்களும் இல்லாத காலகட்டத்தில் இவ்வளவையும் தேடிப் பிடித்துப் படித்து உணர்ந்து தமிழுக்குத் தந்திருக்கிறார் க.நா.சு. என்பது சிறப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com