பின்னகர்ந்த காலம்

பின்னகர்ந்த காலம்

பின்னகர்ந்த காலம் - வண்ணநிலவன்; பக். 360; ரூ.450; காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்-629001; 04652-278525.

ராமச்சந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட நூலாசிரியரின் அனுபவப் பதிவுகளின் முழு தொகுப்பு. நூலாசிரியரின் ஒரு காலகட்டத்திய வரலாறு, தமிழ் எழுத்துலக வரலாறையும் சேர்த்து பதிவு செய்துள்ளது. திருநெல்வேலி, மதுரை, சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் இலக்கிய, பத்திரிகை பணிகளில் ஈடுபட்ட நூலாசிரியர், இடையே சமகாலத்தைச் சேர்ந்த இலக்கிய இதழ்கள், பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகள், நாவல்கள் பற்றிய குறிப்புகளை ஒவ்வொரு கட்டுரையிலும் பதிவு செய்துள்ளார்.

தி.க.சி., நா.வானமாமலை, வல்லிக்கண்ணன், கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி போன்ற இலக்கிய ஆளுமைகளுடனான தனது அனுபவத்தை இயல்பான எழுத்து நடையில் பகிர்ந்துகொண்டிருப்பது சிறப்பு. "கடல் புரத்தில்' நாவல் உள்பட தனது ஒவ்வொரு படைப்பையும் எழுதத் தூண்டிய விஷயங்களை சுவாரசியமாகப் பதிவு செய்திருப்பதன் மூலம் நூலாசிரியரின் இலக்கிய தாகத்தையும், அபார நினைவாற்றலையும் உணர முடிகிறது. "எழுத்தாளன் முழுநேர எழுத்தாளனாக இருந்தால், அவனுடைய ஜீவனோபாயத்துக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. சிறிது புகழ் இருக்கும். ஆனால், பணமிருக்காது. இதுதான் எழுத்துலகம், இதுதான் இலக்கியம்' என்ற அனுபவ வரிகள் இன்றைய சூழலுக்கும் பொருந்துகின்றன. படிக்கத் தூண்டும் ரசனையுடன் ஒரு நாவல்போல படைத்திருக்கிறார்.

அதேவேளையில், 1970, 80-களின் தமிழ் இலக்கிய, பத்திரிகையுலக சூழலையும், அந்தக் காலத்தில் வெளியான முக்கியமான படைப்புகளையும் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com