சுத்தானந்தரின் சித்தக்குறள் (நயவுரை)

சுத்தானந்தரின் சித்தக்குறள் (நயவுரை)
SWAMINATHAN

சுத்தானந்தரின் சித்தக்குறள் (நயவுரை) - முனைவர் எம்.அல்போன்ஸ்; பக்.168; ரூ.140; வனிதா பதிப்பகம், சென்னை-17; 044- 420670663.

கவியோகி சுத்தானந்த பாரதியார்- கவிஞர், படைப்பாளர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகையாளர், இசைப்புலமைமிக்கவர், தலைசிறந்த இறைஞானமிக்கவர், திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர், திருக்குறளில் அறம், பொருளை அடிப்படையாகக் கொண்டு வாழ்வியல் நெறிகளை குறட்பாக்களாக வடித்தவர் என்று பன்முகத் தன்மைகளைக் கொண்டவர். அறநூல் என்ற பெயரில் முதலில் 375 குறட்பாக்களும், பின்னர் மேலும் 30 சேர்ந்து 405 குறட்பாக்களும் வெளிவந்தன. இவை 'பாரதசக்தி மகாகாவியம்' எனும் நூலில் ஓர் அங்கமாக இடம்பெற்றிருந்தன.

'சுத்தானந்தரின் குறட்பாக்கள் அறநெறி வெளிச்சம் காட்டி அகவிருளை அகற்றக் கூடியவை. அவை சித்தாந்தச் செறிவுமிக்கவை' என்று கூறுகிறார் நூலாசிரியர். சுத்தானந்தரின் குறட்பாக்களுக்கு - அதிகாரத்துக்கு முன்னுரை தருவதுடன் ஆங்கில நூல் மட்டுமின்றி, 'சிவப்பிரகாசரின் பிரபுலிங்க லீலை' உள்ளிட்ட ஒத்தக் கருத்துகளையுடைய நூல்களிலிருந்தும் மேற்கோள் காட்டியிருக்கிறார்.

கடவுள் உருவம் பற்றி பலவாறு குறிப்பிடப்பட்டாலும் ஓங்கார ஒலிவடிவமாகவே சுத்தானந்தர் கண்டதாகக் கூறுவதுடன் சூரியன், சந்திரன் போன்று ஒளியாகவும் விளங்குகிறார். இறைவனுக்கு இலக்கணம் ஒலி, ஒளிதான் இன்பம் தருவன என்றும் விளக்கம் தருகிறார்.

'ஆலுக்கும் பூசணிக்கும் ஆய்ந்து கனி..' என்ற சுத்தானந்தரின் தொடருக்கு உயர்ந்து வளரும் ஆலமரத்துக்கு சிறிய கனியையும் தரையில் படர்ந்து வளரும் பூசணிக்கொடிக்குப் பெரிய பழத்தையும் என்று உரையாகத் தருகிறார். உரையாசிரியரின் உரையலிருந்து அவரின் பட்டறிவு, நூலறிவு, நுண்ணறிவு வெளிப்படுகிறது. ஆகச் சிறந்ததொரு நூல் இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com