மறியல்

மறியல்

மறியல் - மாற்கு, பக்.500; ரூ. 630, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை - 50; ✆ 044 - 26251968.

மாற்குவின் நாவல்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட நிகழ்வின் பின்புலத்தில் சம்பந்தப்பட்ட கள அனுபவங்களைக் கொண்டு சிறப்பாக உருவாக்கப்பட்ட புனைவுகளாக அமைகின்றன. இந்த நாவலும்கூட தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி தலித்துகளுக்கும் ஆதிக்கச் சாதியினருக்கும் இடையே நடந்த நிகழ்வுகளையொட்டிய சித்திரிப்பே.

உள்ளாட்சித் தேர்தல் காலங்களில் மேலவளவு, பாப்பாபட்டி, கீரிப்பட்டி போன்ற இடங்களில் சாதி மோதல்கள் என்ற செய்திகளை மட்டுமே கேள்விப்படுகிறோம். ஆனால், இத்தகைய மோதலை மையப் புள்ளியாகக் கொண்டு விரிவாகச் சொல்லும் இந்த நாவல், தங்கள் சாதி சார்ந்து மக்கள் செயல்படுவதையும் காவல்துறை உள்பட அரசு அமைப்புகளுக்குள் ஊடுருவிக் கிடக்கும் சாதிய மனநிலையையும் காட்டுகிறது.

சிறையிலிருந்து வெளியே வந்ததும் மாதா சுரூபத்தின் முன் நின்று மரியம்மாள் ஆவேசமாக அரற்றுகிற பேச்சு நாவலின் உச்சம். ''தாயி, நாங்க என்ன செஞ்சோம், ஏன் எங்களக் கைவிட்ட?... இம்புட்டு நாளா கண்ணத் திறக்காம எதப் பார்த்துக்கிட்டு இருந்த? செயில்ல ஏன் எம் பிள்ளையக் கொன்னே, உம் பிள்ளனு நெனச்சேனே... எதுக்குக் கொன்னே? நீ தாயிதானா, தாயி இல்ல, தாயே இல்ல, பிள்ளைய கொல்லுற பாதகி, ராட்சசி...'' என்கிறது அந்தப் பேச்சு.

காவல்துறையின் அத்துமீறல்கள் எந்த அளவுக்கு வன்மங்கொண்டு இருக்கும்? கூடவே சாதிவெறியும் சேர்ந்துகொண்டால்... சங்கம் பட்டிக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் அது வெளிப்படுகிறது. அண்மைக்காலத்தில் இந்த அளவுக்கு எந்த நாவலிலும் அத்துமீறல்கள் பதிவு செய்யப்படவில்லை எனலாம். நிறைமாத கர்ப்பிணியான துக்கையா மகள் காளியம்மாளின் கூக்குரல் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

நாவலின் நெடுகிலும் பல இடங்களில் இதுபோன்ற உணர்ச்சிகரமான சித்திரங்கள் நிரம்பி வழிகின்றன. நாவலின் வழி ஒரு வரலாற்றுக் கடமையை ஆற்றியிருக்கிறார் மாற்கு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com