மேடம் ஷகிலா

மேடம் ஷகிலா

மேடம் ஷகிலா - வித்யா.மு, பக். 384, ரூ.480; ஹெர் ஸ்டோரிஸ், ராக்கியப்பா தெரு, சென்னை - 600004.

நெடுந்துயராக தொடரும் பாலின பாகுபாடுகளுக்கும், தேய்ந்து திரிந்து போன மரபுகளுக்கும் எதிரான சாட்டையை எழுத்தின் வழியாக  சுழற்றியிருக்கிறார் நூலாசிரியர். பிரபல தனியார் இதழின் இணையதளத்தில் பல வாரங்கள் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இது.

பெண்ணுரிமையையும், சமத்துவத்தையும் எடுத்துரைக்கும் எழுத்துகள் என்ற அளவோடு நில்லாமல், தகர்த்தெறிய வேண்டிய பழைமைகளையும், ஒழித்தழிக்க வேண்டிய வழமைகளையும் வேறு கோணத்தில் பேசுகிறது இந்நூல். குடும்பம் என்ற அமைப்புக்குள் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அடக்குமுறைகளும், வன்முறைகளும் எளிமையான நடையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

முற்போக்கு இயக்குநர்களாக அறியப்பட்டவர்களின் படைப்புகளிலும் பிற்போக்குத்தனம் பல்லிளிப்பதை பகடி செய்திருக்கும் நூலாசிரியர், குழந்தை இல்லாதது அவமானம் என்ற பொது புத்தி இருக்கும் சமூகத்தில் ஒவ்வொரு முறையும் மகப்பேறு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்லும் பெண், வாழ்வா - சாவா என்ற போராட்டத்தை எதிர்கொள்கிறாள் என ஒரு கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் வரிகள், ஒட்டு மொத்த பெண்களின் வலியை உணர்த்துவதாக உள்ளது.

சமகால சம்பவங்கள், திரைப்படங்கள், முக்கிய நிகழ்வுகள், அரசியல் குறிப்புகள் என நம்மை சுற்றி நிகழும் விஷயங்களின் ஊடாகவே சமூகத்தின் முகத்திரையை திறக்க முற்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. ஆண்கள்,  குழந்தைகள், சிறார்கள், மூன்றாம் பாலினத்தவர் என அனைவரது உடலியல், உளவியல் சிக்கல்களும்கூட சமரசமின்றி விவாதிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com