நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்; மருத்துவர் த.அறம்; பக். 96, ரூ.110, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை-50; ✆ 044-26251968.

அண்மையில் நூற்றாண்டு கண்ட தமிழ் இலக்கிய ஆளுமைகள் தொ.மு.சி. ரகுநாதன், தமிழ் ஒளி, கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன் ஆகியோரை அறிமுகம் செய்கிறது இந்த நூல்.

திருநெல்வேலியில் பிறந்த தொ.மு.சிதம்பர ரகுநாதன் பல்வேறு தளங்களில் சிறப்பாகப் பணியாற்றியவர். நெசவாளர்களின் வாழ்க்கை குறித்த இவரது 'பஞ்சும் பசியும்' நாவல், 'செக்' மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு முதல் பதிப்பிலேயே 50,000 பிரதிகள் விற்பனையானது என்பது வியப்பூட்டும் தகவல்.

தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்பட்ட இடைசெவல் கிராமத்தில் பிறந்த கு.அழகிரிசாமி பல படைப்புகளை வழங்கியவர். பட்டினி கிடந்தாவது படைப்பாளியாக வாழ்வது என்ற தீர்மானத்துடன் சென்னையில் பல பத்திரிகைகளில் பணியாற்றி, பல இடர்ப்பாடுகளுக்கு இடையே தனது இலக்கியக் கனவுகளை நனவாக்கியவர்.

பொதுவுடைமைக் கவிஞரான தமிழ் ஒளியின் போராட்டம் நிறைந்த வாழ்க்கை வரலாறு சுருக்கமாக இருந்தாலும் தெளிவாக உரைக்கப்பட்டுள்ளது. 41 ஆண்டுகளே வாழ்ந்த கவிஞர் தமிழ்ஒளி எளியவர்களின் வாழ்வையும், இன்னல்கள் மிகுந்த தொழில்களைச் செய்யும் தொழிலாளர்களையும் தனது எழுத்தின் மூலம் பதிவு செய்தவர்.

'கரிசல் இலக்கியத் தந்தை' என அழைக்கப்படும் கி.ராஜநாராயணனின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை நூலாசிரியர் சுவைபடத் தொகுத்துள்ளார். கி.ரா.வின் 'கோபல்ல கிராமம்' நாவல், தெலுங்கு பேசும் மக்கள் தமிழகத்துக்கு வந்த கதையைப் பேசுகிறது. அந்த நாவல் உருவாகக் காரணமாக இருந்த தகவல்கள் சுவாரசியமானவை.

நால்வரின் படைப்புகளும் மீள்வாசிப்புக்கு உள்ளாகும் என்கிற நூலாசிரியரின் நம்பிக்கை நிச்சயம் நிறைவேறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com