பொருளின் பொருள் கவிதை

பொருளின் பொருள் கவிதை

பொருளின் பொருள் கவிதை - மா.அரங்கநாதன்; பக்.116; ரூ.120; தேநீர் பதிப்பகம், 24/1 மசூதி பின் தெரு, சந்தைக்கோடியூர் ஜோலார்பேட்டை - 635851; 9080909600.

புனைக்கதை எழுத்தாளராகவும் 'முன்றில்' இலக்கிய இதழைத் தோற்றுவித்து சிறு பத்திரிகை உலகில் தடம் பதித்தவராகவும் அறியப்படுபவர் மா.அரங்கநாதன். கவிதை குறித்த அவரது சில கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.

முன்னுரையில் நகுலன் குறிப்பிடுவதுபோல, 'எது கவிதை எனக் கூறுவது அவ்வளவு எளிதில்லை...கவிதை எது என்பதை எதிர்மறைகளின் மூலமே சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம்..' கவிஞர் அல்லாத மா.அரங்கநாதன் கவிதை பற்றி எழுதிய இந்தக் கட்டுரைத் தொகுப்பில் நல்ல ரசிப்புத்தன்மையோடு இதனை வெற்றிகரமாகவே நிறைவேற்றுகிறார். 'கவிஞன் முழுமையாகப் பார்க்கிறான். அப்படிப் பார்க்கும்போது, அவன் எந்தக் காலத்திலும் இல்லை. அங்கே வாழ்ந்துவிடுகிறான்' என்ற அவருடைய சிறிய வரி கவிஞன் என்பவன் யார் என்று பெரிய வெளிச்சத்தைப் போட்டுக் காட்டிவிடுகிறது.

கவிதை குறித்த அவரது சிந்தனை ஓட்டத்தில் சிறு துளிகள்: 'கவிதையில் வரும் சொற்களின் பொருள் தெரிந்துவிடுவதால் மட்டும் அது உணரப்படுவதில்லை'.

'விளக்கங்களும் விரிவுரைகளும் கவிதையில் கையாளப்பட்ட விஷயத்திற்காகவே இருக்கின்றன - கவிதையம்சத்திற்கு அல்ல. எந்த விளக்கமும் விரிவுரையும் கவிதையம்சத்தை நம் முன் கொண்டு வந்து நிறுத்திவிடாது. கவிஞன் தனது உணர்வை வெளியிட சொற்களை நாடுவது வேறு வழி இல்லாத காரணங்களால்தான். படைப்பின் ரகசியமே கவிதையை உணர்ந்து கொள்வதில் அடங்கிவிடுகிறது. இலக்கிய உலகின் எல்லாவித ஐயப்பாடுகளும் கவிதையை அறிந்து கொள்வதில் இருக்கிறது'.

கவித்துவமான நடையில் கவிதை நாட்டமுடையோருக்கான கவி சிந்தனைகளின் தொகுப்பாக வெளியாகியுள்ளது இந்நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com