நீண்ட ஆயுள் பெற மற்றும் எமபயம் போக்கும் உஜ்ஜீவனநாதர் கோவில், கற்குடி (உய்யக்கொண்டான் மலை)

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 5-வது தலமாக விளங்குவது திருகற்குடி.
நீண்ட ஆயுள் பெற மற்றும் எமபயம் போக்கும் உஜ்ஜீவனநாதர் கோவில், கற்குடி (உய்யக்கொண்டான் மலை)

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 5-வது தலமாக விளங்குவது திருகற்குடி. தேவாரத்தில் கற்குடி. என்று பெயர் பெற்ற இத்தலம், இந்நாளில் உய்யக்கொண்டான்மலை என்று வழங்குகிறது. இத்தலத்தில் வசிப்போரும், இத்தல இறைவனை வழிபட்டு வருபவர்களும் நீண்ட ஆயுளையும், நிறைந்த செல்வங்களையும் பெற்று வாழ்வர். வழிபடுவோருக்கு எமபயம் இல்லை என்று தலபுராணம் கூறுகிறது.

இறைவன் பெயர்: உஜ்ஜீவனநாதர், உஜ்ஜீவனேஸ்வரர்

இறைவி பெயர்: அஞ்சனாட்சி, பாலாம்பிகை

இத்தலத்துக்கு, திருநாவுக்கரசர் பதிகம் ஒன்றும், திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும், சுந்தரர் பதிகம் ஒன்றும் என மூன்று பதிகங்கள் உள்ளன.

எப்படிப் போவது
திருச்சியில் இருந்து தென்மேற்கே 5 கி.மீ. தொலைவில் ஒரு சிறிய குன்றின் மேல் இத்தலம் அமைந்திருக்கிறது.

ஆலய முகவரி

அருள்மிகு உஜ்ஜீவநாத சுவாமி திருக்கோயில்
உய்யக்கொண்டான் மலை
உய்யக்கொண்டான்மலை அஞ்சல்
(வழி) சோமரசம்பேட்டை S.O.
திருச்சி மாவட்டம் - 620 102.

இவ்வாலயம், தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஆலய தொடர்புக்கு: உஜ்ஜீவனேஸ்வரர் திருக்கோவில் தேவஸ்தானம், தொலைபேசி: 0431-2702472, கைபேசி: 94436 50493

புராண வரலாறு 

மிருகண்ட முனிவர் தனக்கு சந்தான பாக்கியம் இல்லாத குறையை நீக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டு தவமிருந்தார். அவரின் தவத்துக்கு இரங்கிய சிவபெருமான் அவர் முன் தோன்றி, உனக்கு உபயோகமில்லாத அறிவற்ற 100 குழந்தைகள் வேண்டுமா அல்லது 16 வயது மட்டுமே வாழக்கூடிய அறிவும், படிப்பும், இறை வழிபாட்டில் சிறந்தும் விளங்கும் ஒரு மகன் வேண்டுமா என்று கேட்டபோது, அறிவில் சிறந்த ஒரு மகன் போதும் என்று வரம் பெற்றார். அதன்படி பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்று பெயர் சூட்டினார். 

மார்க்கண்டேயனுக்கு 16 வயது நெருங்கும்போது, மிருகண்ட முனிவர் அவனுடைய ஆயுள் விவரத்தைக் கூறி, இறைவன் சிவபெருமானைத் தஞ்சம் அடைந்து பூஜிக்கும்படி கூறினார். மார்க்கண்டேயன் பல சிவஸ்தலங்களுக்குச் சென்று ஈசனை வழிபட்டு பின்பு கற்குடி சிவஸ்தலம் வந்து சேர்ந்தான். இத்தலத்தில்தான் மார்க்கண்டேயனுக்கு இறைவன் உஜ்ஜீவனேஸ்வரர் காட்சி கொடுத்து, அவன் என்றும் 16 வயதுடன் சிரஞ்ஜீவியாக வாழ வரம் கொடுத்தார்.

கோவில் அமைப்பு 

தேவாரப் பாடல் பெற்ற காலத்தில் கற்குடி என்றும், தற்போது உய்யக்கொண்டான்மலை என்றும் வழங்கும் சிவஸ்தலம் 50 அடி உயரமுள்ள ஒரு சிறிய குன்றின் மீது அமைந்திருக்கிறது.

குன்றின் அடிவாரத்தில் முருகப் பெருமானின் சந்நிதி உள்ளது. கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோபுர வாழில் வழியே உள்ளே நுழைந்தால், இடதுபுறம் ஞானவாவி தீர்த்தம் உள்ளது. இத்தீர்த்தத்துக்கு எதிரே, ஒரு முகப்பு வாயிலுடன் குன்றின் மேலே ஏற படிகள் தொடங்குகின்றன. குன்றின் பாறைகளில் நன்கு அமைந்துள்ள சுமார் 65 படிகள் ஏறி ஆலயத்தை அடையலாம். 

படிகள் செல்லும்போது இடதுபுறம் விநாயகர் உள்ளார். குன்றின் மீது ஒரு 3 நிலை கோபுரம், 5 பிராகாரங்களுடன் ஆலயம் அமைந்துள்ளது. மூன்று வாயில்களைக் கொண்ட இவ்வாலத்தின் இரண்டு வாயில்கள் தெற்கு நோக்கியும், ஒன்று கிழக்கு நோக்கியும் அமைந்துள்ளன. குன்றின் மேலுள்ள வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன், எதிரே கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றைக் காணலாம். குன்றின் மீது சுற்றிலும் உயர்ந்த மதில்சுவருடன் கூடிய ஆலயம் அழகுற அமைந்திருக்கிறது. 

கொடிமரம் முன்பு மார்க்கண்டனைக் காக்க, எமனைத் தடுப்பதற்காகக் கருவறை விட்டு நீங்கி வந்து நின்ற சுவாமியின் பாதம் உள்ளது. படிகள் ஏறி உட்சென்றால், முதலில் அஞ்சனாட்சி அம்பாள் சந்நிதி உள்ளது. மேற்கு நோக்கிய சந்நிதியில் காட்சி தரும் இவள் பழைய அம்பாள். இத்திருமேனியின் திருக்கரத்திலுள்ள பூவின் இதழ் உடைந்துபோய் உள்ளது. எனினும், அம்பாள் கனவில் வந்து உணர்த்தியவாறு, இப்பழைய அம்பாளை அப்புறப்படுத்தாது அப்படியே வைத்துள்ளனர். இதனால், புதிய அம்பாள் பாலாம்பிகை பிரதிஷ்டை செய்துள்ளனர். புதிய அம்பாள் பாலாம்பிகை சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இரு அம்பாளுக்கும் நித்திய பூஜை நடைபெற்று வருகிறது. அம்பிகைச் சந்நிதிக்கு அருகில் சண்முகர் தனி சந்நிதி அழகானது.

உள் நுழைந்ததும், நேரே கோஷ்ட தட்சிணாமூர்த்தி தரிசனம் தருகிறார். வலமாக வரும்போது நால்வர் பிரதிஷ்டையும், அம்பாளுடன் காட்சி தரும் விநாயகர் சந்நிதியும், மறுபுறம் வள்ளி தெய்வயானையுடன் சுப்பிரமணியர் சந்நிதியும் உள்ளன. கஜலட்சுமி, ஜ்யேஷ்டாதேவி, பைரவர், சூரியன், சனி பகவான் சந்நிதிகளும் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியுடன் துர்க்கையும், பிரம்மாவும், அர்த்தநாரீஸ்வரரும் உள்ளனர். மூலவர் உஜ்ஜீவனேஸ்வரர் மேற்குப் பார்த்த சந்நிதியில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அருகில் இறைவி அஞ்சனாட்சி சந்நிதி உள்ளது. 

இறைவன், இறைவி சந்நிதி தவிர பைரவர், மஹாலக்ஷ்மி, சக்திகணபதி, சூரியன், சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. கோவிலின் உட்புறச் சுவர்களில் சோழ மன்னர்கள் உத்தம சோழன், ராஜராஜ சோழன் ஆகியோர் அளித்த தானங்கள் பற்றிய விவரங்கள் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. பல்லவ மன்னன் நந்திவர்ம பல்லவன் இக்கோவிலுக்குப் பல தானங்களும், திருப்பணிகளும் செய்திருக்கிறான். இத்தலம் நந்திவர்ம மங்கலம் என்றும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. நந்திவர்ம பல்லவனுக்கு இத்தலத்திலுள்ள ஜ்யேஷ்டாதேவியே குலதெய்வம். இந்த ஜ்யேஷ்டாதேவியை தரிசித்தால், விபத்துகளிலிருந்து நம்மை காப்பாற்றுவாள். எப்போதும் விழிப்புடன் இருக்கச் செய்வாள். ராவணனுடைய சகோதரர்களில் ஒருவனான கரன், இத்தல இறைவனை வழிபட்டு அருள்பெற்றான்.

இத்தலம் ஒரு திருப்புகழ் தலம். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது இரு பாடல்கள் உள்ளன. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

தேவார மூவர் என்று போற்றப்படும் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற பெருமையுடைய சிவஸ்தலங்களில் இத்தலமும் ஒன்று. திருநாவுக்கரசர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் கற்குடி இறைவன் உஜ்ஜீவனநாதரைக் கண்ணாரக் கண்டதைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். இப்பதிகம் 6-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இப்பதிகத்தில் இத்தல இறைவனை பலவாறு புகழந்து பாடியுள்ளார்.

1. மூத்தவனை வானவர்க்கும் மூவா மேனி
முதலவனை திருவரையின் மூர்க்கப் பாம்பொன்
றார்த்தவனை அக்கரவம் ஆர மாக
அணிந்தவனைப் பணிந்தடியார் அடைந்த அன்போ
டேத்தவனை இறுவரையில் தேனை ஏனோர்க்கு
இன்னமுதம் அளித்தவனை இடரை யெல்லாம்
காத்தவனைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

2. செய்யானை வெளியானைக் கரியான் றன்னைத்
திசைமுகனைத் திசையெட்டுஞ் செறிந்தான் றன்னை
ஐயானை நொய்யானைச் சீரி யானை
அணியானைச் சேயானை ஆனஞ் சாடும்
மெய்யானைப் பொய்யாது மில்லான் றன்னை
விடையானைச் சடையானை வெறித்த மான்கொள்
கையானைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. 

3. மண்ணதனில் ஐந்தைமா நீரில் நான்கை
வயங்கெரியில் மூன்றைமா ருதத்தி ரண்டை
விண்ணதனி லொன்றை விரிக திரைத்
தண்மதியைத் தாரகைகள் தம்மின் மிக்க
எண்ணதனில் எழுத்தையே ழிசையைக் காமன்
எழிலழிய எரியுமிழ்ந்த இமையா நெற்றிக்
கண்ணவனைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. 

4. நற்றவனைப் புற்றரவ நாணி னானை
நாணாது நகுதலையூண் நயந்தான் றன்னை
முற்றவனை மூவாத மேனியானை
முந்நீரின் நஞ்சமுகந் துண்டான் றன்னைப்
பற்றவனைப் பற்றார்தம் பதிகள் செற்ற
படையானை அடைவார்தம் பாவம் போக்கக்
கற்றவனைக் கற்குடியில் விழுமியானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. 

5. சங்கைதனைத் தவிர்த்தாண்ட தலைவன் றன்னைச்
சங்கரனைத் தழலுறுதாள் மழுவாள் தாங்கும்
அங்கையனை அங்கமணி ஆகத் தானை
ஆகத்தோர் பாகத்தே அமர வைத்த
மங்கையனை மதியொடுமா சுணமுந் தம்மின்
மருவவிரி சடைமுடிமேல் வைத்த வானீர்க்
கங்கையனைக் கற்குடியில் விழுமியானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. 

6. பெண்ணவனை ஆணவனைப் பேடா னானைப்
பிறப்பிலியை இறப்பிலியைப் பேரா வாணி
விண்ணவனை விண்ணவர்க்கு மேலானானை
வேதியனை வேதத்தின் கீதம் பாடும்
பண்ணவனைப் பண்ணில்வரு பயனானானைப்
பாரவனைப் பாரில்வாழ் உயிர்கட்கு எல்லாம்
கண்ணவனைக் கற்குடியில் விழுமியானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. 

7. பண்டானைப் பரந்தானைக் குவிந்தான் றன்னைப்
பாரானை விண்ணாயிவ் வுலக மெல்லாம்
உண்டானை உமிழ்ந்தானை உடையான் றன்னை
ஒருவருந்தன் பெருமைதனை அறிய வொண்ணா
விண்டானை விண்டார்தம் புரங்கள் மூன்றும்
வெவ்வழலில் வெந்துபொடி யாகி வீழக்
கண்டானைக் கற்குடியில் விழுமியானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. 

8. வானவனை வானவர்க்கு மேலானானை
வணங்குமடி யார்மனத்துள் மருவிப் புக்க
தேனவனைத் தேவர்தொழு கழலான் றன்னைச்
செய்குணங்கள் பலவாகி நின்ற வென்றிக்
கோனவனைக் கொல்லைவிடை யேற்றினானைக்
குழல்முழவம் இயம்பக்கூத் தாட வல்ல
கானவனைக் கற்குடியில் விழுமியானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. 

9. கொலையானை யுரிபோர்த்த கொள்கை யானைக்
கோளரியைக் கூரம்பா வரைமேற் கோத்த
சிலையானைச் செம்மைதரு பொருளான் றன்னைத்
திரிபுரத்தோர் மூவர்க்குச் செம்மை செய்த
தலையானைத் தத்துவங்க ளானான் றன்னைத்
தையலோர் பங்கினனைத் தன்கை யேந்து
கலையானைக் கற்குடியில் விழுமியானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. 

10, பொழிலானைப் பொழிலாரும் புன்கூரானைப்
புறம்பயனை அறம்புரிந்த புகலூரானை
எழிலானை இடைமருதி னிடங்கொண்டானை
ஈங்கோய்நீங் காதுறையும் இறைவன் றன்னை
அழலாடு மேனியனை அன்று சென்றக்
குன்றெடுத்த அரக்கன்றோள் நெரிய வூன்றுங்
கழலானைக் கற்குடியில் விழுமியானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

நாவுக்கரசர் அருளிய பதிகம் - பாடியவர் மதுரை மு.முத்துக்குமரன் ஓதுவார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com