குயுக்தி நிபுணர் - துமிலன்

சாதாரணப் பழக்கத்திலுள்ள எத்தனையோ வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் என்ன, அவை எப்படி வந்தன என்று நாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பதில்லை.

சாதாரணப் பழக்கத்திலுள்ள எத்தனையோ வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் என்ன, அவை எப்படி வந்தன என்று நாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பதில்லை. ஒருவன் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தால் ‘வள வள’ என்று பேசுகிறான் என்கிறோம். சப்தம் போட்டு பேசினால் ‘லொட லொட’ என்று பேசுகிறான் என்கிறோம். அப்படிச் சொல்லும்போது வளவள என்றால் என்ன லொட லொட என்றால் என்ன என்பதைப் பற்றில் எண்ணிப் பார்ப்பதில்லை.

குயுக்தி என்பதைப் பற்றி நான் பேச விரும்பியபோது அதற்கு உண்மையான அர்த்தம் என்னவென்று கண்டுபிடிக்க முயன்றேன். தமிழ் நிகண்டில் இந்த வார்த்தை அகப்படவில்லை. தற்கால அகராதிகளில் குட்டர யுதி, குசோக்தி என்றெல்லாம் போட்டிருக்கிறது. ஒரு பண்டிதரை விசாரித்தபோது அவர் ‘யுக்தி’ என்றால் தந்திரம். சாமர்த்தியம் என்று பொருள்படும். அதற்கு ‘கு’ என்ற எழுத்தை முதலில் சேர்த்தால் கெட்ட சாமர்த்தியம் என்று பொருள்படுமெனக்கொள்க’ என்றார். சம்ஸ்கிருதத்தில் ‘கு’ என்றால் கெட்ட என்று அர்த்தமாம். அழகாயிருந்தால் ரூபம் என்கிறோம். விகாரமாயிருந்தால் குரூபம் என்கிறோமே அது மாதிரி.

ஆனால் பேச்சு வழக்கத்தில் இந்த கு…னா யுக்தி விஷயம் அப்படிக் கருதப்படுகிறதில்லை. சாதாரணமாக ஒருவர் ஒரு சம்பாஷணைக்கு வேண்டுமென்றே புதுவிதமாக அர்த்தம் செய்து கொண்டாலும், அல்லது தப்பாக அர்த்தம் செய்து கொண்டாலும் அதைக் குயுக்தி என்கிறோம். குயுக்தி என்னும் போது, அதை மிகவும் வெறுக்கத்தக்க முறையில் உபயோகிப்பதில்லை.

சிறுவர்கள் சில பரீட்சைக் கேள்விகளுக்கு அளிக்கும் பதில்களையே குயுக்தியான பதில்கள் என்று சொல்லலாம். ஒரு பையனை ‘உனக்கும் உன் அண்ணனுக்கும் நான்கு பிஸ்கெட்டுகளைக் கொடுத்து சமமாகப் பங்கு போட்டுக் கொள்ளச் சொன்னால், பேருக்கு எத்தனை வரும்? என்று கேட்கிறோம். ‘எனக்கு 0 வரும்’ என்று பதில் சொல்கிறான். ‘ஆன்ஸர் தப்பு’ என்றால், பையன் ‘என் அண்ணா சங்கதி உங்களுக்குத் தெரியாது. எல்லாவற்றையும் தானே தின்று விடுவான்’ என்கிறான்.

இன்னொரு பையனை, ‘ஏண்டா, உங்க அப்பாவும் அம்மாவும் ஒற்றுமையாக இருப்பார்களா?’ என்று கேட்கிறோம். ‘ஓ! ஒருதரம் வீட்டில் நெருப்புப் பிடித்து இரண்டு பேரும் சேர்ந்தாற்போல் தெருவிலே ஓடினார்கள்’ என்று சொல்கிறான். அவன் வேண்டுமென்று அப்படிச் சொல்லவில்லை. அவன் இப்படிச் சொன்னால் ‘ஹெளலர்’ என்கிறோம். இதையே பெரியவர்கள் சொன்னால் குயுக்தி என்கிறோம்.

சிலருக்கு சுபாவமாகவே எதையும் குயுக்தியாகத்தான் அர்த்தம் எடுத்துக் கொள்ளத் தெரியும். ஒரு சமயம் நான் ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது வண்டி தண்டவாளத்தை விட்டுக் கீழே இறங்கியது போன்று அதிர்ச்சி ஏற்பட்டது. உடனே எங்களுக்கெல்லாம் தூக்கிவாரிப் போட்டது. ஆனால் உண்மையில் அப்படி ஒன்றும் நிகழவில்லை. வண்டியிலிருந்து ஒரு பெரியவர், ‘இதற்கு இப்படிப் பயப்படுத்துகிறீர்களே, ஒரு சமயம் நான் போய்க் கொண்டிருந்த ரயில் தண்டவாளத்திலிருந்து இறங்கி சிறிது தூரம் கீழே போய்க் கொண்டிருந்தது. ஆனால் யாருக்கும் ஒரு விபத்தும் நேரவில்லை’. என்றார்.

‘நிஜமாகவா?’? என்று ஒரே ஒரு பிரயாணி கேட்டார்.

‘நிஜமாக இல்லாமற் போனால் ஒருத்தன் சொல்லுவானா? நான் பொய்யா கூறுகிறேன்?’ என்று அந்தப் பெரியவர் கோபம் தொனிக்க பிரயாணியிடம் சொன்னார்.

அவர் அப்படிச் சொன்னதும் ஆச்சரியத்துடன் பார்த்தார். ‘என்ன ஐயா, என்னை அப்படி வெறித்துப் பார்க்கிறீர். மூஞ்சியில் பொய் சொல்கிறேன் என்று எழுதி ஒட்டியிருக்கிறதா?’ என்று கிழவர் மிகவும் கோபமாகக் கேட்டார்.

‘ஸ்வாமி மன்னிக்கணும். நான் சாதாரணமாத்தான் கேட்டேன். ஒரு விஷயத்தைப் பற்றி ஆச்சரியப்பட்டால் நிஜமாகவா என்று யாரும் கேட்கிறது வழக்கமில்லையா?’ என்று அந்தப் பிரயாணி கூறினார்.

’அப்படியானால் நீங்கள் சாதாரணமாக கேட்டது எனக்குப் புரியவில்லை. நான் சர்வ முட்டாள் என்கிறீரா? எந்தச் சமயத்தில் எப்படிக்கேட்கிற வழக்கம் என்று எனக்குத் தெரியாது என்று நினைகிறீரா? நான் மடையன் என்று சொல்கிறீரா? ஓய், நான் மடையனா, அல்லது நீர்.’

இப்படி எரிந்து விழுந்த கிழவரின் கைகளை அந்த மனிதர் பிடித்துக் கொண்டு ‘நீங்கள் பெரியவாள்…என்று கூறி சமாதானப்படுத்த ஆரம்பித்தார்.

ஆனால் அந்தக் கிழவர் கைகளை உதறிக் கொண்டு, ‘நான் பெரியவரு, கிழவன் என்றா சொல்கிறாய்? கிழவன் உளறுகிறேன் என்று தானே சொல்லப் போகிறாய்?’ என்று ஏக வசனத்தில் ஆரம்பித்துவிட்டார்.

இதுவரையில் நிதானமாக இருந்த அந்த பிரயாணிக்குக் கோபம் வந்து கொண்டிருந்தது. அவர் அந்தக் கிழவரைத் தூக்கி வெளியில் எறிந்து விடுவார் போல் தோன்றிற்று. நான் உடனே அவரை உட்காரச் செய்து கிழவரிடம் சென்று ‘அவர் கிடக்கிறார். நீங்கள் அந்த ரயில் விபத்தைச் சொல்லுங்கள்’ என்றேன்.

‘அவ்வளவுதான். அந்தக் கிழவர், ‘ஏங்காணும் நான் சொல்லமாட்டேன் என்றா சொன்னேன்? அது கிடக்கட்டும். என்னைச் சொல்லும்படி கட்டளையிட நீர் யாருங்காணும்? கதை சொல்வதற்கு நீர் எனக்கு படி அளக்கிறீரா?’ என்று என் மீது பாயத் தொடங்கினார். அந்தச் சமயத்தில் வண்டி ஒரு ஸ்டேஷனில் வந்து நின்றதால் தகறாரு அத்துடன் முடிந்தது.

சதிபதிகளுக்கிடையே குயுக்தி அர்த்தத்தால் அடிக்கடி மனத்தாங்கல் ஏற்படுவதுண்டு. அதன் பயனாய் கடைசியில் மனைவி கண்களைத் துடைத்துக் கொள்ள ஒரு சவுக்கத்தைத் தேடிக் கொண்டிருப்பாள். கணவன் தன் மேல்துண்டை வீசி எறிந்துவிட்டு, அரைவேஷ்டியுடன் சந்நியாசம் வாங்கிக் கொள்ளக் கிளம்பிவிடுவான்.

மாமியாரும் நாட்டுப்பெண்களுக்கும் இடையே குயுக்தி அர்த்தத்தின் பயனாக தகறாரு ஏற்படுவது சர்வ சகஜம். சில தாய்மார்கள் வெளுத்தது எல்லாம் கறந்த பால் என்றும், கறுத்ததெல்லாம் குழாய்த் தண்ணீர் என்றும் நம்பும் சுபாவமுடையவர்களாக இருப்பார்கள். ஆனால் பிள்ளைகளுக்குக் கல்யாணமாகி, நாட்டுப் பெண் என்றொருத்தி வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்ததும் அவர்கள் சுபாவம் மாறிப்போய்விடும்.

நாட்டுப் பெண்ணை உட்கார வைத்துச் சாதம் போட வருவாள். நாட்டுப் பெண், ‘நீங்கள் எதற்குச் சிரமப்படணும்? நானே போட்டுக் கொள்கிறேன்’ என்பாள்.

‘நான் போடுகிறது பிடிக்கவில்லை என்று சொல்லேன்’ என்பாள் மாமியார்.

‘இல்லை! நீங்கள் இப்போ தானே சாப்பிட்டு கையலம்பிவிட்டு வந்தீர்கள்? சிரமமாயிருக்குமே என்று சொன்னேன்’ என்று நாட்டுப் பெண் சமாதானம் கூறுவாள்.

‘ஓஹோ! நீ முன்னாடி கொட்டிக் கொண்டுவிட்டாய் என்று இடித்துக் காட்டுகிறாயாக்கும்?’

நாட்டுப் பெண் ‘இல்லை அம்மா! நான் அப்படி ஒன்றும்…என ஆரம்பித்து மேலே சொல்லமுடியாமல் திண்டாடுவாள்.

பிறகு சிறிது நேரம் இருவரும் மெளனமாயிருப்பார்கள்.

நாட்டுப் பெண் இன்னும் காட்லீவர் ஆயில் சாப்பிட்டுக் கொண்டிருப்பது மாமியாருக்குப் பிடிக்கவில்லை. மருமகள் செக்குலக்கை ஆக வேண்டுமென்று ஆசைப்பட்டுச் சாதத்தை வைத்துத் திணிக்க விரும்புகிறாள். மோருக்குச் சாதம் போடுவதற்காக மாமியார் சிப்பித் தட்டில் நிறைய சாதம் எடுத்துக் கொண்டு வருவாள்.

‘எனக்கு இலையிலே இருக்கிறதே போதும். வேண்டாம்’ என்று நாட்டுப் பெண் கெஞ்சும் பாவனையில் சொல்வாள். அவள் தன் வீட்டில் சாக்லேட்டும், சியூவிங்கம்மும் தின்றே வயிற்றை நிரப்பிக் கொண்டு வந்தவள்!

மாமியார் ‘உன் வயிற்றுக்கு எத்தனை வேணும் என்று எனக்குத் தெரியும். நான் மலடியில்லை. நானும் பிள்ளை பெண் பெற்று வளர்த்திருக்கிறேன். நீ சாப்பிடுகிறதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கேன். எனக்குக் கண் பொட்டையென்று நினைக்காதே’ என்பாள்.

‘நான் அப்படி ஒன்றும் நினைச்சுக் கொள்ளவில்லை அம்மா’ என்று நாட்டுப்பெண் பதிலளிப்பாள். அவளுக்கேற்றபட்டிருக்கும் மனோ வேதனையால் அவள் பேசுவது அவளையும் மீறி சற்று உரத்த சப்தத்தில் இருக்கும்.

‘எனக்குக் காது செவிடாய்விடவில்லை’ ஊர் கூடிப் போய் விடப் போகிறது. ஏன் இப்படிக் கத்தறே? என்றாள் மாமியார்.

நாட்டுப்பெண்ணுக்கு ஏன் வாயைத் திறந்தோமென்று ஆகிவிடுகிறது. அவள் பேசாமல் வாய் திறக்காமல் சாப்பிடுகிறாள். அவளுக்கேற்பட்டிருக்கும் மனோ வேதனையில் மாமியார் ‘ஏதாவது வேணுமா?’ என்று கேட்பது காதில் விழவில்லை.

‘ஒரு பெண் கேட்டதற்குப் பதில் சொல்லாது! அவ்வளவு அலட்சியம்! சொல்லணும் என்று இருக்கிறாயாக்கும்?’ என்று பெரிதாக ஆரம்பித்து விடுகிறாள்.

சில வீடுகளில் நாட்டுப்பெண்கள் இந்த நாடகத்தை மாமியாரிடம் திருப்பி நடத்திக் காட்டுவார்கள்.

இப்படிக் குயுக்தியாகப் பேசுவது குயுக்தியாக அர்த்தம் செய்து கொள்வது அநேகமாக ஒரு வியாதி என்றே சொல்வேன். கோபக்காரர்களிடமும் வியாதிக்காரர்களிடமும் குயுக்தி உணர்ச்சி குடி கொண்டிருக்கும். தாங்கள் பிறரைவிட இளப்பமானவர்கள், மற்றவர்களை விட மட்டமானவர்கள் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களும் பிறர் பேசுவதற்கெல்லாம் தப்பர்த்தம் செய்து கொள்வது வழக்கம்.

ஆனால் குயுக்தியின் நல்ல அம்சங்கள் எத்தனையோ இருக்கின்றன. எதற்கும் பட்டவர்த்தனமாக வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் செய்து கொள்வதோடு திருப்தியடைந்து விட்டோமானால் அப்புறம் உலகத்தில் அபிவிருத்தி என்பதே ஏற்படாது!

குயுக்தியாக யோசனை செய்வது தான் ஆராய்ச்சிகளுக்கெல்லாம் அடிப்படையாக அமைந்திருக்கிறது. ஏன் ஆராய்ச்சி என்கிற வார்த்தையைப் பற்றியே ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள், எப்படித் தெரியுமா? ராக்கியான் என்று ரஷ்ய வார்த்தைக்கு ‘தொட்டிலில் போட்டு ஆட்டுவது என்று அர்த்தமாம். இப்போது ஒரு விஷயத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யும்போது அந்த விஷயத்தைச் சிந்தனையில் வைத்து ‘ஆட்டு ஆட்டு’ என்று ஆட்டுகிறோமாம். அதிலிருந்து ‘ஆராய்ச்சி’ என்ற தமிழ்ப்பதம் ஏற்பட்டதாம். இந்த முடிவை நாம் சரியென்று ஒப்புக் கொள்கிறோமா, இல்லையோ அது வேறு விஷயம். ஆராய்ச்சிக்கு இதுமாதிரி குயுக்தி யோசனை அவசியமென்பதை உணர்கிறோம்.

சட்டங்களுக்கு உள்ளது உள்ளபடி அர்த்தம் செய்தால் அப்புறம் நீதி ஸ்தலத்துக்கோ வக்கீல்களுக்கோ அவசியமிராது. ஆனால் அதே சமயத்தில் மனிதர்களுக்கிடையே பரஸ்பரம் கொடுக்கல் வாங்கல் போன்ற காரியங்கள் சரியாக நடைபெற மாட்டா.

ஒரு சொத்து சம்பந்தமான வழக்கில் டிஸ்ட்ரிக்ட் முன்சீப், சொத்து ராமனுடையதுதான். கிருஷ்ணனுடையது அல்ல என்று தீர்ப்பளிக்கிறார். கிருஷ்ணன் ஜில்லா நீதியபதியினிடம் அப்பீல் செய்து கொள்கிறான். அவரோ சந்தேகமில்லாமல் கிருஷ்ணனுடையதுதான் என்று அபிப்ராயப்படுகிறார். அதற்கு மேலே ஹைக்கோர்ட்டில் அப்பீல் செய்து கொண்டாலோ, கனம் நீதிபதிகள் சொத்து ராமன், கிருஷ்ணன், இரண்டு பேருக்கும் பொதுஎன்று தீர்ப்பளிக்கிறார்கள். ஒரே சட்டம் இப்படியெல்லாம் அபிப்ராயப்பட இடம் கொடுக்கிறது. இந்தத் தீர்ப்புகளை, நாம் மரியாதை உத்தேசித்துக் குயுக்தி அர்த்தம் செய்வது’ என்று சொல்லவில்லை.

சொல்லப்போனால் குறுக்கு விசாரணை முழுதும் குயுக்தி வாதம்தான். நேரான, ஒழுங்கான கேள்வி அநேகமாகக் கேட்கப்படுவதில்லை. ஒரு வழக்கில் ஒரு சாட்சியைக் குறுக்கு விசாரணை செய்யும் எதிர்க்கட்சி வக்கீல், ‘நீர் சென்ற ஜனவரி 20 இரவு என்ன சாப்பீட்டீரென்று ஞாபகமிருக்கிறதா? என்று கேட்கிறார். ‘இத்தனை நாள் கழித்து எப்படி ஞாபகமிருக்கும்?’ என்கிறார் சாட்சி.

‘அப்படியென்றால் ஞாபகம் இருக்க முடியாத நிலைமையில் போதையில் இருந்தீரா? என்று வக்கீல் வாய் கூசாமல் கேட்கிறார்.

சாட்சி, அங்கேயே நீதி ஸ்தலத்தில் வக்கீலை கொலை செய்வதைப் பற்றி யோசனை செய்து கொண்டிருக்கும் போது, வக்கீல் ‘நல்லது! அன்று இரவு உமது ஜீரணப் பை சரியாக வேலை செய்யவில்லை என்று நான் கூறுகிறேன். உண்டு. இல்லை என்று பதில் சொல்லும்! என்று மேலும் கேட்பார்.

ஹாஸ்ய ஆசிரியரும் ஒரு வக்கீலுமான மிஸ்டர் ஏ.பி. ஹர்பர்ட் குயுக்தி வாதத்திற்கு இடமளிக்கும் பல வேடிக்கை வழக்குகள் எழுதியிருக்கிறார். அதில் வரும் ஹாடக் என்பவர் ஒரு சமயம் சர்க்காருக்கு வரிப் பணம் செலுத்த வேண்டியிருக்கிறது. தாம் கொடுக்க வேண்டிய தொகைக்கு ஒரு செக் எழுதி பாங்கியில் கட்டுகிறார். ஆனால் செக் எழுதுவதற்கு என்ன செய்கிறார் தெரியுமா? ‘சர்க்காருக்கு இத்தனை ரூபாய் கொடுக்கவும்’ என்று எழுதி எருமை மாட்டின் மீது எழுதி அனுப்புகிறார். மாடு பாங்கிக்குப் போகும் வழியில் ஜனங்கள் கூடி வேடிக்கை பார்க்கிறார்கள். போலீசார் ஹாடக் மீது நியூசென்ஸ் விளைவித்ததாகக் குற்றம் சாட்டி வழக்குத் தொடுக்கிறார்கள். இது அப்பீலுக்குப் போனபோது அந்த ஹாடக் ‘செக் ஒரு காகிதத்தின் மீதுதான் எழுதி அனுப்ப வேண்டும் என்று எந்தச் சட்டமும் சொல்லவில்லை. அவர் வாதம் என்னவோ உண்மைதான்.

இதுமாதிரி எத்தனையோ குயுக்தி வாதங்கள் செய்ய முடியும். இப்போது அரசியல் அமைப்பின் ஜீவாதார உரிமைகள் ஷரத்துக்களின்படி எந்தக் காரியம் செய்வதற்கும் சுதந்திரம் கொண்டாடுவது ஒரு பாஷனாகிப் போய்விட்டது. இப்போது நானிந்த ரேடியோ மைக்கின் முன்னேயே பேசுவதைச் சற்று நிறுத்திக் கொண்டு, குறட்டை விட்டுத் தூங்கிவிட்டுப் பேசச் சுதந்திரம் உண்டு என்று வாதிக்கலாம். ஏனென்றால் எனக்கும் ஜனாதிபதிக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் (ரேடியோ ஒப்பந்தங்கள், பேசுபவருக்கும் ஜனாதிபதிக்கும் நேரிடையே ஏற்படுவதாக சம்பிரதாயம்) நான் பேச்சு நடுவே தூங்கக் கூடாது, இன்ன வேகத்தில்தான் பேச வேண்டும் என்ற நிபந்தனை கிடையாது.

குயுக்தியாக வாதம் செய்வது போலவே சிலர் காரியங்களும் செய்வார்கள். பிரசித்தி பெற்ற தெனாலிராமன் செய்த காரியங்கள் எல்லாம் குயுக்தி திருவிளையாடல்களே. ஒரு சமயம் அரசர் அவன் மீது கோபித்து, ‘என் கண் முன்னே உன் தலையைக்காட்டாதே!’ என்று கோபித்துக் கொண்டார். உடனே அவன் வெளியே சென்று தலையில் ஓர் ஏற்றச்சாலை கவிழ்த்துக் கொண்டுவந்த கதை உங்களுக்குத் தெரிந்ததே. அது மாதிரி அவன் எத்தனையோ காரியங்கள் குயுக்தியாகச் செய்திருக்கிறான்.

குயுக்தியாகப் பேசுவதும் எழுதுவதும் ஓரளவு ஹாஸ்யத்துக்கு அடிப்படையாக அமைகிறது. ஒரு வார்த்தை அல்லது வாக்கியத்திற்கு இரண்டு அர்த்தம். மூன்று அர்த்தம் கொடுத்து சிலேடையாகப் பேசி ஹாஸ்யமாக மாற்றுகிறோம்.

புத்தியில்லாதவன் என்ற வசவை, ‘புத்தியில் ஆதவன்’ அதாவது சூரியனுக்கொப்பானவன் என்று மாற்றுகிறோம் அது மாதிரி.

காலஞ் சென்ற ஸ்ரீ முத்தய்யா பாகவதர் தாம் செய்யும் ஹரி கதா காலஷேபங்களில் அடிக்கடி சிலேடை உபயோகிப்பதுண்டு. ஒரு பெண் தன் தோழியைப் பார்த்து ‘அழகுள்ள துரை யாரடி?’ என்று பாட்டாக பாடிக் கேட்கிறாள். அந்த அடியை வைத்துக் கொண்டு பாகவதர்,

‘அழகுள்ள துரை ஆறு அடி’

அழகுள்ள துரை யாரடி?

அழ குள்ள துரை ஆறு அடி’

என்று பலவிதமாக அர்த்தம் செய்து பாடுவார்.

ஒரு விஷயத்தைப் பற்றி பட்டவர்த்தனமாகக் கூறாமல் அதை மிகைப்படுத்தியோ குறைத்தோ அல்லது திரித்தோ கூறுவதுஹாஸ்ய இலக்கணத்தின் முக்கியமான விதிகளுல் சிலவாகும். ஆனால் இப்படிச் செய்யும் போது உயந்த ஹாஸ்யம் உண்மையை மறைக்காமலுட்கருத்தைப் பளிச்சென்று எடுத்துக் காட்டுவது வழக்கம்.

ஒரு கவிஞன் பாடும் கவியில் மேலேழுந்தவாறுஒரு பொருளிருக்கும். உள்ளே வேறு பொருள் செறிந்திருக்கும். வியாக்கியான கர்த்தாக்கள் அர்த்தம் செய்ய ஆரம்பித்தால், கவி பாடியவர் மனத்திலேயே படாத பல விஷயங்கள் வெளியாகும். கவி பாடியது பிறகு வியாக்யான கர்த்தா கூறுவது எல்லாம் குயுக்தி என்றே தான் சொல்வேன்.

ஆகையால் குயுக்தி புத்தி என்பது மனிதனுக்கு மிகவும் அவசியம். கலாபிவிருத்திக்கு அத்தியாவசியம். அது இல்லா விட்டாலோ உலகத்தில் ஹாஸ்யமே கிடையாது. ஆனால் அந்த குயுக்தியைப் பிறர் மனம் புண்படாத முறையில், ஆராய்ச்சிக்குத் தேவைப்படும் முறையில் உபயோகிக்க வேண்டும்.

குயுக்தி என்றால் கேவலமான, வெறுக்கப்படத்தக்க ஓர் அம்சம் என்றுதானே நான் பேச ஆரம்பித்தபோது நீங்களும் நானும் எண்ணியிருந்தோம். ஆனால் குயுக்தி மிகவும் பாராட்டப்படவேண்டியது ஓர் அம்சம் என்று நான் நிரூபித்திருக்கிறேன்.

இதுவும் ஒரு குயுக்திதான்!

•••

(20-1-53-இல் சென்னை அகில இந்திய ரேடியோ நிலையத்தாரால் ஒலிபரப்பட்டது)

(தினமணி கதிர்  1-2-1953)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com