நாக்குகள்  

இனிமேல் தேவமூர்த்தியோடு எங்கேயும் வெளியே போகவே கூடாது என்று நினைத்துக் கொண்டாள். அலுவலகத்தில் தங்களையும் மீறி பேசிக் கொள்ள வேண்டி வருவதும், அதன் விளைவான வம்புகளுமே போதும் என்று பட்டது.
நாக்குகள்  

“சாந்தி, நேத்து தான் தங்க மலர் சினிமாவுக்குப் போயிருந்தேண்டி.”
“அப்படியா? நல்லாருக்குதா?”
“ஓ.. ஒரு பணக்காரன் பொண்ணு தன் அந்தஸ்துக்கு கீழே இருக்கற ஒரு வேலைக்காரனை லவ் பண்றாடி. ஆனா பாவம், வழக்கம் போல அவளோட அப்பாவும், அம்மாவும் கலயானத்துக்கு ஒத்துக்கலை. ஆனா கடைசியிலே எப்படியோ ரெண்டு பேரும் ஏதோ ட்ரிக் பண்ணிப் பெரியவங்களைச் சம்மதிக்க வச்சுடறாங்க. அதுதான் கதையிலே சஸ்பென்ஸ்...”
“என்ன ட்ரிக்டி பண்றாங்க?”
“அதைச் சொல்லிட்டா அப்புறம் நாலைக்கு நீ படம் பார்க்கிறப்ப என்ன சுவாரஸ்யம்டீ இருக்கும்? நான் சொல்ல மாட்டேன். நான் என்ன டமில் சினிமா விமர்சனம் எழுதறவன்னு பார்த்தியா? கொஞ்சூண்டு இருக்கற சஸ்பென்ஸையும் விமர்சனத்துலயே சொல்லிப் படம் பார்க்கிறவங்க ஆவலைக் கெடுக்கறதுக்கு?”
“அப்ப நான் தமிழ்ப் பத்திரிகைகள்ளே வர்ற விமர்சனத்தையே படிச்சு சஸ்பென்ஸ் இன்னதுங்கறதைத் தெரிஞ்சுக்கறேன். அதுசரி, சினிமாவில வந்தது மாதிரி நிஜ வாழ்க்கையில நடக்குமாடி, கங்கா?”
“அத்தை யருடி கண்டா? நீ எதுக்குடி கேக்கறே இப்படி ஒரு கேள்வி?”
“வேற ஒண்ணுமில்லேடி, கங்கா, எனக்குத் தெரிஞ்ச பெண்ணு ஒண்ணு ஒரு ப்யூனை லவ் பண்ணுது. அது கிளார்க்காய் இருக்குது. போன வாரம் கூட அவங்களை ரொம்ப நெருக்கத்துல ஒரு கோவில்ல பார்த்தேன்...” இப்படி சொல்லி விட்டு அவள் சிரித்த சிரிப்பில் கங்காவும் கலந்து கொண்டாள்.
கங்காவும், சாந்தியும் சேர்ந்து பேசியதும் கேலியாகச் சிரித்ததும் சற்றுத் தொலைவில் உட்கார்ந்து பத்திரிகை ஒன்றில் ஆழ்ந்திருந்த தன் கவனத்தைத் திருப்பிச் சீண்டித் தன்னைப் புண்படுத்துவதற்குத்தான் என்பது துளசிக்கு நன்றாகவே புரிந்தது.
இருந்தாலும், யாரோ யாரைப் பற்றியோ என்னவோ பேசிக் கொண்டிருப்பதிலும் தனக்குத் துளியும் தொடர்பே இல்லாதது போல் அவள் தன் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு பத்திரிகை படிப்பதில் ஆழ்ந்திருந்தது போல் காட்டிக் கொண்டாள்.
கங்காவும், சாந்தியும் நக்கலாகச்  சிரித்துக் கொண்டே ஒரு சேரத் துளசியின் பக்கம் பார்வையைச் செலுத்தினார்கள், இரண்டு ஜோடிக் கண்கள் தன் மேல் ஊர்ந்து கொண்டிருந்ததால் விளைந்த குறுகுறுப்பைத் தாங்க மாட்டாமல் துளசி இலேசாகத் தலையை உயர்த்திய போது இருவரும் சட்டென்று விழிகலை நகர்த்திக் கொண்டு விட்டார்கள்.
துளசி அங்கிருந்து அகன்று தனது இருக்கைக்குத் திரும்பிப் போனாள். முதுகைத் தொடர்ந்த சிரிப்பொலி அவளை அவமானப் படுத்தியது. ஆனால், அவர்கலை ஒன்றும் செய்வதற்கில்லை. பேசுகிற வாய்களுக்குப் பூட்டா போட முடியும்? சீ”
அந்த அலுவலகத்தில் அவள் வேலையில் சேர்ந்ததற்குப் பிறகு தான் தேவமூர்த்தி அதற்கு முன்னால் வேறு ஏதோ அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தவன் இதே அலுவலகத்துக்குப் பியூனாக வேலைக்கு வந்தான். அவனும் எஸ்.எஸ்.எல்.ஸி வரை படித்திருந்தான். ஆனால் அவனது போதாத காலம் பியூன் வேலை தான் கிடைத்தது. தான் வேலை செய்த அலுவலகத்திலேயே வேலைக்கு வந்தது துளசிக்குப் பிடிக்கவில்லை தான். ஆனாலும் என்ன செய்வது? வங்கிகளில் பியூனானாலும் கை நிறையத்தானே சமபளம் தருகிறார்கள்? அதனால் இருவரும் அது பற்றீப் பேசி முடிவு செய்து கொண்டதன் பிறகே அவன் அதே வங்கியில் வேலைக்கு வந்து சேர்ந்தான்.
நாலுபேருக்கு எதிரில் கூடிய வரையில் தங்கள் உறவு தெரியாத படி பழகுவது என்று தான் தீர்மானித்து வைத்திருந்தார்கள்.
யாரோ தொண்டையைக் கணைத்தது மிக அருகில் கேட்டதால், துளசியின் எண்ணங்கள் கலைந்தன. அவள் பத்திரிகையை மேஜை மேல் போட்டு விட்டுப் பக்கவாட்டில் தலையைத் திருப்பி பார்த்த போது உதவி நிர்வாகி ராமாமிர்தம், “ஏன் அதுக்குள்ள வந்துட்டீங்க? லஞ்ச் டைம் அரைமணியாச்சேம்மா? அதைக் கூட எடுத்துக்கறதில்லையா? மத்தவங்கல்லாம் ஒரு மணி நேரம் எடுத்துக்கிறப்போ , நீங்க மட்டும் கால் மணியிலே வந்துட்டீங்களே? அதுலயும் இன்னைக்கு ரொம்ப சீக்கிரம் போனேன், வந்தேன்னு திரும்பிட்டீங்க?” என்றபடி பக்கத்தில் நின்றார். மரியாதைக்காகத் தானும் எழுந்து நின்ற துளசி, “ லேடீஸ் ரூம்ல இரைச்சல் ஜாஸ்தியாயிருந்தது. எனக்கு இன்னிக்கு கொஞ்சம் தலைவலி, சார். அதுதான் சாப்பிட்டதும், சாப்பிடாததுமாய் திரும்பி வந்துட்டேன்...”
“தலை வலின்னா எதுக்குக் கண்ணுக்கு வேலை குடுக்கறீங்க? பேசாம மேசை மேல தலையைக் கவுத்துண்டு கண்ணை மூடிண்டு சின்னதா ஒரு தூக்கம் போடுங்க. இங்க தான் யாருமே இல்லியே?...’ என்று சொல்லி விட்டு ராமாமிர்தம் நகரத் தொடங்கினார். இரண்டு தப்படிகளுக்குப் பிறகு திரும்பி பார்த்து, லஞ்ச் டயத்துல மட்டுமில்லாம மத்த டயத்துலயெல்லாம் இங்கே எல்லாரும் தூங்கறதை நீங்க பார்த்ததில்லையா என்ன? லேடீஸ், ஜெண்ட்ஸ் எல்லோருமே தான்.” என்று சிரித்து விட்டுப் போனார்.
ராமாமிர்தத்தின் சிரிப்பும், கல கலப்பும் அவள் எண்ணங்களைத் தாற்காலிகமாகவே திசை திருப்பின. மறுபடியும் அவள் தேவ மூர்த்தியைப் பற்றி நினைக்கத் தொடங்கினாள்.
அதற்கு முந்தின நாள் இருவரும் சேர்ந்து கோவிலுக்குப் போனது உண்மை தான். சாந்தியின் வீடும் திருவல்லிக்கேணியில் தான் இருந்தது என்பது அவளுக்குச் சுமார் ஒரு வாரத்துக்கு முன்னால் தெரிய வந்திருந்தது. அங்கிருந்த பெண்களில் யாருடனும் அவளுக்கு அவ்வளவாக நெருங்கிய பழக்கம் இன்னும் ஏற்பட்டிருக்கவில்லை. அதற்கு அவர்களில் யாரும் காரணம் இல்லை. அவளே தான் அவர்களில் யாருடனும் பேசாமல் ஒதுங்கி இருக்கிறாள். தேவ மூர்த்தியையும் தன்னையும் பற்றி யாரெனும், ஏதேனும் கேள்விகல் கேட்டு விட்டால் என்ன செய்வது? என்ற அச்சம் தான் அவள் அப்படி மறவர்களிலிருந்து ஒதுங்கி இருந்ததற்கு காரணம். ஆனால், அந்த ஒதுங்கி இருத்தலே அவள் பால் அவர்கள் தோழமையுணர்ச்சி கொள்ளாமற் போனதோடு நில்லாமல் அவள் காதுகளில் விழ வேண்டும் என்பதற்காகவே போல கேலியாகப் பேசுவதற்கும் கூட காரணமாகி விட்டது.
பார்வைகளும், மற்றவர்கள் பக்கத்தில் இல்லாதபோது ரகசியமாக அவர்கள் முணுமுணுப்பாக பரிமாறிக் கொள்ளுகிற சொற்களும் எவ்வலவு தான் ரகசியமாகச் செய்யப்பட்டவையானாலும், எப்போதேனும் யார் கண்ணிலேனும் படத்தான் செய்து விடுகின்றன. அதிலும் யார் கண்ணில் படக்கூடாது என நினைக்கப் படுகிறதோ அவர்கள் கண்ணில். இப்படி நினைத்த போது அவளுக்கு அந்த வேதனையிலும் சிரிப்பு வந்தது. தேவ மூர்த்திக்கு விரைவில் எங்காகிலும் வேறு வங்கியிலோ அல்லது தனியார் துறைத் தொழிற்சாலையிலோ வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றத் தொடங்கிற்று. ஒரே அலுவலகத்தில் இது போன்ற ஆண் பெண்களின் நடுவில் அவஸ்தப் பட்டுக் கொண்டு நாட்கள் எண்ணுவது இயலாது என்று தோன்றிற்று.
தேவ மூர்த்தி மிகுந்த கூச்சத்துடன் தான் அங்கே வேலைக்கு வந்தான். ஆனாலும் வேறு வேலை என்பது அவ்வளவு இலேசில் கிடைத்து விடக் கூடிய ஒன்றா என்ன? இந்த வேலைக்கே எவ்வளவு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி வந்தது? அதிலும், துளசியே தான் அந்த முயற்சிகளை செய்ய வேண்டியது வந்தது.
இனிமேல் தேவமூர்த்தியோடு எங்கேயும் வெளியே போகவே கூடாது என்று நினைத்துக் கொண்டாள். அலுவலகத்தில் தங்களையும் மீறி பேசிக் கொள்ள வேண்டி வருவதும், அதன் விளைவான வம்புகளுமே போதும் என்று பட்டது. அவளுக்கு மிகுந்த மனவேதனை ஏற்பட்டுக் கண்கள் கலங்கும் போலாயின. அடக்கிக் கொண்டு மறுபடியும் பத்திரிகை படிப்பதிலே ஆழ முயன்றாள்.
...மறுநாள் அவள் சற்றூத் தாமதமாகப் பெண்களின் சாப்பாட்டு அறையினுள் நுழைந்த போது தன் பெயர் மிக மெதுவாக உச்சரிக்கப்பட்டது காதில் விழுந்து அவள் அறைக்குள் உடனே புகுந்து விடாமல் வெளியிலேயே சற்றுத் தயங்கி தாமதித்தாள்.
“அவங்க ரெண்டு பேருக்குள்ளவும் ஏதோ விசயம் இருக்குடி. பக்கத்துல யாரும் இல்லைன்னா, குரலைத் தாழ்த்திப் பேசிக்கிறாங்க. இன்னொண்ணு கவனிச்சீங்களா? துளசி மட்டும் தேவமூர்த்தி கிட்ட வேலை வாங்கறதே இல்லே” இப்படிச் சொன்னது கங்கா தான்.
“வருங்காலக் கனவராச்சே? என்ன தான் காதல்னாலும், ஒரே ஆபீஸ்ல இருக்குற ஒரு பியூனை லவ் பண்ணினா இப்படித்தான் தர்ம சங்கடங்கள் நேரும்...” இது சாந்தி.
“ஓகோ, அப்படின்னா கணவரா ஆனதும் எல்லாத்துக்கும் செர்த்து வேலை வாங்கிடுவாங்கறீங்களாடி?’ என்று பாமா சிரித்தாள்.
 தன்னைப் பற்றிய பேச்சு இத்தனை மும்முரமாக நடந்து கொண்டிருக்கையில், உள்ளே போக அவ்ளுக்கு மனசில்லாமல் போயிற்று. அங்கே உட்கார்ந்து சாப்பிடுகிற சாப்பாடு உடம்பில் ஒட்டாது என்று தோன்றியதில் அவள் திரும்பிப் போய்த் தன் இருக்கையிலேயே உட்கார்ந்து சம்புடத்தைத் திறந்தாள். ‘சீ, என்ன அசிங்கம் இது? உண்மையை நிரந்தரமாக மறைக்க முடியுமா? அதற்குள் தேவமூர்த்திக்கு வேறு வேலை கிடைத்தால் தேவலையே?”
...அன்று வீட்டுக்குப் போன துளசி தன் தாயிடம் எல்லாவற்றையும் சொல்லி வருத்தப் பட்டாள்.
“தேவ மூர்த்திக்கு இது தெரிய வேண்டாண்டி. அப்புறம் இந்த வேலையை விட்டுடப் போறான். வேற வேலை கிடைக்கற வரைக்கும் பல்லைக் கடிச்சுக்கோ... அது சரி, இதே பாங்க் கிளார்க் வேலை கிடைக்க எத்தனை நாளாகும்?”
“அதுக்கு ரொம்ப நாளாகும்மா. அதுவரைக்கும் நான் எல்லாருடைய அசிங்கப் பேச்சையும் தாங்கிக்கணுமா?
“கொஞ்சம் பொறுத்துக்கோடி எனக்காக” என்று அவள் அம்மா கெஞ்சினாள்.
...இவளுடைய சங்கடத்தைப் போக்க வந்தாற் போல், தேவ மூர்த்திக்கு மறு வாரமே வேறொரு வங்கியில் வேலை கிடைத்து விட்டது. அவன் ராஜினாமாச் செய்து விட்டுப் புதிய வங்கியில் சேரப் போவதை எல்லாருடமும் சொன்னான்.
அன்றே தேவமூர்த்தியை விடுவித்து விடத் தீர்மானிக்கப்பட்டதால் பிற்பகலில் ஒரு சின்ன விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. உதவி நிர்வாகி ராமாமிர்தம் தாமே முன்னின்று ஏற்பாட்டைக் கவனித்தார்.
அவர் தனியாக இருந்த நேரத்தில் அவரது அறைக்குச் சென்ற துளசி, “சார், தேவ மூர்த்திக்குப் பார்ட்டி நடக்கறச்சே... எங்க உறவைப் பத்தின உண்மையை நீங்களே எல்லாருக்கும் சொல்லிப் பகிரங்கமாக்கிடுங்க, சார்” என்று கேட்டுக் கொண்டாள். தேவ மூர்த்தி நாஙாம் நிலை ஊழியன் என்ற காரணத்தால் விளைந்த சிறூமையில் அவனது விருப்பப்படியே உறவை மறைத்ததால் நாலு பேரின் கேலிகளுக்கும் வம்புப் பேச்சுகளுக்கும் ஆளானதையெல்லாம் அவரிடம் மனம் விட்டுச் சொல்லி வருத்தப் பட்டாள் துளசி.
விருந்து முடிந்ததும் உதவி நிர்வாகி பேச எழுந்தார். தேவமூர்த்தி அங்கே சேர்ந்து மிகச் சில நாட்களேயானாலும் ஒரு நல்ல ஊழியனாக இருந்தான் என்பதைச் சொல்லி முதலில் பாட்டிப் பேசிய ராமாமிர்தம் பிறகு தொண்டையைக் கனைத்துக் கொண்டு கூறினார்.
“...தேவமூர்த்திக்கும் நம்ம கிளார்க் துளசிக்கும் உள்ள உறவு உங்களுக்கெல்லாம் தெரியாதுன்னு நினைக்கிறேன்...” இப்படிச் சொல்லி விட்டு அவர் சில நொடிகளுக்கு நிறுத்தி விட்டு எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தார். கங்காவும், சாந்தியும் கிளிகிளிப்பை அடக்கிக் கொண்டது வெளிப்படையாகத் தெரிந்ததை துளசி பார்த்தாள். இப்போது அவளுக்கும் சிரிப்பு வரும் போலிருந்தது. ஒரு பெரிய் அபாரம் தன் மீதிருந்து இறக்கப்பட்ப் போவதற்கான விடுதலைப் பெருமூச்சுடன் அவள் தனது நாற்காலி முதுகில் நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள்.
“... என்ன தான் இருந்தாலும் உறவுக்காரப் பையன் மிக நெருங்கிய உறவினன் தான் க்ளார்க்காக இருக்கு அலுவலகத்தில் தனக்கு கீழே பியூனாக வேலை பார்ப்பது எந்தப் பெண்ணுக்கும் சங்கடமான விசயம் தான். அதிலும் அந்தப் பையனுடைய சங்கடம் இன்னும் அதிகமாக இருப்பது மிகவும் இயற்கையான விசயம் தான். அதிலும் அந்தப் பையன் துளசியினுடைய சொந்த அண்ணனாக வேறு இருந்ததால், இருவருக்குமே ரொம்பச் சங்கடம் தான். இல்லையா? இனிமேல் அந்தச் சங்கடம் இருக்காது...”
சாந்தியும், கங்காவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பார்வையில் இருந்தது தப்புக் கணக்குப் போட்ட அவமானமா? வாய்க்கு வந்தபடி பேசிய குற்ற உணர்வா அல்லது அதிர்ச்சியா? என்பதைத் தெரிந்து கொள்ளும் முயற்சியில் துளசி ஈடுபட்ட போது அவளைத் தலை உயர்த்திப்  பார்க்கத் தெம்பிலாமல் போய் இருவரும் கண்களைத் தாழ்த்திக் கொண்டு விட்டார்கள்.

Image courtsy: http://arul76.blogspot.in/2006/11/blog-post.html

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com