70. நம்பனை நால்வேதம் - பாடல் 9

அப்பாற்பட்டவன் பெருமான்
70. நம்பனை நால்வேதம் - பாடல் 9


வேண்டாமை வேண்டுவதும் இல்லான் தன்னை
            விசயனை முன்னசைவித்த வேடன் தன்னைத்
தூண்டாமை சுடர்விடு நற்சோதி தன்னைச்
            சூலப் படையானைக் காலன் வாழ்நாள்
மாண்டோட உதை செய்த மைந்தன் தன்னை
            மண்ணவரும் விண்ணவரும் வணங்கி ஏத்தும்
ஆண்டானை ஆவடு தண்துறையுள் மேய அரன்
            அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே

விளக்கம்:
விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவன் பெருமான் என்பதை உணர்த்தும் வண்ணம் வேண்டாமை வேண்டுவதும் இல்லான் என்று இறைவனை அப்பர் பிரான் குறிப்பிடுவது, நமக்கு வேண்டுதல் வேண்டாமை இலான் என்று திருவள்ளுவர் கூறுவது நினைவுக்கு வருகின்றது. அசைவித்தல் = வருத்தம் உறச்செய்தல்; அயர்வு அடையச் செய்தல். 

பொழிப்புரை:
வேண்டுதல் வேண்டாமை இல்லாதவனாக விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவனாகத் திகழும் பெருமானை. பண்டைய நாளில் வேடுவனாகத் தோன்றி வலிமை மிகுந்த அர்ஜுனனைப் போரில் தோற்கடித்து வருத்தமுறச் செய்தவனை, எவரும் தூண்டாமலே சிறந்த ஒளியுடன் திகழ்பவனை, சூலப்படையை உடையவனை, கூற்றுவனின் வாழ்நாள் முடியுமாறு அவனை காலால் உதைத்து மாள்வித்தவனை, மண்ணுலகத்தில் உள்ளவரும் விண்ணுலகத்தில் உள்ளவரும் வணங்கி வழிபடும் தலைவனும் ஆகிய பெருமானை, ஆவடுதுறை என்று அழைக்கப்படும் குளிர்ந்த தன்மை உடைய தலத்தில் உறையும் பெருமானின் திருவடிகளை அடியார்களுள் கடை நாயாக விளங்கும் அடியேன் அடைந்து, வாழ்வினில் உய்வினை அடைந்தேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com