52. கானறாத கடிபொழில் - பாடல் 6

கங்கை நதியைத் தனது சடையில்

சலவராய் ஒரு பாம்பொடு தண்மதிக்
கலவர் ஆவதின் காரணம் என் கொலோ
திலக நீள் முடியார் செம்பொன்பள்ளியார்
குல வில்லால் மூன்று எய்த கூத்தரே
 

விளக்கம்

சலவர் = ஜலத்தை தாங்கியவர், கங்கை நதியை சடையில் தாங்கியவர். கலவர் = கலந்து அணிபவர். ஒன்றுகொன்று பகையான மூன்று பொருட்களையும், சந்திரன், பாம்பு மற்றும் தண்ணீர் ஆகிய மூன்றையும் ஒரே இடத்தில் கலந்துவைத்த தன்மை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான காரணம் தனக்கு புலப்படவில்லை என்று சொல்லி அந்த காரணத்தை இறைவனிடம் அப்பர் பிரான் வினவுகின்றார்.

குல வில் = சிறந்த வில். அக்னி தேவன் கூறிய முனையாகவும், திருமால் உறுதியான நடுத் தண்டாகவும், காற்று அதன் இறகுகளாகவும் பொருந்திய அம்பு சிறந்த அம்பாகத் தானே இருக்க முடியும். மேரு மலையை வில்லாக வளைத்து அதன் மீது வாசுகி பாம்பினை நாணாக ஏற்றி, மேல் குறிப்பிடப்பட்ட அம்பினைக் கொண்ட வில் சிறந்த வில்தானே. சென்ற பாடலில் அம்பு ஏதும் இன்றி மூன்று கோட்டைகளை எரித்தவன் என்று கூறும் அப்பர் பிரான் இந்த பாடலில் வில்லால் மூன்று கொட்டைகளை எரித்தவன் என்று கூறுகின்றார். திரிபுரங்களை எரித்த செய்தி இந்த இரண்டு விதமாகவும் பல புராணங்களில் சொல்லப் படுவதால், திருமுறைப் பாடல்களிலும் இந்த இரண்டு முறைகளும் குறிப்பிடப் படுகின்றன.

பொழிப்புரை

கங்கை நதியைத் தனது சடையில் தரித்தவராய் விளங்கும் பெருமான், ஒன்றுக்கொன்று பகையுடன் விளங்கிய பாம்பு, சந்திரன், கங்கை நதி ஆகிய மூன்றினையும் ஒரே இடத்தில் கலந்து வைத்ததன் காரணம் என்னவோ? நெற்றியில் திலகத்தினை அணிந்து, நீண்ட முடியினை உடையவராய் விளங்கும் பெருமான், சிறந்த வில்லில் பொருந்திய அம்பு ஒன்றினால் மூன்று கோட்டைகளையும் எரித்தவரும், எப்போதும் நடமாடிக்கொண்டு இருப்பவரும் ஆகிய பெருமான் செம்பொன்பள்ளி தலத்தில் உறைகின்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com