53. கொள்ளும் காதன்மை -  பாடல் 3

மயிலாடுதுறையில் வீற்றிருக்கும்

அண்டர் வாழ்வும் அமரர் இருக்கையும்
கண்டு வீற்றிருக்கும் கருத்து ஒன்றிலோம்
வண்டு சேர் மயிலாடுதுறை அரன்
தொண்டர் பாதங்கள் சூடித் துதையிலே
 

விளக்கம்

துதைதல் = நெருங்குதல். தொண்டர்களின் திருவடிகளைத் தனது தலையில் சூடிக்கொள்வதைவிட வேறு எந்த பேற்றினையும் பெரிதாகத் தான் கருதவில்லை என்று நமக்கு கூறுவதன் மூலம் தொண்டர்கள் பெருமையை நமக்கு அப்பர் பெருமான் இங்கே உணர்த்துகின்றார். தேவர்களின் பதவிகளையும், திருமால், பிரமன், இந்திரன் முதலானோர் இருக்கைகளையும் விட உயர்ந்ததாக, அடியார்களின் திருவடிப்பேறு உள்ளது என்று அப்பர் பிரான் கூறுவதை நாம் இங்கே காணலாம்.

தொண்டர்களையும் அவர்களது கால் துகளினையும் மிகவும் உயர்வாக அருளாளர்கள் கருதினார்கள். குலசேகர ஆழ்வார் திருவேங்கடத்தின் மீது அருளிய ஒரு பாடலில், இந்த எண்ணத்தை வெளிப்படுத்துகின்றார். திருக்கோயிலுக்குச் செல்லும் அடியார்கள் கோயிலில் உள்ள குளத்தில் தங்களது கைகளையும் கால்களையும் சுத்தம் செய்துகொண்ட பின்னர் கோயிலுக்குள் செல்வது வழக்கம். மேலும் வாய் கொப்பளிப்பதும் வழக்கம். கோவிந்தா, வேங்கடவா என்று அழைத்த திருவாய்கள் கொப்பளித்த நீரினை குடிப்பதற்கும் தங்களது கால்களைக் கழுவிக்கொள்ளும் அடியார்களின் திருப்பாதங்களில் இருந்த துகள்களை, அழுக்கினை விருப்பமுடன் சாப்பிடுவதற்கும் விருப்பம் கொண்டு, தான் திருவேங்கடத்தில் உள்ள குளத்தில் வாழும் மீனாகப் பிறக்க வேண்டும் என்று வேங்கடவனிடம் வேண்டுவதை, குலசேகர ஆழ்வாரின் பாடலில் நாம் காணலாம். அரசனாக இருந்தவர், அரச வாழ்க்கையின் துன்பங்களை நன்கு அறிந்தவர் என்பதால், குலசேகர ஆழ்வார் மண்ணரசு வேண்டாம் என்று சொல்வதில் வியப்பு ஏதும் இல்லை. ஆனால் அரம்பை, ஊர்வசி ஆகிய அழகிகள் புடைசூழ இந்திர லோகத்தை ஆளும் வாய்ப்பும் தனக்கு வேண்டியதில்லை, திருவேங்கடச் சுனையில் மீனாகப் பிறக்கும் வாய்ப்பு கிடைத்தால் என்று பாடுவது, எந்த அளவுக்கு தொண்டர்களை சிறப்பாக கருதுகின்றார் என்பதை நமக்கு புலப்படுத்துகின்றது.

ஆனாத செல்வத்தை அரம்பையர்கள் தற்சூழ
வான் ஆளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன்
தேனார் பூஞ்சோலை திருவேங்கடச் சுனையுள்
மீனாய் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே

ஞானசம்பந்தப் பெருமானும் கச்சி ஏகம்பம் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (2.12.8), பெருமானை விரும்பி வழிபடுவார்களை தனது தலை மேல் வைத்துக் கொண்டாடத்தக்கவர்கள் என்று கூறுகின்றார். தீயான் = தீயினை கையில் ஏந்தி நடமாடும் பெருமான்.

தூயானைத் தூய வாய் அம் மறை ஓதிய
வாயானை வாளரக்கன் வலி வாட்டிய
தீயானைத் தீதில் கச்சித் திருவேகம்பம்
மேயானை மேவுவார் என் தலை மேலாரே

அண்டர் = தேவர். அமரர் இருக்கை = திருமால், பிரமன் இந்திரன் முதலாய பல பதவிகள். வண்டுகள் சென்று சேரும் தலம் என்று குறிப்பிடுவதன் மூலம், தேன் நிறைந்து நறுமணம் மிகுத்த பூக்கள் நிறைந்த தலம் என்று தலத்தின் நீர்வளமும் நிலவளமும் இங்கே உணர்த்தப்படுகின்றது.

பொழிப்புரை

தேன் நிறைந்து நறுமணம் மிகுந்த பூக்கள் நிறைந்த தலமாகிய மயிலாடுதுறையில் வீற்றிருக்கும் பெருமானின் தொண்டர்களின் திருப்பாதங்களை நமது தலையில் சூடிக்கொள்ளும் எங்களுக்கு, தேவர்களின் வாழ்க்கையும், திருமால் பிரமன் இந்திரன் முதலாய பதவிகளும் ஒரு பொருட்டல்ல, எனவே அந்த சுகங்களையும் பதவிகளையும் நாங்கள் பெரிதாக ஒருபோதும் கருதமாட்டோம். பெருமானின் தொண்டர்களைப் பேணுவதே, எங்களுக்கு மகிழ்ச்சி தரும் செயலாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com