116. துஞ்சலும் துஞ்சலிலாத - பாடல் 10

திருநீறு அணிபவர்
116. துஞ்சலும் துஞ்சலிலாத - பாடல் 10


பாடல் 10:

    புத்தர் சமண் கழுக்கையர் பொய் கொளாச்
    சித்தத்து அவர்கள் தெளிந்து தேறின
    வித்தக நீறு அணிவார் வினைப்பகைக்கு
    அத்திரம் ஆவன அஞ்செழுத்துமே

விளக்கம்:

அஞ்செழுத்து மந்திரம் திருநீறு அணிபவர்களின் வினைப் பகைக்கு அத்திரமாக செயல்படும் என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். வினைப்பகைக்கு மட்டுமன்றி, அடியார்களின் பகைவரையும் கொல்லக் கூடிய அத்திரமாகவும் செயல்படும் என்பதை உணர்த்தும் நிகழ்ச்சி ஞானசம்பந்தரின் வாழ்வினில் நடைபெற்றதை நாம் பெரிய புராணத்திலிருந்து அறிகின்றோம். 

மதுரையில் அனல் வாதம் மற்றும் புனல் வாதங்களில் சமணரை வென்று சைவ சமயத்தின் புகழினை நிலைநாட்டிய ஞானசம்பந்தர் சோழ நாடு திரும்பும் போது தெளிச்சேரி என்ற தலம் வந்தடைந்து இறைவனைப் புகழ்ந்து பதிகம் பாடுகின்றார். இந்த தலத்து இறைவனை வணங்கி திரும்பி செல்லும் வழியில் போதிமங்கை எனும் இடத்தினை கடந்து சம்பந்தரும் அவரது தொண்டர்களும் சென்று கொண்டு இருந்தனர். தொண்டர்கள் பலவகையான வாத்தியங்கள் முழங்கியும், பரசமய கோளரி (சம்பந்தரின் பல பெயர்களில் ஒன்று) வந்தான் என்று முழங்கிக் கொண்டும் சென்ற நிலை அங்கு இருந்த புத்த குருமார்களுக்கு எரிச்சலையும் பொறாமையையும் ஏற்படுத்தியது. அவர்கள் தங்களது தலைவன் புத்த நந்தி என்பவரிடம் சொல்ல அவர் சம்பந்தரின் தொண்டர்களை அணுகி புத்தர்கள் வாதினில் வெல்லாமல் ஆரவாரம் செய்ய வேண்டாம் என்று கூறி ஞானசம்பந்தரின் தொண்டர்கள் எடுத்துச் சென்ற சின்னங்கள் ஊதுவதை தவிர்க்க முயன்றான். இதனை தொண்டர்கள் சம்பந்தருக்கு அறிவிக்க அவர் புத்தநந்தியின் கொள்கையின் உண்மையான கோலத்தை நாம் காட்டுவோம் என்று கூறினார்.

இதனிடையில் சம்பந்தரில் அருகில் இருந்துகொண்டு அவர் அருளும் பதிகங்களை எழுதும் சம்பந்த சரணாலயர் என்ற தொண்டர், சம்பந்தர் ஏற்கனவே அருளிய பதிகம் ஒன்றினை பாட முடிவு செய்தார். கயிறு சாத்துதல் முறையில் ஒரு பதிகம் தேர்ந்து எடுத்தபோது, இறைவன் திருவருளால், இந்த பாடல் வந்தது என்று கூறுவார்கள். புத்தநந்தி எதிர்த்துப் பேசிய போது சம்பந்த சரணாலயர் பாடிய பாடல், எந்தப் பாடல் என்பது குறித்து ஏதும் குறிப்புகள் பெரியபுராணத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் செவிவழிச் செய்திகள், மேற்கண்ட பாடலைப் பாடியதாக குறிக்கின்றன. பொறுக்க மாட்டாத சொற்களைப் பேசிய புத்தநந்தி தலயின் மீது இடி விழக்கடவது என்று சம்பந்த சரணாலயர் கூறியதாக பெரிய புராணத்தில் கூறப்பட்டுள்ளது

சிவ அபராதம் செய்த தக்கனின் வேள்வியில் பங்கேற்றவர்கள் தண்டனை அடைந்ததும் அல்லாமல், தக்கனும் தனது தலை இழந்தான். அதைப்போல் சைவ மதத்தை இழிவாக பேசிய புத்தர்களின் தலைவன் தலையில், அவனை அழிக்கும் அத்திரமாக இடி விழுந்தது. திருநீறு அணிபவர்களுக்குத் தனித் திறமையை தரக் கூடிய மந்திரம் பஞ்சாக்கர மந்திரம் என்று சம்பந்தர் கூறியது உண்மையாக மாறியதை நாம் உணரலாம். 

இந்த பதிகத்தில் சம்பந்தர் சமணர்களை கழுக்கையர் என்று குறிப்பிடுகின்றார். பாண்டிய மன்னனுக்கு வந்த வெப்பு நோயினைத் தீர்ப்பதற்கு தாங்கள் செய்த முயற்சியிலும், அனல் வாதத்திலும் தோல்வி அடைந்த சமணர்கள் ஞானசம்பந்தரை புனல் வாதத்திற்கு அழைத்தனர். அப்போது குலச்சிறையார், ஏற்கனவே இரண்டு முறை தோற்ற சமணர்கள் மூன்றாவது முறையும் தோற்றால் என்ன செய்வது என்று கேட்க, சமணர்கள், புனல் வாதத்திலும் தங்களுக்கு தோல்வி ஏற்பட்டால் தாங்களே முன் வந்து கழு ஏறுவதாக சபதம் செய்தனர். இதனை கேட்ட மன்னன் சினத்தினால் ஆட்கொள்ளப்பட்டு பேசுவது அறியாமல் பேசுகிறீர் என்று சமணர்களை பார்த்து கூறிய பின்னர், புனல் வாதம் செய்ய அனைவரும் வைகை கரைக்கு செல்வோம் என்று கூறினான்.

தங்களது சமயத்துக்கு கொள்கைக்கு இழுக்கு நேர்ந்தாலும் தங்களது சமயத்துக்கு தீங்குகள் வந்தாலும், அதனைத் தாங்க முடியாமல் கழுவினை நாட்டி அதன் மேல் பாய்ந்து உயிரைத் துறக்க வேண்டும் என்பது சமணசமயத்தின் கொள்கையாக பண்டைய நாளில் இருந்து வந்தது. அதனால் தான் அவர்கள், தாங்கள் புனல் வாதத்திலும் தோற்றால் கழு ஏறி உயிர் விடுவதாக தாங்களே முன்வந்தனர். சமணர்களின் இந்த பண்பினை இந்த பாடலில் சமணர்களை கழுக்கையர் என்று குறிப்பிடுவதன் மூலம் சம்பந்தர் உணர்த்துகின்றார். எனவே மதுரையில் சமணர்கள் கழு ஏற்றப்பட்டதற்கு சம்பந்தரை குறை கூறுவது தவறாகும். வித்தக நீறு=திறமையைத் தரும் திருநீறு; வினைப்பகை=வினைகளை உயிரின் பகையாக சம்பந்தர் இங்கே கூறுகின்றார். உயிரின் எண்ணத்திற்கு விருப்பத்திற்கு மாறாக வினைகள் செயல்பட்டு உயிரினை மீண்டும் மீண்டும் பிறவிக் கடலில் ஆழ்த்துவதால், வினைகள் உயிரின் பகையாக கருதப் படுகின்றன. அத்தகைய கொடிய வினைகளை அழிக்கும் படையாக ஐந்தெழுத்து மந்திரம் செயல்படும் என்பது இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.
  
பொழிப்புரை:

புத்தர்கள் மற்றும் தாங்கள் கொண்டிருந்த கொள்கைகள் தவறு என்று நிரூபணம் ஆனால் கழு ஏறுவதற்கு தயாராக இருந்த சமணர்களும் கூறும் பொய் வார்த்தைகளை மனதினில் கொள்ளாது தெளிந்த மனத்தர்களாக உறுதியாக செயல்படும் அடியார்களால் ஓதப்படுவன ஐந்தெழுத்து மந்திரமாகும். சகல வல்லமையும் பெற்றுத் தரும் திருநீறு அணியும் அடியார்களின் வினைகளுக்கு பகையாக விளங்கி அந்த வினைகளை அழிக்கும் அத்திரமாக செயல்பட்டு உயிர்களுக்கு முக்தி அளிப்பன திருவைந்தெழுத்து ஆகும்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com