117. காடது அணிகலம் - பாடல் 6

சிவபிரானின் அழகினையும்
117. காடது அணிகலம் - பாடல் 6

பாடல் 6:

    சாத்துவர் பாசம் தடக்கையில் ஏந்துவர் கோவணம் தம்
    கூத்தவர் கச்சுக் குலவி நின்று ஆடுவர் கொக்கிறகும்
    பேர்த்தவர் பல்படை பேயவை சூடுவர் பேரெழிலார்
    பூத்தவர் கைதொழு பூந்தராய் மேவிய புண்ணியரே

விளக்கம்:

சாத்துவர் கோவணம், பாசம் தடக்கையில் ஏந்துவர், தம் கூத்தவர், கச்சுக் குலவி நின்று ஆடுவர், கொக்கிறகும் சூடுவர், பேர்த்தவர் பல்படை பேயவை என மொழிகளை மாற்றி அமைத்து பொருள் கொள்ளவேண்டும். கொக்கிறகு=கொக்கின் உருவத்தில் மற்றவருக்கு துன்பம் செய்து கொண்டிருந்த குரண்டாசுரன் என்ற அசுரனைக் கொன்றதன் அடையாளமாக பெருமான் தனது தலையில் சூடிக் கொண்ட இறகு; பேர்த்தவர்=காலினை பெயர்த்து நின்று நடனமாடியவர்; சில பதிப்புகளில் போர்த்தவர் என்று காணப்படுகின்றது. பூத கணங்கள் சூழ நின்றவர் என்று பொருள் பட போர்த்தவர் என்ற சொல்லுக்கு விளக்கம் அளிக்கப் படுகின்றது. பேரெழிலார் என்ற சொல்லினை பூந்தராய் என்ற சொல்லுடன் இணைத்து பேரெழில் வாய்ந்த பூந்தராய் என்று ஒரு விளக்கமும், பேரெழிலார் என்ற சொல் பெருமானை குறிக்கும் சொல்லாகக் கொண்டு பேரெழில் படைத்த பெருமான் என்று மற்றொரு விளக்கமும் அளிக்கப் படுகின்றது. தடக்கை=அகன்ற கை; பூத்தவர்=பூ+தவர், பூ= சிறந்த; தவத்தவர்=தவத்தினை உடையவர்கள்; இந்த பாடலில் சம்பந்தர் கச்சு குலவி நின்று ஆடுவர் என்று கூறுகின்றார். குலவி=விளங்கித் தோன்றும் வண்ணம்; நடராஜப் பெருமானின் நடனத் தோற்றத்தை காணும் நாம் அவரது இடுப்பினில் அணிந்துள்ள கச்சின் ஒரு முனை வெளிவட்டத்தை தொடும் நிலையில் அமைந்துள்ளதை காணலாம். பொதுவாக நிலையாக நிற்கும் ஒருவரின் இடுப்புக் கச்சு தரையை நோக்கியே சரிந்து காணப்படும். ஆனால் இடைவிடாது நடனம் ஆடும் பெருமானின் கச்சும், அவரது நடனச் சுழற்சிக்கு ஏற்றவாறு ஆடுவதால், கீழ்நோக்கி சரிந்து நில்லாமல் பறக்கும் நிலையில் காணப்படுகின்றது. இதனையே விளங்கித் தோன்றும் கச்சு என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார்.     

தம் கூத்தவர் என்று ஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். பெருமான் ஆடும் கூத்து அவருக்கே உரியது; வேறு எவராலும் ஆடமுடியாத கூத்து என்று இதன் மூலம் உணர்த்தப் படுகின்றது. இவ்வாறு ஞானசம்பந்தர் கூறுவது நமக்கு அப்பர் பிரானின் தில்லைப் பதிகத்து பாடல் ஒன்றினை நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் (4.81.6) அப்பர் பிரான், நடனத்தில் பெருமானை விடவும் அழகாக நடனம் ஆடுபவர் வேறு எவரேனும் உள்ளரோ என்ற கேள்வியை எழுப்புகின்றார். பொற்சடை=பொல்+சடை. பொலிகின்ற சடை., புரி கணம்= விரும்பும் அடியார் கூட்டம். ஆர்த்தல்=ஆரவாரம் செய்தல். அரித்தல்=வாத்தியங்கள் முழங்குதல். இந்த பாடல் ஒரு தாயின் கூற்றாக அமைந்துள்ளது. நடமாடும் சிவபிரானின் அழகினையும், அவனது நடனத்தின் நேர்த்தியையும் காணும் தாய், நடனத்தில் சிறந்த ஒருவனே தனது மகளுக்கு கணவனாக வரவேண்டும் என்று விரும்பிய தாய், சிவபிரானை விட நடனத்தில் சிறந்தவர் வேறு எவரும் உளரோ என்று வியப்படைகின்றாள். 

    பூத்தன பொற்சடை பொன்போல் மிளிரப் புரி கணங்கள்
    ஆர்த்தன கொட்டி அரித்தன பல் குறட் பூத கணம்
    தேத்தென என்று இசை வண்டுகள் பாடு சிற்றம்பலத்து
    கூத்தனில் கூத்து வல்லார் உளரோ என்றன் கோல் வளைக்கே

பொன் போல் பூத்துக் குலுங்கும் பொலிவுடைய சடையை உடைய சிவபிரானது நடனம் கண்டு அவரை விரும்பும் அடியார் கூட்டம் ஆரவாரம் செய்ய, பூத கணங்கள் பல வகையான வாத்தியங்கள் கொண்டு முழங்க, வண்டுகள் தேம் தேம் என்று இசை பாட குளிர்ந்த சோலைகள் கொண்ட சிற்றம்பலத்தில் நடனமாடும் சிவபிரானை விடவும் நடனத்தில் உயர்ந்தவர் எவரேனும் என் மகளுக்கு கணவராக வர தகுதி படைத்தவராக உள்ளாரோ என்பதே இந்த பாடலின் திரண்ட பொழிப்புரை. 

பேய்களுடன் இணைந்து கூத்து ஆடுபவர் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். தமக்கே உரிய கூத்து என்று இரண்டாவது அடியில் கூறியதற்கு ஏற்ப விளக்கமாக பேய்களுடன் ஆடும் கூத்து என்று குறிப்பிடுகின்றாரோ என்று தோன்றுகின்றது. பேய்களுடன் இணைந்து ஆடப்படும் நடனம் எவ்வளவு கடினமானது என்பதை அப்பர் பிரான் குறிப்பிடும் இன்னம்பர் தலத்து பாடல் (4.100.3) நமது நினைவுக்கு வருகின்றது. நடனக்கலை என்றால் என்ன என்று அறியாதன பேய்கள். எனவே எப்படி ஆடுவது என்பது குறித்து அவைகளின் இடையே ஒத்த கருத்து எழவில்லை. அதனால் ஒருவர் ஆட்டத்திற்கும் மற்றொருவர் ஆட்டத்திற்கும் இடையே ஒற்றுமை ஏதும் இல்லாமல் நெறிமுறை தவறி ஆடிய ஆட்டம். இத்தகையவர்களுடன் கூடி ஆடுவதே கடினம்; அதிலும் அவர்களின் நடனத்துடன் இணைந்து ஆடுவது என்பதை நம்மால் நினைத்துப் பார்க்கவே முடியாது. ஆனாலும் சிவபிரான் பேய்களுடன் இணைந்து சாமர்த்தியமாக ஆடியதாக அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.

    சுணங்கு நின்று ஆர் கொங்கையாள் உமை சூடின தூமலரால்
    வணங்கி நின்று உம்பர்கள் வாழ்த்தின மன்னு மறைகள் தம்மில்
    பிணங்கி நின்று இன்ன என்று அறியாதன பேய் கணத்தோடு
    இணங்கி நின்று ஆடின இன்னம்பரான் தன் இணை அடியே 

பொழிப்புரை: 

கோவணத்தைத் தனது ஆடையாக ஏற்றுக்கொண்டுள்ள பெருமான், தனது அகன்ற திருக்கரத்தில் பாசம் எனப்படும் ஆயுதத்தை ஏந்தியவர்; சிறப்பான கூத்தினை தமக்கே உரியதாக கொண்டுள்ளவர் பெருமான். எப்போதும் நடனம் ஆடிக்கொண்டிருக்கும் பெருமானின் இடையில் காணப்படும் கச்சு, பறக்கும் நிலையில் விளங்கித் தோன்றுகின்றது. பல படைகளாக விளங்கும் பூதகணங்களுடன் இணைந்து நின்று அடி பெயர்த்து நடனம் ஆடும் வல்லமை படைத்த பெருமான் பேரெழிலுடன் விளங்குகின்றார். இத்தகைய தன்மைகள் கொண்டுள்ள பெருமான், புண்ணியமே வடிவமாக உள்ள பெருமான், சிறப்பு வாய்ந்த தவத்தினை உடைய முனிவர்கள் தங்களது கைகளால் தொழும் வண்ணம், பூந்தராய் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரினில் பொருந்தி உறைகின்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com