113. வானமர் திங்களும் நீரும் - பாடல் 7

அப்பர் பிரான்
113. வானமர் திங்களும் நீரும் - பாடல் 7

பாடல் 7:

    பலி கெழு செம்மலர் சாரப் பாடலொடு ஆடல் அறாத
    கலி கெழு வீதி கலந்த கார்வயல் சூழ் கடம்பூரில்
    ஒலி திகழ் கங்கை கரந்தான் ஒண்ணுதலாள் உமை கேள்வன் 
    புலி அதள் ஆடையினான் தன் புனை கழல் போற்றல் பொருளே

விளக்கம்:

பலி என்ற சொல் இங்கே பூஜை என்ற பொருளில் வந்துள்ளது. செம்மலர்=செம்மையான மலர்கள், சிறந்த பூக்கள்; அறாத=நீங்காத; சார=அடைய; கலி=மகிழ்ச்சியால் பெருகும் ஒலி; கார்வயல்=நீர் நிறைந்த வயல்; ஒண்ணுதல்=ஒளி மிகுந்த நெற்றி; பெருமானைத் துதியாமல் தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை வீணாக கழித்ததாக அப்பர் பிரான் வருந்தும் பாடல் (5.90.7) நமது நினைவுக்கு வருகின்றது. சூழ்த்த=சூழ்ந்த, நறுமணம் மிக்க உடையதால் வண்டுகளால் சூழப்பட்ட மலர்கள், மாமலர்=ஆராய்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மலர்கள், வீழ்த்துதல்=வீணாக கழித்தல்; அனைத்து உயிர்களையும் பற்றியிருக்கும் ஆணவமலம் இறைவனைப் பற்றிய சிந்தனைகள் நாம் செய்யவிடாமல் தடுக்கின்றன. அதனால் அறியாமையில் மூழ்கியிருக்கும் நெஞ்சினை, மடநெஞ்சம் என்று இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். நாம் இறைவனைப் பற்றி நினைத்தால், ஆணவ மலத்தால் ஏற்பட்டுள்ள அறியாமை அகலும். எனவே நமது நெஞ்சம் இறைவனை நினைக்க வேண்டும் என்று கூறுகின்றார்.

    வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும்
    தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை
    சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
    வீழ்த்தவா வினையேன் நெடும் காலமே

பொழிப்புரை:

பெருமானுக்கு அர்ச்சனை செய்வதற்காக செம்மையான மலர்கள் கொண்டு வரும் அடியார்கள் நிறைந்ததும், தலத்து மக்கள் பாடியும் ஆடியும் எழுப்பும் மகிழ்ச்சி ஒலிகள் நீங்காது ஒலிக்கும் வீதிகள் உடையதும், நீர் நிறைந்த வயல்கள் நிறைந்ததும் ஆகிய  கடம்பூர் தலத்தில் வீற்றிருப்பவனும், பெருத்த ஒலியுடன் வானிலிருந்து கீழே இறங்கிய கங்கை நதியினைத் தனது சடையினில் மறைத்தவனும் ஒளி வீசும் நெற்றியினை உடைய உமையன்னையின் கணவனும் புலித்தோல் உடுத்தவனும் ஆகிய பெருமானின் திருப்பாதங்களை, கழல்களால் அழகு பெற்று விளங்கும் திருவடிகளை போற்றுவதே பொருள் உடைய செய்கையாகும்.         

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com