114. உரையினில் வந்த பாவம் - பாடல் 3

திருவாஞ்சியம் தலம்
114. உரையினில் வந்த பாவம் - பாடல் 3

பாடல் 3:

    ஊரிடை நின்று வாழும் உயிர் செற்ற காலன் துயர் உற்ற தீங்கு விரவிப்
    பாரிடை மெள்ள வந்து பழியுற்ற வார்த்தை ஒழிவுற்ற வண்ணம் அகலும்
    போரிடை அன்று மூன்று மதில் எய்த ஞான்று புகழ் வானுளோர்கள் புணரும்
    தேரிடை நின்ற எந்தை பெருமான் இருந்த திருநாரையூர் கை தொழவே

விளக்கம்:

ஊர்=உடல்; உயிர் நின்று வாழும் இடம் உடல் ஆதலால், இங்கே உடலை உணர்த்தும் வண்ணம் ஊர் என்ற சொல் கையாளப்பட்டுள்ளது. ஒருவரது ஆயுட்காலம் என்ன என்பதும் அந்த பிறவியில் அவர் நுகர வேண்டிய வினைகளின் தன்மையும் அளவும் இறைவனால் நிர்ணயிக்கப் படுகின்றன. அவ்வாறு குறிப்பிடப்பட்ட நாளில், உயிர்களிலிருந்து உடலை பிரிப்பது இறைவனால் இயமனுக்கு அளிக்கப்பட்ட பணி. ஆனால் நாம் இந்த உண்மையை புரிந்து கொள்வதில்லை. இந்த பாடலில் காலன் இறைவனை வழிபாட்டு, கோடிக் கணக்கான உடல்களிலிருந்து உயிரினைப் பிறப்பதால் தனக்கு ஏற்படும்  பழிச் சொல்லினை போக்கிக் கொள்வதற்காக இறைவனை வணங்கி அவனது அருள் பெற்றான் என்று கூறப்பட்டுள்ளது. இந்த செய்தி நமக்கு திருவாஞ்சியம் தலத்து புராணத்தை நினைவூட்டுகின்றது. இயமன் தான் உயிரை உடலிலிருந்து பிரிக்கும் பணியைச் செய்வதால் அனைவராலும் வெறுக்கப் படுவதையும், தனது பணியின் காரணமாக தான் அடையும் பழியினை தாங்க முடியாமல் மனவருத்தம் அடைவதையும் திருவாரூர் தியாகேசப் பெருமானிடம் முறையிட்டான். அவனுக்கு அருள் புரிய திருவுள்ளம் கொண்ட பெருமான், அவனை திருவாஞ்சியம் தலம் சென்று வழிபடுமாறு ஆலோசனை கூறினார். இயமனும் அவ்வாறே செய்ய, அன்று முதல் இயமனும் பழிச் சொல்லிலிருந்து தப்பினான் என்று கூறுவார்கள். நாமும் அன்றாட வாழ்க்கையில் இதனை காண்கின்றோம். இறந்தவரின் வீட்டுக்கு சென்று துக்கம் விசாரித்தால் எவரும் அவரது காலம் முடிந்து விட்டது என்றோ இயமன் உயிரைப் பறித்தான் என்றோ கூறுவதில்லை. ஏதோ ஒரு நோயின் பெயரினை குறிப்பிட்டு அதனால் இறந்தார் என்றோ நேற்று வரை நன்றாக தான் இருந்தார், என்ன காரணம் தெரியவில்லை இன்று இறந்துவிட்டார் என்றோ தான் பொதுவாக கூறுகின்றனர். திருவாஞ்சியம் தலத்தில் வேறு எங்கும் இல்லாத வண்ணம் இயமனுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. ஞான்று என்ற சொல் நாள் அன்று என்ற தொடரின் மருவு. இந்த பாடலின் இரண்டாவது அடியில், இயமனுக்கு உற்ற பழிச்சொல் நீங்கியது போல அகலும் என்று சம்பந்தர் கூறுகின்றார். என்ன அகலும், எதனால் அகலும் என்பது இந்த அடியில் குறிப்பிடப்படவில்லை எனினும், நாரையூர் கை தொழ அகலும் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். முதல் இரண்டு பாடல்களின் தொடர்ச்சியாக இந்த பாடலை நாம் கருதினால் தான், எவை அகலும் என்ற கேள்விக்கு விடை கிடைக்கும். முதல் இரண்டு பாடல்களில் குறிப்பிட்ட மூன்று வகையான வேறு வேறு வழிகளில், மனம் வாக்கு செய்கை மூலம் நாம் சேர்த்துக் கொள்ளும் பாவங்கள் அகலும் என்பதையே சம்பந்தர் குறிப்பிடுகின்றார் என்பதை நாம் உணரலாம். 

முதல் இரண்டு அடிகளுக்கு, இறைவனை வணங்கி  இயமன் தனது பழியினைத் தீர்த்துக் கொண்டான் என்பதற்கு பதிலாக வேறொரு விளக்கமும் தரப்படுகின்றது. காலன் துயருற்ற தீங்கு என்பதற்கு காலனால் உயிர்களுக்கு ஏற்படும் துயரம் என்று பொருள் கொண்டு இந்த விளக்கம் அளிக்கப் படுகின்றது. உடலாகிய ஊரின் கண் நின்று வாழும் உயிரினை தகுந்த நேரத்தில் காலன் வந்து கவரும் தருணத்தில் காலனால் ஏற்படும் தீங்கினையும், உலகத்தவர் ஒன்று கூடி பழிக்கும் வார்த்தைகளையும் ஒழிக்க வேண்டும் என்று விரும்பினால் திருநாரையூர் தலத்தினை தொழுவீர்களாக என்பதே இந்த விளக்கம்.        
                          
பொழிப்புரை:

உடலாகிய ஊரினில் நின்று பல காலம் வாழ்கின்ற உயிரினை பிரிப்பதால் தன்னை வந்து  அடைந்த பழிச்சொற்களும், அந்த பழிச்சொற்களால் தான் அடைந்த மன வருத்தமும் தாளாமல், இயமன் இந்த மண்ணுலகம் வந்து இறைவனை வழிபட்டு வருத்தத்தையும் தான் உற்ற பழியினையும் போக்கிக் கொண்டான். அதே போன்று மனம் மொழி மெய் ஆகியவற்றின் செய்கைகளால் நீங்கள் சேர்த்துக் கொள்ளும் பாவங்களை முற்றிலும் நீக்க வேண்டும் என்று விரும்பினால், திரிபுரத்தவர்களுடன் போருக்கு சென்று அவர்களது மூன்று பறக்கும் கோட்டைகளையும் அழித்த பண்டைய நாளில் புகழத் தக்க தேவர்கள் பலரும் (வேதங்கள், பூமி, ஆகாயம், பிரமன், திருமால், அக்னி, வாயு, சூரியன் சந்திரன் முதலானோர்) ஒன்று கூடி அமைத்த தேரினில் அமர்ந்தவனும் எனது தந்தையும் ஆகிய பெருமான் உறையும் திருநாரையூர் தலத்தினை தொழுது பயன் அடைவீர்களாக. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com