116. துஞ்சலும் துஞ்சலிலாத - பாடல் 1

116. துஞ்சலும் துஞ்சலிலாத - பாடல் 1

பெரிய புராணம்

                             
பின்னணி:

திருக்கருப்பறியலூர் மற்றும் அருகிலுள்ள சில தலங்களும் சென்ற திருஞானசம்பந்தர் தனது நான்காவது தல யாத்திரையை முடித்துக் கொண்டு சீர்காழி திரும்புகின்றார். தமது நகரைச் சார்ந்த பிள்ளையார் ஊருக்கு திரும்பி வருகின்றார் என்ற செய்தியை கேட்டறிந்த தலத்து அந்தணர்கள், பூரணகும்பம் கொண்டு ஞானசம்பந்தரை வரவேற்றனர். அவரை நேரில் கண்டவுடன், தங்களது கைகளை தலைமேல் கூப்பி, தங்களது மனம் மகிழ்ச்சியால் பொங்க, மங்கல ஓசை முழங்க தலத்து தொண்டர்களும் அந்தணர்களும் வரவேற்க, பிள்ளையாரும் தான் வந்து கொண்டிருந்த முத்துச் சிவிகையிலிருந்து கீழே இறங்கி அனைவரையும் வணங்கி அவர்களுடன் கூடி மகிழ்ந்தார். பின்னர் அடியார்கள் புடை சூழ சம்பந்தர் திருக்கோயிலின் உள்ளே சென்று தோணியப்பரையும் பெரியநாயகியையும் கண்டு வணங்கி பதிகம் பாடினார் என்று பெரிய புராணம் குறிப்பிடுகின்றது. ஒவ்வொரு தலயாத்திரை மேற்கொள்வதற்கும் முன்னர் சீர்காழிப் பெருமானை வணங்கிச் சென்ற ஞானசம்பந்தர் தலயாத்திரை முடிந்து ஊர் திரும்பிய பின்னர் முதலில் பெருமானை வணங்குவதற்காக திருக்கோயில் செல்வது அவரது பழக்கமாக இருந்ததை நாம் பெரிய புராணத்தில் உள்ள அவரது வரலாற்றிலிருந்து அறிகின்றோம். .

இதனிடையில் சம்பந்தருக்கு ஏழு வயது நிறையவே, குல வழக்கத்தின் வழியே அவருக்கு, அவரது பெற்றோர்கள், உபநயனம் செய்வித்தனர். வேதியர்கள் சம்பந்தரிடம் மறை நான்கும் தந்தோம் என்று மொழிந்து மந்திரங்கள் சொல்ல, சம்பந்தரும் மறைகளை ஓதினார். இவ்வாறு எண்ணற்ற மறைகளை ஓதிய சம்பந்தரின் ஞானம் கண்டு வியந்த அந்தணர்கள், அவரிடம் தங்களுக்கு இருந்த ஐயப்பாடுகளைத் தெரிவித்து, அவைகளுக்கு உரிய விடை பெற்று தெளிவடைந்தனர். மேலும் இந்த மந்திரங்கள் எல்லாம் தோன்றுவதற்கு காரணம் பெருமானின் திருவைந்தெழுத்து என்று வேதியர்களுக்கு உணர்த்திய சம்பந்தர், மூன்று பொழுதிலும் ஓதுவதற்கு உரிய மந்திரம் திருவைந்தெழுத்து என்பதை உணர்த்தும் முகமாக அஞ்செழுத்தின் திருப்பதிகம் அருளினார் என்று சேக்கிழார் குறிப்பிடும் பெரிய புராணப் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பதிகத்தினை பஞ்சாக்கர திருப்பதிகம் என்று கூறுவார்கள். பதிகத்தின் முதல் பத்து பாடல்களும் அஞ்செழுத்துமே என்று முடிக்கப் பெற்று பஞ்சாக்கர மந்திரத்தின் பெருமையை உணர்த்துகின்றன. இந்த திருப்பதிகம் சீர்காழி தலத்தில் அருளப்பட்டது; எனினும் எந்த தலத்து இறைவனையும் குறிப்பிட்டு பாடப்பட்டது அன்று என்பதால் பொது பதிகமாக கருதப் படுகின்றது. இவ்வாறு வேதியர்களுக்கு சம்பந்தர் அஞ்செழுத்து மந்திரத்தை உபதேசிக்கும் முகமாக இந்த பதிகத்தை அவர் அருளினார்  என்று கூறுவார்கள். இந்த பதிகத்தினை ஓதும் பாக்கியம் பெற்ற அனைத்து அன்பர்களும், சம்பந்தரின் வாய்மொழியால் உபதேசம் பெற்றவர்களாகவே தங்களை கருதிக் கொண்டு மீண்டும் மீண்டும் இந்த மந்திரத்தை உச்சரித்து பயன்பெற வேண்டும். நால்வர் பெருமானார்கள் அனைவரும் பஞ்சாக்கர மந்திரத்தை தங்களின் பாடல்களில் பயன்படுத்தி, அந்த மந்திரத்தின் பெருமையையும் உணர்த்தி, மந்திரத்தை உபதேசம் செய்துள்ளனர். மேலும் இந்த மந்திரத்தை எவ்வாறு தியானம் செய்ய வேண்டும் என்பதையும் அவர்கள் பல பாடல்களில் கூறியுள்ளனர்.          
    
    மந்திரங்கள் ஆனவெலாம் அருளிச் செய்து மற்று அவற்றின்
         வைதிக நூல் சடங்கின்         வந்த  
    சிந்தை மயக்குறும் ஐயம் தெளிய எல்லாம் செழுமறையோர்க்கு
         அருளியவர்         தெருளும் ஆற்றால் 
    முந்தை முதல் மந்திரங்கள் எல்லாம் தோன்றும் முதலாகும்
         முதல்வனார் எழுத்து         அஞ்சு என்பார்         
    அந்தியினுள் மந்திரம் அஞ்செழுத்துமே என்று அஞ்செழுத்தின்
         திருப்பதிகம் அருளிச்         செய்தார்

நமச்சிவாய எனப்படும் ஐந்தெழுத்து மந்திரம், வெறும் ஐந்து எழுத்துக்களால் ஆனவை அல்ல. வேறு வேறு பொருளை உணர்த்தும் ஐந்து எழுத்துக்களால் ஆனவை ஐந்தெழுத்து மந்திரமாகும். எனவே ஐந்து மந்திரச் சொற்களால் ஆனது திருவைந்தெழுத்து மந்திரம் என்றும் கூறுவார்கள். திருக்கடவூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.37.3), பதத்தெழு மந்திரம் அஞ்செழுத்து என்று குறிப்பிட்டு, பஞ்சாக்கர மந்திரத்தில் உள்ளவை ஐந்து எழுத்துக்கள் மட்டுமல்ல, ஐந்து வேறு வேறு பதங்கள் என்று அப்பர் பிரான் உணர்த்துகின்றார். இந்த பாடலில் பொருளினை உணர்த்து ஐந்து ஒரேழுத்துகள் என்ற பொருளில் பதம் என்ற சொல் கையாலப்பட்டுள்ளதை நாம் அறியலாம். 

    பதத்தெழு மந்திரம் அஞ்செழுத்து ஓதிப் பரிவினொடும்
    இதத்தெழு மாணி தன் இன்னுயிர் உண்ண வெகுண்டு அடர்த்த
    கதத்தெழு காலனைக் கண் குருதிப் புனல் ஆறு ஒழுக
    உதைத்தெழு சேவடியான் கடவூர் உறை உத்தமனே

பதத்தெழு மந்திரம்=வேத மந்திரங்கள்: கதம்=கோபம்: பதத்தெழு மந்திரம் என்பது சிவாயநம என்ற பஞ்சாக்கர மந்திரத்தைக் குறிக்கும். மற்ற மந்திரங்களில் உள்ள எழுத்துக்களை போன்று அல்லாமல், பஞ்சாக்கர மந்திரத்தின் ஐந்து எழுத்துக்களும் ஐந்து பொருட்களை குறிப்பதால், பதத்து எழு மந்திரம் என்று சொல்லப்படுகின்றது. சி என்ற எழுத்து சிவபிரானையும், வ என்ற எழுத்து சிவபிரானின் அருளையும், ய என்ற எழுத்து ஆன்மாவையும், ந என்ற எழுத்து திரோதான மலத்தையும், ம என்ற எழுத்து ஆணவ மலத்தையும் குறிக்கும். இந்த உண்மையை உணர்த்தும் உண்மை விளக்கம் எனப்படும் சைவ சித்தாந்த நூலின் ஒரு பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. பாடை=பாஷை.

    உற்ற குறி அழியும் ஓதுங்கால் பாடைகளில்
    சற்றும் பொருள் தான் சலியாது மற்றது கேள்
    ஈசன் அருள் ஆவி எழிலார் திரோதம் மலம் 
    ஆசில் எழுத்து அஞ்சில் அடவாம் 

பஞ்சாக்கர மந்திரத்தை சொல்லும் முறை பற்றி பல பெயர்கள் கொண்டு அழைக்கின்றனர். திருமந்திரத்தில் ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு அதிகாரம் ஒதுக்கப்பட்டு அதன் தன்மையும் பெருமையும் கூறப்படுகின்றது. தூல பஞ்சாக்கரம் என்று அழைக்கப்படும் நமச்சிவாய மந்திரம் குறிப்பிடப்படும் பாடல் இது; இந்த மந்திரத்தை சொன்ன, தான் மிகுந்த இன்பத்தை அனுபவித்ததாகவும் அதனை விடவும் இனிப்பான சொல் வேறேதும் இல்லை என்று திருமூலர் கூறுகின்றார்.  

    ஒன்று கண்டீர் உலகுக்கு ஒரு தவமும்
    ஒன்று கண்டீர் உலகுக்கு உயிராவது
    நன்று கண்டீர் இனி நமச்சிவாயப் பழம்
    தின்று கண்டேற்க்கு இது தித்தித்தவாறே  

சிவாயநம என்ற மந்திரம் சூக்கும பஞ்சாக்கரம் என்று சொல்லப்படுகின்றது. சிவாயநம என்று கூறினால் நமது உள்ளத்தில் வெள்ளம் போன்று பெருகி வரும் ஒளி உண்டாகும் என்றும் இந்த மந்திரத்தை உச்சரிக்காதவர் மறுபடியும் மறுபடியும் பிறவிக் கடலில் சுழன்று தவிப்பார்கள் என்றும் திருமூலர் கூறும் பாடல் இது. நீர் சுழலும் போது துள்ளும் நீர், மறுபடியும் அந்த நீர்ச் சுழலில் விழுவதைப் போன்று, சிவாயநம என்ற மந்திரத்தை உச்சரிக்காதவர்கள், தாங்கள் இறந்த பின்னரும் மறுபடியும் பிறவிச் சுழலில் விழுவார்கள் என்று நமக்கு விளக்கும் பாடல்.

    தெள்ளமுது ஊற சிவாயநம என்று
    உள்ளமுது ஊற ஒருகால் உரைத்திடும்
    வெள்ளமுது ஊறல் விரும்பி உண்ணாதவர்
    துள்ளிய நீர் போல் சுழல்கின்றவாறே   

சிவாய எனப்படும் இந்த மந்திரத்தை, அதி சூக்கும பஞ்சாக்கரம் என்றும் காரண பஞ்சாக்கரம் என்றும் கூறுவார்கள். இதனை முக்திப் பஞ்சாக்கரம் என்றும் அழைப்பார்கள். நட்போடு சிவபெருமானை அணுகி சிவாய என்று சொன்னால், இன்பமயமாக இருக்கும் சிவபெருமான் நமக்கும் இன்பம் அளிப்பான் என்று சம்பந்தர் இந்த பாடலில் (2.46.10) கூறுகின்றார். இந்த பாடல், புத்தர் மற்றும் சமணர்களை குறிக்கும் பதிகத்தின் பத்தாவது பாடல். சிவபெருமானின் நாமத்தை அவரது தன்மையை சரியாக புரிந்து கொள்ளாமல் அவரை இழிவாக கூறவேண்டும் என்ற நோக்கத்துடன் அவரது பெயரினை உச்சரித்தாலும், பகையுணர்ச்சியுடன் அவர்கள் கூறியதை உணர்ந்தவர் ஞான சம்பந்தர். எனவே தான் சமணர்கள் மற்றும் புத்தர்களின் அணுகுமுறையிலிருந்து வேறுபடுத்திக் காட்ட, நட்புணர்வோடு அன்புடன் சிவபிரானின் நாமத்தைக் கூறவேண்டும் என்று சம்பந்தர் இங்கே சொல்கின்றார்.

    துன்பாய மாசார் துவராய போர்வையார்
    புன்பேச்சுக் கேளாதே புண்ணியனை நண்ணுமின்கள்
    நண்பால் சிவாய எனா நாலூர் மயானத்தே
    இன்பாய் இருந்தானை ஏத்துவார்க்கு இன்பமே

பாலைத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.51.6) அப்பர் பிரான் இந்த மந்திரத்தை குறிப்பிடுகின்றார். தேவர்கள் சிவபெருமானை பணிந்து வழிபடுவதைக் காணும் நிலவுலகத்தில் உள்ள மனிதர்கள் வியப்படைகின்றார்கள். அவர்கள், மறவாமல் சிவாய என்ற நாமத்தை தியானிக்க, அந்த அடியார்கள் தங்குவதற்கு அழகிய வானகத்தை படைத்து அருள்பவர், பாலைத்துறையில் உறையும் சிவபெருமான் ஆவார் என்பதே இந்த பாடலின் திரண்ட பொழிப்புரை.

    விண்ணினார் பணிந்து ஏத்த வியப்புறும்
    மண்ணினார் மறவாது சிவாய என்று
    எண்ணினார்க்கு இடமா எழில் வானகம்
    பண்ணினார் அவர் பாலைத் துறையரே

நம்மைப் பற்றியுள்ள வலிமை வாய்ந்த வினைகளைத் தீர்ப்பது சிவாய எனப்படும் மந்திரம் என்று திருமூலர் கூறும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. ஆயம்=கூட்டம். பிராமி, வைஷ்ணவி, காளி முதலாகிய பல விதமான சக்தியின் அம்சங்கள் இணைந்த கூட்டம், ஆயம் என்ற தொடரால் உணர்த்தப்பட்டு, சிவபிரான் அருள் வடிவாகிய சக்தியை குறிக்கின்றது. வினைகளுக்கு ஏற்ப உயிரினை உடலுடன் பொருத்தச் செய்வதால், சிவபெருமானை உயிரை ஈன்றவர் என்று குறிப்பிடுகின்றார். 

    அருள் தரு ஆயமும் அத்தனும் தம்மில்
    ஒருவனை ஈன்றவர் உள்ளுறு மாயை
    திரிமல நீங்கிச் சிவாய என்று ஓதும்
    அருவினை தீர்ப்பதும் அவ்வெழுத்தாமே  

சிவ எனப்படும் மந்திரம் காரண பஞ்சாக்கரம் என்று அழைக்கப்படுகின்றது. சிவசிவ என்று பஞ்சாக்கர மந்திரத்தை உச்சரிக்கும் மாந்தர்கள் சிவகதி அடைவார்கள் என்று திருமூலர் ஒரு பாடலில் கூறுகின்றார். இதே அதிகாரத்தின் மற்றொரு பாடலில் திருமூலர், இறக்கும் தருவாயில் ஒருவன் இந்த காரண பஞ்சாக்கர மந்திரத்தை இரண்டு முறை சொன்னால் அவனது உயிர் சூரிய மண்டத்தையும் தாண்டிச் சென்று சிவனுலகத்தை அடையும் என்று கூறுகின்றார்.  

    சிவசிவ என்கிலர் தீவினையாளர்
    சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
    சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
    சிவசிவ என்னச் சிவகதி தானே

    
சி எனப்படும் ஒரேழுத்து மந்திரத்தை மகாகாரண பஞ்சாக்கரம் என்று கூறுகின்றனர். சிவன் உள்ளே இருக்கும் இந்த மந்திரத்தின் உண்மையை உணராமல், மற்றை நூல்களை எத்தனை முறை ஓதி உணர்ந்தாலும் பெருமானை உணர்தல் இயலாது என்று திருமூலர் கூறும் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அங்கரை=அழகிய கரை.

    அங்கமும் ஆகம வேதமும் ஓதினும்
    எங்கள் பிரான் எழுத்தொன்றில் இருப்பது  
    சங்கை கேட்டு அவ்வெழுத்து ஒன்றையும் சாதித்தால்
    அங்கரை சேர்ந்த அருங்கலம் ஆமே

பாடல் 1:

    துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்
    நெஞ்சக நைந்து நினைமின் நாள்தொறும்
    வஞ்சகம் அற்று அடி வாழ்த்த வந்தக் கூற்று
    அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே

விளக்கம்:

துஞ்சல்=உறக்கம்; நெஞ்சக நைதல்=அன்பினால் குழைதல்; இந்த நிலை தியானத்திற்கு அடிப்படை; நினைமின்=தியானம் செய்யுங்கள்; உயிர் இறைவனை வழிபட விரும்பினாலும், ஒரு நிலையில் நில்லாமல் பல வழிகளில் திரிந்து செல்லும் தன்மையுடைய மனதினை ஒரு நிலைப்படுத்தி வழிபட்ட மார்க்கண்டேயன் நெஞ்சினில் வஞ்சனை ஏதும் இன்றி பெருமானின் திருவடிகளை வழிபட்டதாக இங்கே உணர்த்தப் படுகின்றது. இயமனை உதைத்து வீழ்த்தியது திருவைந்தெழுத்து என்று குறிப்பிடுவதன் மூலம், திருவைந்தெழுத்து பெருமானின் வடிவத்தை உணர்த்துகின்றது என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். நமச்சிவாய மந்திரத்தின் ஐந்து எழுத்துக்களும் பெருமானின் வடிவத்தை எவ்வாறு உணர்த்துகின்றன என்பதை உண்மை விளக்கம் எனப்படும் சித்தாந்த நூல் அழகாக விளக்குகின்றது. இந்த ஐந்து எழுத்துக்கள், முறையே பாதம், உந்தி, தோள், முகம் மற்றும் தலையை குறிக்கும் என்று இந்த பாடலில் கூறப்பட்டுள்ளது.

    ஆடும் படிகேள் நல் அம்பலத்தான் ஐயனே
    நாடும் திருவடியிலே நகரம் கூடும்
    மகரம் உதரம் வளர் தோள் சிகரம்
    பகரும் முகம் வா முடி யப்பேர் 

உயிர் எத்தனை விதமான பிறவிகள் எடுத்தாலும் இறைவனுக்கும் உயிர்க்கும் இடையே உள்ள பிணைப்பு மாறுவதில்லை. இந்த உண்மையை உணர்ந்து கொண்ட நாம், அவன் இறைவன், நாம் அவனுக்கு அடியான் என்று உள்ள நிலையினை என்றும் மறவாமல், தொடர்ச்சியாக தினமும் காலையிலும் மாலையிலும் அஞ்செழுத்து ஓதி வழிபட்டால், நாம் இறைவன் மீது வைத்துள்ள அன்பு அதிகமாகும் என்று கூறும் அப்பர் பிரானின் பாடல் (4.70.5) நனிப்பள்ளி பதிகத்தில் உள்ள பாடலாகும். துஞ்சிருள்=அடர்ந்த இருள், உயிர்கள் உறங்கும் நேரம்; 

    துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்திராதே
    அஞ்செழுத்து ஓதி நாளும் அரனடிக்கு அன்பதாகும்
    வஞ்சனைப் பால் சோறாக்கி வழக்கிலா அமணர் தந்த
    நஞ்சு அமுது ஆக்குவித்தான் நனிப்பள்ளி அடிகளாரே

மனம் குழைந்து இறைவனின் திருநாமமாகிய பஞ்சக்கார மந்திரத்தை நாள்தோறும் சொல்ல வேண்டும் என்று சம்பந்தர் கூறுவது அவர் அருளிய நமச்சியவாய பதிகத்தின் (3.49.1) முதல் பாடலை நினைவூட்டுகின்றது. இறைவன் மீது அளவு கடந்த அன்பு கொண்டு உள்ளம் உருகி கண்களில் நீர் மல்க நமச்சிவாய மந்திரத்தை ஓதும் அடியார்களை நல்ல நெறிக்கு கொண்டு செல்வது நமச்சிவாய மந்திரம் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். இறைவனை நாம் அதிகமாக தொழத்தொழ, நமக்கு இறைவனிடத்தில் அன்பு அதிகமாகின்றது. அந்த இறையன்பு வலுப்பெறும்போது அது அழுகையாக வெளிப் படுகின்றது.

    காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
    ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உய்ப்பது
    வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
    நாதன் நாமம் நமச்சிவாயவே. 

இந்த பாடலில் உறங்கும் சமயத்திலும் இறைவனை மனம் கசிந்து உருகி நினைக்க வேண்டும் என்று சம்பந்தர் கூறுகின்றார். உறங்காத சமயத்தில் பலவிதமான எண்ணங்கள் அலை மோதும் தன்மை இருந்தாலும், ஆன்மா இறைவனையே, ஐந்தெழுத்து மந்திரத்தையே பற்றி இருந்தால், அந்த பழக்கத்தில் ஊறிய ஆன்மா, உறக்கத்திலும் ஐந்தெழுத்து மந்திரத்தை தியானிக்கும். அவ்வாறு மனதினை உறங்காத சமயத்தில் இறைவனையே நினைக்கும் வண்ணம் பழக்கி, உறங்கும் போதும் மனம் இறைவனை நினைக்கும் நிலைக்கு நாம் மனத்தினை அழைத்துச் செல்லவேண்டும் என்று சம்பந்தர் இந்த பாடலில் நமக்கு அறிவுரை கூறுகின்றார்.

நனவினில் நாம் செய்யும் சிந்தனைகள், நமது பழைய அனுபவங்களுடன் கலந்து கனவாக உருவெடுக்கின்றன என்று உளவியல் நிபுணர்கள் கூறுவார்கள். நனவினில் நல்ல சிந்தனையுடன் இருந்து இறைவனை தியானித்து இருந்தால், நாம் காணும் கனவுகளிலும் இறைவனை தியானிப்பதை உணரலாம். எனவே தான் கனவிலும் உன்னை மறவாது இருப்பேன் என்றும். கனவிலும் உன்னை நினைப்பேன் அருளாளர்கள் பல பாடல்களில் கூறியுள்ளனர். திருவாவடுதுறை பதிகத்தின் பாடலில் (3.4.3) நனவிலும் கனவிலும் பெருமானது திருநாமத்தை தான் மறவாமல் சொல்லுவேன் என்று திருஞான சம்பந்தர் என்று கூறுகின்றார்.

    நனவினும் கனவினும் நம்பா உன்னை
    மனவினும் வழிபடல் மறவேன் அம்மான்
    புனல்விரி நறுங்கொன்றை போது அணிந்த
    கனல் எரி அனல் புல்கு கையவனே  

இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
    அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

இவ்வாறு எப்போதும் இறைவனையே நினைத்திருந்த திருஞான சம்பந்தர்க்கு இறைவன் கனவிலும் அவரது நெஞ்சினில் தான் ஒளியாக பரவி நின்ற காட்சியை காட்டி அருளிய செய்தியை அவர் கருக்குடி தலத்து பதிகத்தின் முதல் பாடலில் (3.21.1) உணர்த்துகின்றார்.       

    நனவிலும் கனவிலும் நாளும் தன் ஒளி
    நினைவிலும் எனக்கு வந்து எய்து நின்மலன்
    கனைகடல் வையகம் தொழ கருக்குடி
    அனல் எரி ஆடும் எம் அடிகள் காண்மினே

பொழிப்புரை:

தூங்கும் பொழுதினும் கண் விழித்திருக்கும் பொழுதினும், நெஞ்சம் கசிந்து உருகி நாள்தோறும் அவனது திருநாமமாகிய பஞ்சாக்கரத்தை நினைப்பீர்களாக. தனது நெஞ்சில்  வஞ்சகம் ஏதுமின்றி அவனது திருவடியை வாழ்த்தி வந்த சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைக் கவர்ந்து செல்ல வந்த கூற்றுவன் அஞ்சும் வண்ணம் அவனை உதைத்து வீழ்த்தியது திருவைந்தெழுத்தே ஆகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com