116. துஞ்சலும் துஞ்சலிலாத - பாடல் 9

வாதங்களை தவிர்ப்பீர்
116. துஞ்சலும் துஞ்சலிலாத - பாடல் 9


பாடல் 9:

    கார்வணன் நான்முகன் காணுதற்கு ஒணாச்
    சீர் வணச் சேவடி செவ்வி நாள்தொறும்
    பேர் வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு
    ஆர் வணம் ஆவன அஞ்செழுத்துமே

விளக்கம்:

கார்வணன்=கரிய மேகம் போன்ற வண்ணம் உடைய திருமால்; அடியைக் காண முயற்சி செய்தவர் திருமால்; முடியைக் காண முயற்சி செய்தவர் பிரமன். இவ்வாறு இருக்கையில் அடியைக் காண முடியாத பிரமன் திருமால் என்று இருவரையும் சம்பந்தர் இங்கே குறிப்பிடுவதை நாம் உணரலாம். அடி முடியைக் காணச் சென்ற இருவருக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இருவரும் அடுத்தவரினும் தாமே பெரியவர் என்ற எண்ணம் கொண்டு அகந்தையுடன் இருந்ததும் அன்றி, தங்களது எண்ணம் மிகவும் சரியானது என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற முனைப்புடன் அடியையும் முடியையும் தேடி புறப்பட்டவர்கள்; இருவருமே வேதங்கள் மற்றும் முனிவர்கள் சிவபெருமானே அனைவரினும் உயர்ந்தவன், ஆதலால் உங்களது வாதங்களை தவிர்ப்பீர் என்று கூறிய அறிவுரையை மதிக்காமல் தொடர்ந்து வாதம் செய்தி கொண்டிருந்தவர்கள். மேலும் தங்களது வலிமையின் பால் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்களாய், அடியையும் முடியையும் கண்டு விடமுடியும் என்ற செருக்குடன் தங்களது முயற்சியைத் தொடங்கியவர்கள். இருவரும் தங்களது முயற்சியில் தோல்வி அடைந்தவர்கள். எனவே தான் திருமாலால் காண முடியாத திருவடியை பிரமனும் காண்பதற்கு இயலாது என்பதை உணர்த்தும் வண்ணம், பிரமனும் திருமாலும் காண முடியாத திருவடி என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். 

ஆர்தல்=அனுபவித்தல், திளைத்தல்; ஆர்வணம்=பற்றுக்கோடு; பித்தர்=பேசியதையே மீண்டும் மீண்டும் பேசும் தன்மை உடையவர்கள்; பித்தர்கள் பிதற்றுவது போன்று பெருமானின் திருநாமத்தை மீண்டும் மீண்டும் பெருமானின் திருநாமத்தை சொல்லும் அடியார்கட்கு இனிமையான உணர்வினைத் தரும் என்றும் சிறந்த பற்றுகோடாக இருக்கும் என்று சம்பந்தர் இங்கே கூறுவது, பித்தர் போன்று பெருமானின் திருநாமத்தை பிதற்றினால் என்ன நடக்கும் என்று மற்றவர்கள் உணர்த்தும் திருமுறைப் பாடல்களை நினைவூட்டுகின்றது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். 

துருத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (4.42.10) சதைப் பிண்டமாகிய உடலுடன் கூடி வாழும் வாழ்க்கையை உயிர் கழித்து விட்டு நிலையான முக்தி உலகில் இருக்க வேண்டுமென்று விரும்பினால், பெருமானின் திருநாமங்களை பிதற்ற வேண்டும் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். துண்டம்=சந்திரனின் ஒற்றைப் பிறை; பெருமாளின் திவ்ய தேசங்களில் ஒன்றாகிய நிலாத்துண்டம் தலத்து பெருமாளை நிலாத்துண்டப் பெருமாள் என்று அழைப்பார்கள். பிண்டம்=சதைப் பிண்டத்தாலான உடல்; கழிக்க வேண்டில்=பிறவிப் பிணியினை தீர்க்க வேண்டுமென்றால்; அண்டத்தைக் கழிய=பல அண்டங்களையும் வென்ற; அடல்=வலிமை;

    பிண்டத்தைக் கழிக்க வேண்டில் பிரானையே பிதற்றுமின்கள்
    அண்டத்தைக் கழிய நீண்ட அடல் அரக்கன் தன் ஆண்மை
    கண்டு ஒத்துக் கால் விரலால் ஊன்றி மீண்டு அருளிச் செய்த
    துண்டத்துத் துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே  

செங்காட்டங்குடி மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில், பிறப்பிலியாகிய பெருமானின் திருநாமங்களை எப்போதும் பிதற்றும் தான், மற்றவர் என்னை பழிக்குமாறு வாழ்தலும், எனது பெருமைகளை இழந்து வாழ்வதும் அழகோ என்று பெருமானை நோக்கி, சம்பந்த நாயகி கேட்கும் பாடல் இது. இந்த பதிகம் முழுவதும் அகத்துறை வகையில் அமைந்த பாடல்கள் கொண்ட பதிகம். இந்த பாடலில் சிவபெருமான் எடுக்கும் பலியை, அறப்பலி என்று சம்பந்தர் கூறுகின்றார். அறம்=புண்ணியம், புண்ணியத்தால் கிடைக்கும் வீடுபேறு; நாம் அறத்தை பெரும் எண்ணத்துடன், நமது வினைகள் ஒழிந்து வீடுபேறு பெரும் விருப்பத்துடன், இடும் பலி என்பதால் அறப்பலி என்று கூறுகின்றார், அலர்=பழிச்சொல்; அலர் கோடல்=பிறர் என்னை பழிக்கும் நிலைமை; பெருமான் மீது தீராத காதல் கொண்டு, தனது கற்பினை இழந்ததால் ஊராரின் பழிச்சொல்லுக்கு ஆளான நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. கன்னிப் பருவத்தில் இருக்கும் இளம்பெண், தனது காதல் எண்ணங்களை வளர்த்துக் கொண்டு, ஒரு ஆடவனின் உருவத்தை தனது மனதினில் நிலை நிறுத்துவதே, கற்பினை இழந்த செயலாக கருதப்பட்ட காலம் அந்த காலம். பறவையை நோக்கித் தனது குறையை வெளிப்படுத்தும் சம்பந்த நாயகி, அந்த பறவை தனது எண்ண ஓட்டங்களை பெருமானிடம் எடுத்துரைக்கும் என்ற நம்பிக்கையுடன் உரைக்கும் சொற்கள் அடங்கிய பாடல். நறப்பொலி=நறுமணம் பொலியும்; நவில்=வாழ்கின்ற; குருகு=பறவை;

    நறப் பொலி பூங்கழிக் கானல் நவில் குருகே உலகெல்லாம்
    அறப்பலி தேர்ந்து உழல்வார்க்கு என் அலர் கோடல் அழகியதே
    சிறப்புல வான் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
    பிறப்பிலி பேர் பிதற்றி நின்று இழக்கோ எம் பெருமானே

முந்தைய பிறவிகளில் தான் செய்த பாவங்கள், தன்னை விட்டு முற்றிலும் நீங்கியதன் காரணம், தான் இறைவனின் திருநாமங்களை இடைவிடாமல் பிதற்றியது தான் என்று அப்பர் பெருமான் சொல்லும் பாடலை (5.64.7) நாம் இங்கே காண்போம். இந்த பதிகம் கோழம்பம் தலத்தின் மீது அருளியது.

    முன்னை நான் செய்த பாவம் முதலறப்
    பின்னை நான் பெரிதும் அருள் பெற்றது
    அன்னம் ஆர் வயல் கோழம்பத்துள் அமர்
    பின்னல் வார் சடையானைப் பிதற்றியே 

பேதைப் பங்கப் பெருமானின் திருநாமத்தை வாயில் வந்தபடி பிதற்றினால் நாம் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து தப்பிக்கலாம் என்று அப்பர் பிரான் சோற்றுத்துறை பதிகத்தின் பாடலில்  (4.41.6) நமக்கு அறிவுரை கூறுகின்றார். 

    பேர்த்து இனிப் பிறவா வண்ணம் பிதற்றுமின் பேதை பங்கன்    
    பார்த்தனுக்கு அருள்கள் செய்த பாசுபதன் தன் திறமே 
    ஆர்த்து வந்து இழிவது ஒத்த அலைபுனல் கங்கை ஏற்றுத்
    தீர்த்தமாய் போத விட்டார் திருச் சோற்றுத்துறையனாரே

பெருமானின் திருநாமத்தை மட்டுமல்ல, அவனது பண்புகளையும், அவன் அடியார்களுக்கு அருள் புரிந்த செய்கைகளையும் பிதற்றியவாறு தான் அவனை வழிபடச் சென்றதாக சுந்தரர் கூறும் பாடல் திருவாவடுதுறை மீது அருளிய பதிகத்தில் உள்ளது. இந்த பதிகத்தின் பாடல்களில், ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு அருட்செயல் மிகவும் விரிவாக குறிப்பிடப் படுகின்றது. இந்த பாடலில், திருமால் தனது கண்ணினை இடந்து பெருமானுக்கு அர்ச்சனை செய்தபோது, அதனால் மகிழ்ந்த இறைவன் சக்கராயுதம் வழங்கிய அருட்செயலை குறிப்பிடுகின்றது. இவ்வாறு அருளியதை நினைவு கூர்ந்து, தன்னைப் பிறவிப் பிணியில் ஆழ்த்தும் வினைகளின் செயல்பாட்டிற்கு அஞ்சி, அந்த வினைகளிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்பதற்காக பெருமானை வழிபடும் எண்ணத்துடன் ஆவடுதுறை அடைந்ததாக இந்த பாடலில் (7.66.3) சுந்தரர் கூறுகின்றார். 

    திகழும் மாலவன் ஆயிர மலரால் ஏத்துவான் ஒரு நீள்மலர்
           குறையப்
    புகழினால் அவன் கண் இடந்து இடலும் புரிந்து சக்கரம்
           கொடுத்தல் கண்டு அடியேன் 
    திகழு நின் திருப்பாதங்கள் பரவித் தேவதேவ நின் திறம்
           பல பிதற்றி
    அகழு வல்வினைக்கு அஞ்சி வந்தடைந்தேன் ஆவடுதுறை
           ஆதி எம்மானே

இறைவனின் திருநாமத்தை நாம் எவ்வாறு பிதற்ற வேண்டும் என்பதை மணிவாசகர் உணர்த்தும் பாடல் கோயில் மூத்த திருப்பதிகத்தில் உள்ள கடைப்பாடலாகும். ஒல்கா=தளர்ந்து; நல்காது=அருள் வழங்காது; உயிர்க்கு இரங்கி என்று கூறுவதன் மூலம், இவ்வாறு இறைஞ்சும் அனைத்து உயிர்களுக்கும் அருள புரிய வேண்டும் என்று பரந்த நோக்குடன் அடிகளார் கூறுவதை நாம் உணரலாம். இடைவிடாது நாம் இறைவனது நாமத்தைச் சொன்னால், அவன் நமக்கு அருள் புரிவான் என்ற நம்பிக்கை நமக்கு முதலில் ஏற்படவேண்டும் அந்த உறுதிப் பாட்டுடன் நின்றால் தான், மறுபடியும் மறுபடியும் அவனது நாமத்தைக் கூறும் நமது வாய் குழறும் நிலையினை அடைந்து பொருள் புரியாத வகையில் பிதற்றினாலும் அவனது நாமங்களே நமது நாவினில் வெளிப்படும். அப்போது நமது நெஞ்சம் அவன் மீது நாம் வைத்துள்ள காதலால் கசிந்து உருக, நமது கண்களிலிருந்து நம்மை அறியாமல் கண்ணீர் பெருகும். அந்த நிலைக்குத் சென்று, உடல் தளர்ந்து, இறைவனை வழிபடும் உயிர்களுக்கு இறைவன் அருள் புரிய வேண்டும் என்று அடிகளார் நமக்காக வேண்டுகின்றார்.       

    நல்காது ஒழியான் நமக்கு என்று உன் நாமம் பிதற்றி நயன நீர்
    மல்கா வாழ்த்தா வாய் குழறா வணங்கா மனத்தால் நினைந்து உருகிப்
    பல்கால் உன்னைப் பாவித்து பரவிப் பொன்னம்பலம் என்றே
    ஒல்கா நிற்கும் உயிர்க்கு இரங்கி அருளாய் என்னை உடையானே 

ஒன்பதாம் திருமுறையில் வேணாட்டடிகள், தான் அருளிய பதிகத்தின் எட்டாவது பாடலில், வீடுபேறு அடைவதற்கான வழி, பெருமானை விருப்புற்று நினைந்து, மனம் உருகி, வாட்டம் உற்று, நாவினால் அவனது திருநாமத்தை பலவாறு பிதற்றுதல் என்று கூறுகின்றார். இவ்வாறு தான் செய்யும் குற்றேவல் தன்னை பெருமான் ஏற்று, அதற்கு பரிசாக தவறாமல் முக்திப்பேறு அளித்து, பெருமானுடன் தான் என்றும் கூடி இருப்பதற்கு பெருமான் திருவுள்ளம் பற்றவேண்டும் என்று அடிகள் இங்கே வேண்டுகின்றார். உலகப் பயன் கருதி நாம் இறைவனை வழிபடக் கூடாது என்றும், நிலையான வீடுபேற்றினை வேண்டியே நாம் இறைவனை வழிபடவேண்டும் நமக்கு சொல்லிக் கொடுக்கும் பாடலாக இந்த பாடல் திகழ்வதை நாம் உணரலாம்.  

    வாடா வாய் நாப்பிதற்றி உன்னை நினைந்து நெஞ்சு உருகி
    வீடாம் செய் குற்றேவல் ஏற்றே மற்றிது பொய்யில்
    கூடாமே கை வந்து குறுகுமாறு யான் உன்னை
    நாடாயால் திருத்தில்லை நடம் பயிலும் நம்பானே 

திருவேகம்பம் உடையார் திருவந்தாதியின் கடைப் பாடலில், பட்டினத்தார் பித்தர்கள் பிதற்றுவது போன்று பொருள் தெரியாத வகையில் இறைவனின் திருநாமத்தைப் பிதற்றினாலும், அந்த அடியார்களுக்கு துன்பம் ஏதும் ஏற்படாவண்ணம், அவர்கள் உற்ற பல பிணிகளையும் தீர்ப்பார் என்று கூறுகின்றார். புன்சொல்லாக தான் இயற்றிய பாடலை, வேதம் பொலியும் பொருளாக மெய்யடியார்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று பட்டினத்தார் அவையடக்கத்துடன் கூறுவதையும் நாம் உணரலாம்.  

    பாதம் பரவியோர் பித்துப் பிதற்றினும் பல்பிணியும்
    ஏதம் புகுதா வகை அருள் ஏகம்பர் ஏத்தெனவே
    போதம் பொருளால் பொழியாத புன்சொல் பனுவல்களும்
    வேதம் பொலியும் பொருளாம் எனக் கொள்வர் மெய்த்தொண்டரே 

மொத்தத்தில், மேலே குறிப்பிடப்பட்ட பாடல்கள் மூலம், பெருமானின் திருநாமம், அதனைப் பிதற்றும் அடியார்களுக்கு சிறப்பினைத் தரும் அணிகலனாக விளங்குவதையும், அத்தகைய அனுபவம் பெற்ற அடியார்கள் ஆர்வத்துடன் திருநாமத்தை உச்சரிப்பார்கள் என்பதையும் நாம் உணரலாம். செவ்வி=பொழுது;    
 
பொழிப்புரை:

திருமாலும் பிரமனும் காண முடியாத சிறப்பினை உடைய திருவடிகளை உடையவன் என்று பெருமானின் திருவடிச் சிறப்பினை தினமும் அனைத்து காலங்களிலும் பல முறை மீண்டும் மீண்டும் பேசி பிதற்றும் அடியார்களுக்கு இனிய உணர்வினை தரும் சிறந்த பற்றுக்கோடாக விளங்குவது அஞ்செழுத்து ஆகும்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com