117. காடது அணிகலம் - பாடல் 4

பாற்கடலை கடைவதற்கு
117. காடது அணிகலம் - பாடல் 4


பாடல் 4;

    உரித்தது பாம்பை உடல் மிசை இட்டதோர் ஒண்களிற்றை
    எரித்தது ஓர் ஆமையைப் இன்புறப் பூண்டது முப்புரத்தைச்
    செருத்தது சூலத்தை ஏந்திற்றுத் தக்கனை வேள்வி பன்னூல்
    விரித்தவர் வாழ்தரு வெங்குருவில் வீற்றிருந்தவரே

  
விளக்கம்:

உரித்தது ஒண் களிற்றை உடன் மிசை இட்டதோர் பாம்பை, எரித்தது முப்புரத்தை, ஓர் ஆமையை இன்புறப் பூண்டது, செருத்தது தக்கன் வேள்வியை, சூலத்தை ஏந்திற்று என மொழிகளை மாற்றி அமைத்து பொருள் கொள்ளவேண்டும். ஒண்=வலிமை வாய்ந்த; களிறு=ஆண் யானை; மிசை=மேலே; செருத்தது=அழித்தது; செரு=போர், போரிட்டு அழித்தது என்று பொருள் கொள்ள வேண்டும்; ஓர்=ஒப்பற்ற ஆமை. கூர்மாவதாரம் எடுத்த திருமாலின் ஆமை ஓடு என்பதால் ஒப்பற்ற என்று இங்கே கூறப்படுகின்றது. ஆமையாக உருவெடுத்து அமுதம் பெறுவதற்காக நிறுவிய மந்தர மலை நீரில் அழுந்தி விடாமல் திருமால் ஏந்தி, பாற்கடலை கடைவதற்கு வழி வகுத்தார். தனது வலிமையால் பாற்கடல் கடைய முடிந்தது என்ற செருக்கு மிகுத்ததால், அவர் கடல்கள் அனைத்திலும் புகுந்து கடலினைக் கலக்க உலகத்தவர்கள் மிகுந்த துன்பம் அடைந்தனர். நடந்ததை அறிந்த பெருமான் ஆமையினை அடக்கி திருமாலின் செருக்கினை அழித்தார். தனது செருக்கு நீங்கிய திருமால், தன்னை அடக்கியதை அனைவர்க்கும் உணர்த்தும் வண்ணம் ஆமையோட்டினை பெருமான் தனது மார்பினில் அணிந்து கொள்ள வேண்டினார். பெருமானும் அவ்வாறே அணிந்து கொள்ள  திருமால் மிகவும் இன்பம் அடைந்தார். ஆமை ஓட்டினை பெருமான் அணிந்ததால் திருமால் மகிழ்ச்சி உற்றதை உணர்த்தும் வகையில் இந்த பாடலில் சம்பந்தர் இன்புறப் பூண்டது என்று குறிப்பிடுகின்றார். பன்னூல் விரித்தவர்=வேதம், இதிகாசம், புராணங்கள் ஆகிய பல நூல்களை நன்றாகக் கற்று, அத்தகைய நூல்கள் உணர்த்தும் உண்மையான மெய்ப்பொருள் சிவபெருமான் என்பதை தெளிவாக உணர்ந்து பலருக்கு விரித்து உணர்த்தும் சீர்காழி நகரத்து சான்றோர்கள்.    

பொழிப்புரை: 

மிகுந்த வேகத்துடன் தன்னை நோக்கி பாய்ந்து வந்த வலிமையான யானையை அடக்கி அதன் தோலை உரித்துத் தனது உடல் மீது போர்த்துக் கொண்டவரும், தனது உடல் மீது பாம்பினை கச்சையாகவும் ஆபரணமாகவும் அணிந்தவரும், திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்தவரும், ஆமையாக அவதாரம் எடுத்த திருமாலை அடக்கி அந்த ஒப்பற்ற ஆமையின் ஓட்டினை தனது மார்பினில் அணிகலனாக, திருமால் மகிழும் வண்ணம், அணிந்து கொண்டவரும், வேதங்களில் சொல்லப்பட்டுள்ள முறைக்கு மாறாக நடைபெற்ற தக்கனது யாகத்தை அழித்தவரும் ஆகிய பெருமான்  சூலத்தை தனது கையில் ஏந்தியவனாக காட்சி அளிக்கின்றார். இத்தகைய பெருமை வாய்ந்த பெருமான், வேதங்கள் இதிகாசங்கள் மற்றும் புராணங்கள் ஆகிய பல நூல்களைக் கற்றுத் தேர்ந்து அதன் மூலமாக உண்மையான மெய்பொருள் சிவபெருமான் என்பதை உணர்ந்து, அந்த உண்மையினை விரிவாக பலருக்கும் அறிவுறுத்தும் சான்றோர்கள் வாழ்ந்து வரும் வெங்குரு என்று அழைக்கப்படும் சீர்காழி நகரத்தில் வீற்றிருக்கின்றார்.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com