117. காடது அணிகலம் - பாடல் 8

நெற்றியின் கண்
117. காடது அணிகலம் - பாடல் 8


பாடல் 8:

    நெருப்பு உறு வெள்விடை மேனியர் ஏறுவர் நெற்றியின் கண்
    மருப்புறு வன்கண்ணர் தாதையைக் காட்டுவர் மாமுருகன்
    விருப்புறு பாம்புக்கு மெய் தந்தையார் விறல் மாதவர் வாழ்
    பொருப்புறு மாளிகைத் தென் புறவத்து அணி புண்ணியரே

விளக்கம்:

நெருப்புறு மேனியர், வெள்விடை ஏறுவர், நெற்றியின் கண் கண்ணர், மருப்பு உருவன் தாதை, மாமுருகன் விருப்புறு தந்தையார், பாம்புக்கு மெய்யைக் காட்டுவர் என மொழிகளை மாற்றி அமைத்து பொருள் கொள்ளவேண்டும். நெருப்புறு=நெருப்பினைப் போன்ற; வெள்விடை=வெண்மை நிறமுடைய இடபம்; மருப்பு=தந்தம்; மருப்புருவன்=தந்தம் ஒரு உறுப்பாக கொண்டுள்ள யானை முகத்தினை பெற்றுள்ள கணபதி; விறல்=வலிமை பொருப்பு=மலை; தென்=அழகிய. தாதையை என்ற சொல்லில் உள்ள ஐகாரத்தை மெய் என்ற சொல்லுடன் சேர்த்து பொருள் கொள்ள வேண்டும்.

இந்த பாடலில் கணபதி மற்றும் முருகப் பெருமான் ஆகிய இருவர் பற்றிய குறிப்புகளும் காணப் படுகின்றன. திருமுறைப் பாடல்களில் கணபதி மற்றும் முருகன் பற்றிய குறிப்பு பல பாடல்களில் காணப்பட்டாலும், இருவரையும் ஒரே பாடலில் குறிப்பிடும் பதிகங்கள் மிகவும் அரிதானவை. அத்தகைய பாடல்கள் இங்கே கொடுக்கப் பட்டுள்ளன. பூவனூர் தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் பாடலில் (5.65.10 கணபதி மற்றும் முருகன் ஆகிய இருவராலும் வணங்கப்படும் பெருமான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். வாரணம்=யானை; வாரணன்=யானை முகத்தினைக் கொண்ட கடவுளாகிய விநாயகர்; காரணன்=உலகமும் உயிர்கள் இணைவதர்கான உடல்களும் உலகில் உள்ள அனைத்துப் பொருட்களும் தோன்றுவதற்கு முதற்காரணமாக இருக்கும் இறைவன் சிவபெருமான். காளை=காளை போன்று பலம் வாய்ந்தவன். பூரணன்=அனைத்துப் பொருட்களிலும் நிறைந்து இருப்பவன்;

    நாரணன்னொடு நான்முகன் இந்திரன்
    வாரணன் குமரன் வணங்கும் கழல்
    பூரணன் திருப்பூவனூர் மேவிய
    காரணன் என்னை ஆளுடைக் காளையே

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது பாடல் ஒன்றினில் (6.65.9) முருகப் பெருமான் மற்றும் விநாயகருக்கு தந்தையாக விளங்கும் பெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். முந்தை=அனைத்து உயிர்களுக்கும் முன்னமே தோன்றியவன், சிவன்=இன்ப வடிவினன்; சிந்தாத=இறைவனைப் பற்றிய சிந்தனை தவிர புறப் பொருட்களில் தங்களது கவனத்தை சிதறவிடாத; மால் என்ற சொல்லுக்கு பெருமை என்ற பொருள் கொண்டு, சிவந்த கண்களை உடையதும் சிறப்பு வாய்ந்ததும் ஆகிய எருதினை வாகனமாக கொண்டவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.. தண்=குளிர்ந்த; கடமா=ஆண் யானை; குளிர்ந்த மதநீர் ஒழுகும் ஆண் யானை;

    முந்தை காண் மூவரிலும் முதலானான் காண் மூவிலை
            வேல் மூர்த்தி காண் முருகவேட்குத்
    தந்தை காண் தண் கடமா முகத்தினாற்குத் தாதை காண் தாழ்ந்து
            அடியே வணங்குவார்க்குச்
    சிந்தை காண் சிந்தாத சித்தத்தார்க்குச் சிவனவன் காண்
             செங்கண்மால் விடை ஒன்றேறும்
    எந்தை காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காண்
             அவன் என்  எண்ணத்தானே

  
புறம்பயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (6.13) பத்தாவது பாடலில், பெருமானைப் போற்றிப் புகழ்வோரின் பட்டியலில், முருகப் பெருமானையும் கணபதியையும் அப்பர் பிரான் சேர்த்திருப்பதை நாம் காணலாம். விநாயகப் பெருமானின் இடர் களையும் தன்மை இங்கே விக்கின விநாயக என்ற தொடர் மூலம் உணர்த்தப்படுகின்றது. சிவபிரான் பால் ஆழ்ந்த காதல் கொண்ட தலைவி, பெருமான் தன்னை விட்டுப் பிரிந்து போனதை நினைத்து வருந்தும் பாடல்கள் கொண்ட பதிகம் இது. 

    கோவாய இந்திரன் உள்ளிட்டாராகக் குமரனும் விக்கின விநாயகன்னும்
    பூவாய பீடத்து மேல் அயனும் பூமி அளந்தானும் போற்றிசைப்பப்
    பாவாய இன்னிசைகள் பாடி ஆடிப் பாரிடமும் தாமும் பரந்து பற்றிப்
    பூவார்ந்த கொன்றை வண்டார்க்கப் புறம்பயம் நம்மூர் என்று போயினாரே

நாரையூர் பதிகத்தின் ஒரு பாடலில் (6.74.7) ஆறுமுகனோடு ஆனைமுகனுக்கு அப்பன் என்று கூறுகின்றார் .   

    தக்கனது வேள்வி கெடச் சாடினானைத் தலை கலனாப் பலியேற்ற
         தலைவன் தன்னை
    கொக்கரைச் சச்சரி வீணைப் பாணியானைக் கோணாகம்
         பூணாகக் கொண்டான்  தன்னை 
    அக்கினொடும் என்பணிந்த அழகன் தன்னை அறுமுகனோடு
         ஆனைமுகற்கு அப்பன் தன்னை
    நக்கனைக் வக்கரையானை நள்ளாற்றானை நாரையூர்
          நன்னகரில் கண்டேன் நானே

நாகைக் காரோணம் பதிகத்தின் ஒரு பாடலில் (7.46.9), அன்னை பார்வதி தேவி, விநாயகப் பெருமான் மற்றும் முருகப்பெருமான் ஆகியோரிடத்தில் எதுவும் வேண்டமாட்டேன் என்று சுந்தரர் கூறுகின்றார். தனது முடிவுக்கு காரணத்தையும் நகைச்சுவை தோன்ற இங்கே கூறுகின்றார். முருகனை சிறுவன் என்றும் கணபதியை உண்பதைத் தவிர வேறு ஒன்றும் அறியான் என்றும் நகைச்சுவை மிளிர கூறுவதை நாம் உணரலாம். மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் ஆட்சி செய்யும் உன்னிடம் தான் எதுவும் வேண்டுவேன் என்று பெருமானை நோக்கி இந்த பாடலில் கூறுகின்றார். நீர் எனக்கு ஏதும் தாராது இருந்தால், நான் உமது திருமேனியை விடாமல், கெட்டியாகப் பற்றிக் கொள்வேன். அதற்காக நீர் என்னை, கொடுமைக்காரன் என்று பழிக்கக் கூடாது என்றும் சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார். 

    மண்ணுலகும் விண்ணுலகும் உம்மதே ஆட்சி மலையரையன்
         பொற்பாவை  சிறுவனையும் தேறேன்
    எண்ணிலி உண் பெருவயிறன் கணபதி ஒன்று அறியான்
         எம்பெருமான் இது தகவோ இயம்பி அருள் செய்யீர்
    திண்ணென என்னுடன் விருத்தி தாரீரேயாகில் திருமேனி வருந்தவே
         வளைக்கின்றேன் நாளைக்
    கண்ணறையன் கொடும்பாடன் என்று உரைக்க வேண்டா கடல்
         நாகைக் காரோணம்  மேவி இருந்தீரே

நாகைக் காரோணம் பதிகத்தின் மற்றொரு பாடலில், பெருமானின் செல்வத்தின் மூன்றில் ஒரு பங்கு தனக்குத் தரவேண்டும் என்று சுந்தரர் கூறுவது, அவர் பெருந்தன்மையுடன், பெருமானின் குழந்தைகளான கணபதிக்கும் முருகனுக்கு ஆளுக்கு ஒவ்வொரு பங்கினை ஒதுக்கிய பின்னர் மீதம் இருக்கும் ஒரு பங்கினைக் கேட்கும் நயத்தை வெளிப்படுகின்றது. அவ்வாறு ஒரு கூறு தாராவிடில், பெருமான் அடியெடுத்து எங்கும் செல்லாதவாறு அவரது திருவடிகளை கெட்டியாக பிடித்துக் கொள்வேன் என்று பயமுறுத்துவதையும் நாம் உணரலாம். இந்த நிலை சுந்தரர் பெருமானிடம் வைத்திருந்த அளவு கடந்த தோழமையால் ஏற்பட்ட நிலையாகும். தன்னை அடிமையாக ஏற்றுக்கொண்ட பெருமான், தனது தேவைகளை நிறைவேற்றுவதை கடமையாகக் கொண்டு தான் கேட்பதை எல்லாம் தந்தருள வேண்டும் என்ற உரிமைக் குரல் இங்கே எழுப்பப்படுவதை நாம் காணலாம். 

    மாற்றம் மேல் ஒன்று உரையீர் வாளா நீர் இருந்தீர் வாழ்விப்பன்
         என ஆண்டீர் வழியடியேன் உமக்கு    
    ஆற்றவேல் திருவுடையீர் நல்கூர்ந்தீர் அல்லீர் அணியாரூர்
         புகப்பெய்த வருநிதியம்  அதனில்
    தோற்றமிகு முக்கூற்றில் ஒரு கூறு வேண்டும் தாரீரேல் ஒரு
         பொழுதும் அடியெடுக்கல் ஒட்டேன்
    காற்றனைய கடும் பரிமா ஏறுவது வேண்டும் கடல் நாகைக்
         காரோணம் மேவி இருந்தீரே

காஞ்சி மாநகரில் உள்ள ஓணகாந்தன்தளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (7.5.2) பாடலில்  சுந்தரர்  பெருமானுடன் தொடர்பு கொண்டுள்ள கங்கை நங்கை, பார்வதி தேவி, கணபதி, முருகன் ஆகியோர், எவ்வாறு தனக்கு உதவாமல் இருக்கின்றார்கள் என்று நகைச்சுவையாக கூறுகின்றார். இந்த பாடலிலும் முருகப் பெருமான் மற்றும் விநாயகர் ஆகிய இருவரும் குறிப்பிடப் படுகின்றனர். கங்கை, உமையம்மைக்கு அஞ்சி ஏதும் வாய் திறவாமல் இருப்பதாலும்,. கணபதி தனது வயிற்றினையே பிரதானமாக கருதுவதாலும், குமரன் சிறு பிள்ளையாக இருப்பதாலும், உமையம்மை கணவனின் கருத்தினை மீறி அடியார்க்கு அருள் செய்யாமல் இருப்பதாலும், தனக்கு அவர்கள் நால்வரும் உதவுவதில்லை என்று கூறும் சுந்தரர், பெருமானும் தனக்கு உதவவில்லை என்றால், எவ்வாறு அவருக்குத் தான் தொண்டு செய்வது என்ற கேள்வியை இங்கே கேட்கின்றார். கோல் தட்டி=ஆணையை மீறி;

    திங்கள் தங்கு சடையின் மேலோர் திரைகள் வந்து புரள வீசும்
    கங்கையாளேல் வாய் திறவாள் கணபதியேல் வயிறு தாரி
    அங்கை வேலோன் குமரன் பிள்ளை தேவியார் கோல் தட்டி ஆளார்
    உங்களுக்கு ஆட்செய்ய மாட்டோம் ஓணகாந்தன்தளி உளீரே

பொழிப்புரை:

நெருப்பு போன்று சிவந்த நிறத்தில் திருமேனியை உடைய பெருமான் சிவபெருமான்; அவர் வெண்மை நிறம் கொண்ட இடபத்தினைத் தனது வாகனமாகக் கொண்டவர்; தனது நெற்றியில் கண்ணை உடைய பெருமான், தந்தம் உடைய யானை முகத்தவனகிய கணபதிக்கு தந்தையாக விளங்குகின்றார்; அழகிய முருகப் பெருமான் விரும்பும் தந்தையாக விளங்கும் பெருமான், பாம்புகள் தனது திருமேனியின் மீது படர்ந்து அணிகலனாக விளங்கும் வண்ணம் தனது மேனியை காட்டுகின்றார். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த பெருமான் சிறந்த தவங்கள் புரியும் முனிவர்கள் வாழ்வதும் மலை போன்று உயர்ந்த மாட மாளிகைகள் உள்ளதும் ஆகிய அழகிய நகராம் புறவத்திற்கு (சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) அணி சேர்ப்பது போன்று உறைகின்றார்.      

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com