117. காடது அணிகலம் - பாடல் 11

அடியவர் எய்துவர்
117. காடது அணிகலம் - பாடல் 11

பாடல் 11:

    கையது வெண்குழை காதது சூலம் அமணர் புத்தர்
    எய்துவர் தம்மை அடியவர் எய்தார் ஓர் ஏனக்கொம்பு
    மெய்திகழ் கோவணம் பூண்பது உடுப்பது மேதகைய
    கொய்து அலர் பூம்பொழில் கொச்சையுள் மேவிய கொற்றவரே

விளக்கம்:

கையது சூலம், வெண்குழை காதது, அமணர் புத்தர் எய்தார், அடியவர் தம்மை எய்துவர், ஓர் ஏனக்கொம்பு மெய்திகழ் பூண்பது, கோவணம் உடுப்பது என மொழிகளை மாற்றி அமைத்து பொருள் கொள்ள வேண்டும். அடியவர் எய்துவர் என்று சம்பந்தர் இங்கே அடியார்களை பெருமான் சென்று அணுகுவதை குறிப்பிடுகின்றார். பெரிய புராணத்தில் வரும் பல நிகழ்ச்சிகள் வாயிலாக, பெருமான் எவ்வாறு மிகவும் எளியவராக சென்று தனது அடியார்களை நெருங்கி அவர்களது பெருமையினை உலகறியச் செய்தார் என்பதை காண்கின்றோம். மேதகைய=சிறப்பு வாய்ந்த; இந்த பாடலில் கொய்தலர் பூ என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். மலரும் நிலையில் உள்ள அரும்புகள் என்று இதற்கு பெரியோர்கள் விளக்கம் அளிக்கின்றனர். மலர்ந்த பூக்கள் என்றால் அவற்றில் உள்ள தேனைச் சுவைத்த வண்டுகளின் எச்சில் பட்டிருப்பதால், அத்தகைய பூக்களைத் தவிர்த்து மலரும் நிலையில் உள்ள அரும்புகள் பறித்து அவை மலர்ந்த பின்னர் அவற்றை இறைவனுக்கு படைப்பதை வழக்கமாக கொண்டிருந்த அடியார்கள் வாழ்ந்த தலம் சீர்காழி என்று உணர்த்தும் பொருட்டு, கொய்தலர் பூம்பொழில் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். கொய்தலர் பூம்பொழில் என்ற தொடருக்கு, பறிக்கப் பறிக்க மேலும் மேலும் மலர்களை அளிக்கும் வளம் வாய்ந்த சோலைகள் என்றும் பொருள் கூறுகின்றனர். கொற்றவன்=அரசன்;  

பொழிப்புரை: 

தனது கையினில் சூலம் ஏந்தியவராகவும் ஒரு காதினில் வெண்குழை அணிந்தவராகவும் காணப்படும் சிவபெருமான், புறச் சமயவாதிகளாகிய சமணர்களும் புத்தர்களும் அடைய முடியாத நிலையினில் உள்ள பெருமான், தனது அடியார்களை விருப்பத்துடன் சென்று அணுகி அருள் புரிகின்றார். அவர் தனது மார்பினில் பன்றிக் கொம்பினை ஆபரணமாக அணிந்துள்ளார்; அவர் ஆடையாக கொண்டுள்ளது கோவணம் ஆகும். சிறப்பு வாய்ந்ததும், மலரும் நிலையில் உள்ள அரும்புகள் நிறைந்த சோலைகள் உடையதும் ஆகிய கொச்சைவயம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரின் அரசனாக பெருமான் வீற்றிருக்கின்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com